மாணவர் பேரவைத் தேர்தல்கள் ஓர் மீள்பார்வை!

சிறப்புக் கட்டுரை தமிழகம்

நா.மணி

ஒரே வகுப்பில் படிக்கும் இருவருக்கு, ஒரு பாடத்தில், ஒருவருக்கு 23 அகமதிப்பீட்டு மதிப்பெண். மற்றொருவருக்கு 24 மதிப்பெண் வழங்கினார் ஒரு பேராசிரியர். 23 மதிப்பெண் பெற்ற மாணவர், சம்பந்தப்பட்ட பேராசிரியரை துறையில் சென்று சந்தித்தார். “அவருக்கு ஏன் 24 ? எனக்கு ஏன் சார் 23? “என்று கேட்டார்.‌ பேராசிரியர் பூசி மெழுகினார். அதற்கு அந்த மாணவர், “சார்! அவனது ‌டெஸ்ட் பேப்பர்சை எடுங்க. அவனது அசைன்மென்ட்டயும் எடுங்க. எதுல என்னவிட ஒரு மார்க் எச்சு வாங்கற அளவுக்கு எழுதியிருக்கானானு‌ காட்டுங்க.” என்றார் கறாராக. பேராசிரியர் அந்தக் கேள்வியையும் நேரிடையாக எதிர் கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, “நீ சரியாக வகுப்புக்கு வரல. அட்டண்டன்ஸ் குறைவு. அடுத்த முறை உன்னை பாத்துக்கிறேன்” என்றார்.

“சார்! எனக்கு ஏன் ஒரு மார்க் கொறைச்சு போட்டீங்கன்னு கேட்டா, அதற்கு கரெக்டா பதில் சொல்லுங்க. அதவிட்டுட்டு மெறட்டர வேலையெல்லாம் வச்சுக்காதீங்க. நான் படிச்சு எழுதியதுக்கு மார்க் வேணும். உங்க தயவில் எனக்கு மார்க் வேண்டாம். பட்டம் வேண்டாம்.‌ உங்க தயவில தான் எனக்கு டிகிரி கெடைக்கும்னா அது எனக்கு தேவையில்லை”. இத்தகைய உரையாடல்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கல்லூரியில், துறையில் சர்வசாதாரணமாக நடந்த உரையாடல்கள்.‌

அகமதிப்பீட்டு மதிப்பெண்ணை வைத்து மாணவர்களை மிரட்டும் போது, அல்லது அகமதிப்பீட்டு மதிப்பெண்ணை குறைத்து விடுவார்கள் என்று பயந்து நடுங்கும் போது, ஒரேயொரு அகமதிப்பீட்டு மதிப்பெண்ணுக்காக இப்படி எப்படி மாணவர்கள் சண்டை போட முடிந்தது? அப்போதெல்லாம் கல்லூரிப் பேரவைக்கும் வகுப்புகளுக்கும் ஜனநாயகப் பூர்வமான தேர்தல்கள் முறையாக ஒவ்வொரு ஆண்டும் நடந்தன. முறையாக மாணவப் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாணவர் பேரவைத் தேர்தல்கள் என்றாலே கலாட்டாக்களே நம் மனதில் நிரம்பி வழிகிறது. மாணவர்கள் நன்கு படிப்பார்கள். நன்கு போராட்டம் நடத்துவார்கள். ஒரே ஒரு மதிப்பெண்ணை கூட, இப்படி ஆசிரியர்களிடம் போராடிப் பெறுவார்கள் என்பதை அன்றைய ஆசிரியர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.

மாணவர்களின் சுயமரியாதை காத்தல்

முதுகலை பட்டம் படிக்கும் மாணவன் ஒருவனை ஒரு பேராசிரியர், ஏதோவொரு காரணத்தினால் ‘போடா’ என்று சொல்லி விட்டார். மறுநாள் காலையில், கல்லூரி மாணவர்கள் பெரும் போராட்டம்.‌ முதுகலை மாணவனை ‘போடா’ என்று சொன்ன ஆசிரியர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது மட்டுமே கோரிக்கை. அதெப்படி ஒரு முதுகலைப் பட்டம் படிக்கும் மாணவனை ஓர் ஆசிரியர் ‘டேய்’ என்று சொல்லலாம் எனக் கொந்தளித்தனர் மாணவர்கள். இன்று இவையெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத விசயமாக இருக்கிறது. ஒருபுறம் கல்லூரி பேரவைத் தேர்தல்கள் நடக்கும். வெள்ளிக்கிழமை என்றால் ‘மாஸ் கட்’ அடிப்பார்கள். மதியம் வகுப்புகள் பல நேரங்களில் நடைபெறாது. இது கலைக் கல்லூரி அல்ல. காலைக் கல்லூரி” எனச் சிரிப்பார்கள். மறுபுறம் நன்றாக படிக்கவும் செய்வார்கள். இன்னொருபுறம் முதுகலைப் பட்டம் படிக்கும் மாணவர்களுக்கு ஐந்து பாட வேலைகளும் இடைவெளி இல்லாமல் பாடம் நடக்கும்.

இளங்கலை பட்டம் படிக்கும் மாணவர்கள் ஈடுபடும் போராட்டத்தில் முதுகலைப் பட்டம் படிக்கும் மாணவர்கள் பங்கேற்றால், ‘என்னப்பா ! நீங்க என்ன யூஜி பசங்களா’ என்று பேராசிரியர்கள் கண்டிப்பார்கள். சிறப்பு வகுப்புகள் நடக்கும். இளங்கலை பட்டம் படிக்கும் மாணவர்களே முதுகலை பட்டம் படிக்கும் மாணவர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துவார்கள். பி.ஜி சார் என்றுதான் அழைப்பார்கள். இப்போது போல் அப்போது நெட்(National Eligibility Test) செட்(State Eligibility Test) தேர்வுகள் அல்லது முனைவர் பட்டம் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. முதுகலைப் பட்டம் முடித்த அடுத்த ஆண்டே அவர் உதவிப் பேராசிரியராக வந்து வகுப்பு எடுப்பார். முதுகலைப் பட்டப் படிப்பில் சேர்ந்தவுடன் ஒரு மாணவனின் நடை உடை பாவனை எல்லாம் மாறிவிடும். இவையும் தேர்தல் கலாச்சார பண்பாட்டு காலத்தில் முகிழ்த்து எழுந்தவையே.

தேசம் காக்கும் போராட்டங்கள்

1987 ஆம் ஆண்டில் கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுத ஒரு பாடத்திற்கு பத்து ரூபாய் தேர்வுக்கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அதனை 12 ரூபாய் என உயர்த்தியது பல்கலைக்கழகம். இரண்டு ரூபாய் கட்டண உயர்வுக்காக காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்றது. தீவிரவாதிகளால், பட்டப்பகலில், இராணுவ படைத் தளபதி ஜெனரல் ஏ.சி. வைத்யா ஆட்பட்டு , சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைக் கண்டித்து மாணவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர்.

எண்பதுகளின் இறுதியில் ஓர் சிறிய இந்தி எதிர்ப்புப் போராட்டம் எழுந்தது. அது பல்வேறு வடிவங்களில் நடைபெற்றது. பொதுத் துறை நிறுவனங்களின் பெயர்ப் பலகையின் இந்தி எழுத்துக்கள் அழிப்பு, பொதுத் துறை நிறுவனங்கள் முன்னால் ஆர்பாட்டம், ரயில் மறியல், சட்ட நகல் எரிப்பு எனப் பல வடிவங்கள் எடுத்தது அந்தப் போராட்டம். அந்தப் போராட்டங்களை ஒருங்கிணைத்த மாணவப் பொறுப்பாளர்கள், முன்னணியில் நின்று செயல்பட்ட மாணவர்கள், அமைதியாக இதனைப் பார்த்துக் கொண்டு இருந்த மாணவர்கள் என ஒவ்வொரு மாணவருக்கும் ஒருவகைப் படிப்பினையை அந்தப் போராட்டங்கள் கொடுத்தன. பாடங்களை கற்றுத் தந்தன. வெறும் இந்தி எதிர்ப்புப் போராட்டமாக மட்டும் அதனைக் கடந்து சென்றுவிடக் கூடாது.

மாணவர் பேரவையின் மகத்தான பணிகள்

கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தல்களை தவிர்க்க இயலாமல் நடத்தி வந்த கல்லூரி நிர்வாகங்கள், கல்லூரி வளாகத்தில் யாரை அழைக்க வேண்டும். யாரை அழைக்கக் கூடாது என்ற சார்பு இருந்தது. மாணவர் பேரவைத் தேர்தல்கள் இதனை கூட பல இடங்களில் தவிடுபொடி ஆக்கியது. ஒரு கல்லூரி நிர்வாகம், நீங்கள் யாரை வேண்டுமானாலும் அழைத்து வரலாம். ஆனால் கம்யூனிஸ்ட் தலைவர்களை மட்டும் அழைத்து வரக் கூடாது என்று கறாராக நடைமுறையை கையாண்டு வந்தது. ஒரு மாணவர் பேரவைத் தலைவர், பொறுப்பு ஏற்றதும், தா. பாண்டியனை அழைத்து வர வேண்டும் என்றனர். கல்லூரி நிர்வாகம் முடியவே முடியாது என்றது. நிர்வாகத்தின் எதிர்ப்பை மீறி, கல்லூரிப் பேரவைத் துவக்க விழாவிற்கு தா.பாண்டியன் வந்தார். ஆனால், கல்லூரி வளாகத்திற்குள் தா. பாண்டியன் அனுமதிக்கப்படவில்லை. கல்லூரி வாயிலில், சாலை ஓரத்தில், வாகனத்தில் நின்று பேசிவிட்டு சென்று விட்டார்.

அடுத்த ஆண்டு வெற்றி பெற்ற மாணவர் தலைவர், மீண்டும் தா. பாண்டியனை துவக்க விழாவிற்கே அழைத்து வர வேண்டும் என்று முடிவெடுத்தார். பழையபடியே நிர்வாகம் முடியாது என்றது. தற்போதைய மாணவர் பேரவைத் தலைவர், கல்லூரி நிர்வாகத்திடம், “இது மாணவர் பேரவை. மாணவர்களுக்கு யார் தேவையோ அவர்களை அழைத்து வருவோம். நிர்வாகத்தின் வசதிக்கு யாரையும் அழைத்து வர முடியாது. எங்கள் பேரவைக்கு, எங்களுக்கு யார் தேவையோ, அவர்களை கல்லூரியில் அனுமதிக்க முடியாது என்று கூறினால், எங்கள் பதில் இதுதான். கல்லூரி உங்களுடையது. மாணவர் பேரவை எங்களுடையது. நாங்கள் விரும்பும் மனிதரை அழைத்து வர இயலாது என்றால், விட்டு விடுகிறோம். ஆனால் இந்த ஆண்டு முழுவதும் ஒரே ஒரு மாணவர் கலந்து கொள்ளும் விழாவைக் கூட, அனுமதிக்க மாட்டோம். அதில் பங்குபெற மாட்டோம்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

கல்லூரி நிர்வாகம் பணிந்தது. “தா.பாண்டியனை அழைத்து வந்து விழாவை நடத்திக் கொள்ளுங்கள். ஆனால், நிர்வாகமோ முதல்வரோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார்கள். பெயருக்கு துணை முதல்வரை அனுப்பி வைக்கிறோம்” என்றனர். மாணவர் பேரவையினர் சம்மதம் தெரிவித்தனர். இந்தப் பின்னணியில் அன்று தா.பாண்டியன் அரசியல் கலப்பின்றி ஆற்றிய உரை, வரலாற்று சிறப்பு மிக்கது. இத்தனைக்கும், இந்த நிகழ்சிகளை ஏற்பாடு செய்தது அவர் சார்ந்த கட்சியின் மாணவர் பிரிவோ அல்லது இதர இடதுசாரி அரசியல் பின்னணி கொண்ட மாணவர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுமை திறன் வளர்ப்பு

மாணவர் பேரவையின் பொறுப்பிற்கு வருபவர்கள், யாரை அழைத்துக் கொண்டு வந்து விழா நடத்தலாம் என்று முடிவு செய்தாலும், அந்தப் பேச்சாளரை நேரில் சந்தித்து அழைப்பது முதல், விழா நிறைவுறும் வரை அனைத்துப் பணிகளையும் மாணவர்களே செய்தார்கள்.‌ ஒருவரை எப்படி அழைப்பது என்பது தொடங்கி, அழைப்பிதழ் அச்சடித்து விழா நடத்துவது வரை கற்றுக் கொள்ள பாடங்கள் இருந்தன. படிப்பினைகள் இருந்தன.‌இவை இன்றைய மாணவர்களுக்கு தேவையா? தேவையில்லையா? எங்கிருந்து இந்த அனுபவப் பாடங்களை தற்போதைய தலைமுறை பெற்றுக் கொள்ளும்?

அரசு மாணவர் விடுதிகளில் அவலம் குறைய காரணம்

கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் ஜனநாயக செயல்பாடுகள் கல்லூரியோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவர்கள் தங்கியிருந்த விடுதிகள், தங்கள் வாழிடம் எல்லாவற்றிலும் சிறிதாகவோ பெரிதாகவோ அது பிரதிபலித்தது. உதாரணமாக, அரசு மாணவர்கள் விடுதிகளில் தங்கியிருந்த மாணவர் மத்தியிலும், தேர்தல்களின் விளைவுகளான ஜனநாயக விழுமியங்கள் பிரதிபலிக்கும். விடுதிகளிலும் ஜனநாயக முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள். தலைவர், செயலாளர், உணவுத் துறை அமைச்சர் என்றெல்லாம் பொறுப்புகளை உருவாக்கி விடுதியை நிர்வகித்தார்கள்.

அப்பொழுதெல்லாம் அரசு மாணவர் விடுதிகளில் மிக மிக சொற்பமான தொகையே உணவு மானியமாக வழங்கப்படும். அதனை வைத்துக் கொண்டு ஓரளவுக்கு வயிறு நிரம்ப சாப்பிட வேண்டும். அதை சாத்தியம் ஆக்கியது, மாணவர் பேரவைத் தேர்தல்கள் பின்னணியே. விடுதிக் காப்பாளர்களை எதிர்த்து கேள்வி கேட்பது, போராடுவது, தவறுகளை சுட்டிக் காட்டுவது, தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வது, என எல்லாமே விடுதி மாணவர்கள், கல்லூரியில் கற்றுக் கொண்ட ஜனநாயக மாண்புகளே. மாணவர்களின் விழிப்புணர்வும் ஜனநாயக செயல்பாடுகளுமே அன்றைய காலகட்டத்தில், ஒரளவு வயிறு நிரம்ப விடுதி மாணவர்கள் சாப்பிட்ட காரணமாக அமைந்தது.

55 பேர் இருக்கும் ஓர் அரசு மாணவர் விடுதி என்று எடுத்துக் கொள்வோம். கல்லூரியில் விடுமுறை எத்தனை நாட்கள் என்பதைப் பொறுத்து, மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு விடுதியிலிருந்து சென்று வருவார்கள். சனி ஞாயிறு மட்டும் விடுமுறை எனில் சிலர் மட்டுமே வீட்டுக்கு சென்று வருவார்கள். மூன்று நாட்கள், நான்கு அல்லது ஒரு வாரம் எனில் பெரும் பகுதி மாணவர்கள் வீட்டிற்கு சென்று விடுவார்கள்.

ஆனால் எல்லா நாட்களுக்கும், எல்லா மாணவர்களுக்கும் வருகைப் பதிவு வைத்து, எல்லா மாணவர்களும் எல்லா நாட்களிலும் தங்கி இருப்பதாக கணக்குக் காட்டி, முழு ரேஷன் பொருட்களும் எடுத்துக் கொள்ளப்படும். மாணவர்களின் உண்மையான எண்ணிக்கையை பொறுத்து பொருட்களின் அளவைக் கூட்டிக் குறைத்து ஓரளவு வயிறு நிரம்பும் அளவுக்கு உணவு கொடுக்க காப்பாளர் ஏற்பாடு செய்வார்.‌ உண்மையான எண்ணிக்கை அளவுக்கு பொருட்கள் கொடுத்தால் பாதி வயிறு கூட நிறையாது.

இது, மாணவர்கள், காப்பாளர்கள், உயர் அதிகாரிகள் வரை எல்லோரும் அறிந்த உண்மை. எல்லா நாட்களிலும் வருகைப் பதிவு வைப்பது. மாதாந்திர ரேஷன் முழுவதையும் எடுத்துக் கொள்வது. அதில் மாணவர்களின் உணவு ஒதுக்கீட்டை காட்டிலும் கூடுதலாக உணவளிப்பது, என்ற புரிதலில், மாணவர்களின் விழிப்புணர்வும் ஜனநாயக செயல்பாடுகளும் இல்லாமல் இருந்திருந்தால், காப்பாளர்களும் அவர்களை அனுசரித்து செல்வோரும் மாணவர்கள் வயிற்றில் மண்ணைப் போட்டு அதிக இலாபம் ஈட்டி இருப்பார்கள்.‌ அதனை தடுத்து, ஒரளவு வயிறு நிரம்ப உண்டு படித்து முன்னேற காரணமாக அமைந்தது மாணவர்களின் ஜனநாயக செயல்பாடுகளுக்கு வித்திட்ட மாணவர் பேரவைத் தேர்தல்கள்.

அதற்கு ஒவ்வொரு பகுதியில் இருந்த விடுதியிலும் ஒரு வகை முறையை கையாண்டார்கள். மாணவர்களைக் கண்டால் விடுதிக் காப்பாளர்களுக்கு ஓர் அச்சம் இருந்தது. அது காப்பாளர்களின் கொள்ளையை தடுத்து நிறுத்தியது. அதுவே மாணவர்கள் செய்யும் தவறுகளை காப்பாளர்கள் தட்டிக் கேட்க இயலாமையின் காரணமாக அமைந்தது.

சமூகப் பார்வையும் சமூகத் திறன்களும்

 

மாணவர்களின் அரசியல் சார்பு நிலைகளுக்கு ஏற்ப, அவரவர் கட்சியில் அந்தந்த நகரத்தில் நடக்கும் கூட்டங்களில் கலந்து கொண்டு பேச வாய்ப்பு கிடைக்கும். பொதுக் கூட்டங்களை மாணவர்கள் இயக்கங்கள் சார்பில் நடத்தவும், அதற்கு தலைமை ஏற்கவும் கூட மாணவப் பருவத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. கூட்டத்திற்கான விளம்பர தட்டிகளில், மாணவர் பேரவைத் தலைவர் செயலாளர் பெயர்கள் இடம்பெரும். பொதுவாக மாணவப் பருவத்தில் பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ள இத்தகைய நடைமுறைகள் வழி வகுத்தது. ஆளுமைப் பண்புகளை வளர்க்க பயன்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் “அனைத்துக் கல்லூரி மாணவர் பேரவை” என்ற அமைப்புக்கள் செயல்பட்டது. அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர் பேரவை பொறுப்பாளர்கள் இதில் இடம் பெறுவார்கள். ஒருமித்த கருத்து எட்டப்படும் சமூக அரசியல் பிரச்சனைகளில் ஒன்றாய் ஒரே நாளில் போராட்டம் நடத்துவார்கள். பிரச்சனைகளின் தன்மையை பொறுத்து மாநில அளவிலும் இவை விரிவாக்கம் பெறும். மாணவப் பொறுப்பாளர்களுக்கு மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் தொடர்புகள் ஏற்படும். இவை அவர்களது பார்வையை விசாலமாக்கும். சமூக அரசியல் பொருளாதார அக்கறையை வளர்க்கும்.

அத்தகைய காத்திரமான மாணவர் பேரவைகள் தொடர்ந்து இயங்கி வந்திருந்தால் இன்றைய சமூக அரசியல் பொருளாதார சிக்கல்களில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்திருப்பார்கள் என்று கருதவும் இடமளிக்கிறது. வாலிபப் பருவத்தில் சமூக இயக்கங்களில் பங்கு பெற இயலாமல் போனதும் கூட ஒரு வகையில், இன்றைய இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் சுய அடையாளத்திற்கு ஏங்கி திசைமாறிப் போகின்றனரோ என்று ஐயம் கொள்ளவும் இடம் இருக்கிறது.

கல்லூரிப் பருவத்தில் ஜனநாயக செயல்பாடுகளில் பங்கு பெறும் மாணவர்கள், தனக்கு ஒரு வருமானச் சான்றிதழ் வேண்டும், சாதி சான்றிதழ் வேண்டும் என்றாலும் அவர்களாகவே சென்று இவற்றை விண்ணப்பம் செய்து பெறவும், அதற்காக அன்றைய காலகட்டத்தில் கேட்ட கையூட்டுக்கு எதிராக எதிர்த்து கேள்வி கேட்டு பணம் இன்றி அத்தகைய சான்றிதழ்களை பெற்றார்கள். உள்ளூர் கலாச்சார பண்பாட்டு விழாக்களில் முன்னனி பாத்திரங்கள் வகித்தனர். அது ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கும் சமூகத்திற்கும் பயனுள்ளதாக அமைந்தது. அத்தகைய இளைஞர்கள் வகுப்புவாத சக்திகளுக்கு இறையாகாமல் இருந்தனர்.

மாணவர் பேரவைத் தேர்தல்களின் விளைவுகள் ஒரு கல்லூரியோடு மட்டும் நின்றுவிடவில்லை. மாணவர்களின் சமூக அக்கறையை வளர்ப்பதில், பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றுவதில், நாட்டின் சமூக பொருளாதார அரசியல் பண்பாட்டு பிரச்சினைகளில் காத்திரமான பங்கு வகித்தது. இத்தகைய மாணவர்கள் இயக்கங்கள், அவர்களின் ஜனநாயக செயல்பாடுகள் ஏன் முடக்கப்பட்டது? “மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம். மாணவர் பேரவைத் தேர்தல்கள், மாணவர்களின் பொறுப்பின்மையே அதிகரிக்கிறது” இவ்வாறெல்லாம் இப்போதும் கூட பேசுகின்றனர். மாணவர்கள் மத்தியில் ஜனநாயக செயல்பாடுகளை நீக்கம் செய்தது, கல்வியின் தரம் அதிகரிக்க வேண்டும். மாணவர்களின் சிந்தனையை சிதறடிக்காமல் கல்விப் பயணத்தில் ஆற்றுப் படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, கல்வித் துறையில், கட்டற்ற லாபத்தை எதிர்நோக்கி நிகழ்ந்து வரும் தனியார்மயமே அடிப்படை.

கட்டுரையாளர் குறிப்பு

Student Council Elections A Review by Professor N Mani

நா. மணி

பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.‌

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பகடிவதை அன்றும் இன்றும்!

மதிப்பீட்டு உத்திகளில் எப்போது மாற்றம் வரப் போகிறது?-3

மதிப்பீட்டு உத்திகளில் எப்போது மாற்றம் வரப் போகிறது?-2

மதிப்பீட்டு உத்திகளில் எப்போது மாற்றம் வரப் போகிறது?-1

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *