மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் குரல் வாக்கெடுப்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தன. பிரதமர் மோடியை பேச வைக்க வேண்டும் என்பதற்காகவே கொண்டு வரப்பட்ட இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி மக்களவையில் இன்று பேசினார்.
மாலை 5 மணியளவில் பேசத் தொடங்கிய பிரதமர் சுமார் 2 மணி நேரமாக பாஜக அரசின் சாதனை குறித்தும், எதிர்க்கட்சிகளை விமர்சித்தும் மட்டுமே பேசி வந்தார்.
மணிப்பூர் குறித்து பிரதமர் பேசுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த எதிர்க்கட்சிகள், அவர் பேசாததால் ‘மணிப்பூர், மணிப்பூர்’ என முழக்கமிட்டனர். ஒரு கட்டத்தில் காத்திருந்த எதிர்க்கட்சி எம்.பிக்கள் மக்களவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
அதன் பின்னர் மணிப்பூர் குறித்து பேசிய மோடி, “மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா விரிவான விளக்கம் அளித்து விட்டார்” என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பு குறித்து பிரதமர் மோடி, “நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சிகள் சரியான தயாரிப்புடன் வரவில்லை. 5 ஆண்டுகள் கொடுத்தும் எதிர்க்கட்சிகள் தயாராகவில்லை. அடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திலாவது தயாரிப்புடன் வாருங்கள்” என்று விமர்சித்தார்.
பிரதமர் உரையை முடித்த பிறகு மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சிகள் அவையில் இல்லாததால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
மேலும், காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அவையில் கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் ஓம்பிர்லா ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை சஸ்பெண்ட செய்தார்.
மேலும் மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
அமித்ஷா ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டார்: மணிப்பூர் குறித்து பிரதமர்
இரண்டு மணி நேரமாக மணிப்பூர் குறித்து பேசாத பிரதமர்… எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!