நா.மணி
தேர்வுகளுக்கென்று தனியாக சிரத்தை எடுத்து தயார் செய்வதில்லை. முன்பு போல் புத்தகங்கள் வாங்குவதில்லை. தேர்வு எழுதியதை வைத்து ஒரு பாடம் புரிந்ததா இல்லையா என்று கண்டுபிடிக்க முடிவதில்லை. தேர்வுக்கு முந்தைய நாள் கூட கிடைக்கும் வேலைக்கு செல்கின்றனர். தேர்வுக்கான விடைகளை, அலைபேசி வழியாக, தேர்வுக்கு முந்தைய நாள் தேடுகின்றனர் பகிர்ந்து கொள்கிறார்கள். என்ன எழுதுகின்றனர். ஏதோ எழுதுகின்றனர்.
அவர்கள் மனதிற்குள்,அந்த நேரத்தில், என்னவெல்லாம் தோன்றுகிறதோ, அவற்றை எழுதி வைக்கின்றனர். எதுவும் தெரியாவிட்டால், கேள்விகளையே, திருப்பித் திருப்பி, விடைகளைப் போல எழுதி வைக்கின்றனர். கட்டுரையின் முன்பகுதியில் குறிப்பிட்டது போல், 100க்கு 80 விழுக்காட்டிற்கு மேல் தேர்ச்சி அடைந்து விடுகின்றனர். படித்து படித்து திருத்தும் ஆசிரியர்களும் இல்லை. படித்துவிட்டு வந்து மாய்ந்து மாய்ந்து எழுதும் மாணவர்களும் இப்பொழுது பெரும்பாலும் இல்லை.
முந்தைய நடைமுறைகள் வழக்கொழிந்து விட்டன:
ஒரு பாடத்தை, புத்தகத்தை பார்த்து படிப்பது, தெரியாத ஆங்கில வார்த்தைகளை குறித்துக்கொண்டே வருவது, அகராதியின் துணை கொண்டு, அதற்கு பொருள் விளக்கம் தேடுதல், மீண்டும் ஒரு முறை, அந்தப் பாடத்தை படிப்பது புரிந்து கொள்வது, அதனை சுருக்கி, ஒரு கட்டுரையாக நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்வது. இவ்வாறு எழுதியவற்றை தொகுத்து வைத்துக்கொண்டு, தேர்வுக்காக படித்தல் என்ற பழைய முறைமை, கலை அறிவியல் கல்லூரிகளில் படித்த மாணவர்களிடம் வழக்கொழிந்து விட்டது, என்றே குறிப்பிடலாம்.
இன்றைய எதார்த்தங்கள்
“நீங்கள் என்ன படித்து திருத்துவதில்லை?” என்று ஆசிரியை பார்த்து கேட்டால், “பையங்க யாரும் படித்து எழுதுவது இல்லை. இதப் பாருங்க, இந்த பேப்பர்ல என்ன இருக்கு? படிச்சு திருத்தினால் என்ன மார்க் போடுவது?” என்று பல ஆசிரியர்கள் எதிர் கேள்வி கேட்கிறார்கள். “படித்து திருத்தினால், நூற்றுக்கு 70 பேர் பெயில் ஆகி விடுவார்கள்” , என்றும் கூறுகின்றனர். மாணவர்கள் ஏதோ படித்துவிட்டு வந்து எழுதுகிறார்கள். ஆசிரியர்கள் ஒத்தை ரெட்டை பிடிப்பது போல, ஏதோ ஒரு மதிப்பெண்ணை வழங்குகிறார்கள். இந்த ஆபத்து நிறைந்த விளையாட்டுக்கு பெயர் மதிப்பீடு என்று அழைக்கப்படுகிறது.
இந்த அதி முக்கிய பாதிப்பில், உடனடி பாதிப்புகள் என்ன? நன்கு படித்து விட்டு வந்து எழுதும் மாணவர்கள், 80, 90 மதிப்பெண்கள் வரும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு 50 முதல் அதிகபட்சம் 70 மதிப்பெண்களே கிடைக்கிறது. எதுவும் படிக்காமல், ஏதோ எழுதி விட்டு வரும் மாணவர்கள், அதாவது 10, 20 மதிப்பெண்களே பெற வாய்ப்பு உள்ள மாணவர்களுக்கு, குறைந்த பட்சம் 40 முதல் 45 மதிப்பெண்கள் கிடைத்து விடுகிறது. நன்கு படித்து எழுதிய மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் கிடைப்பதில்லை. விளைவை, மிக மிக சுருக்கமாக கூறினால், கல்லூரிக் கல்வியில், கலை அறிவியல் புலத்தில் மதிப்பீடு வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகி விட்டது.
இதே நிலை தொடர வேண்டுமா?:
இந்த கட்டுரையின் முதல் பாகத்தில், திருச்சி பேராசிரியர் குறிப்பிட்ட குற்றச்சாட்டின் வலு குறைந்து விட்டது. மதிப்பீட்டு உத்திகளின் வழியே, ஏழை, எளிய, பழங்குடிகள் பட்டியல் சமூகத்தினர், மிகவும் பின்தங்கிய சமூகத்தினரின் குழந்தைகளை, பெருவாரியாக தோல்வி அடைய வைத்து, கற்றலில் இருந்து இடை நிறுத்துவது வெகுவாக குறைந்துவிட்டது.
கல்லூரி நுழையும் மாணவர் ஒரு பட்டத்துடன் எளிதாக வெளியேறுவது பெரும்பாலும் சாத்தியமாகி உள்ளது. பட்டப்படிப்பு படிக்கும்போது, பெரிய அளவில் திறன்களை வளர்த்துக் கொள்ளாவிட்டாலும், கல்லூரியை விட்டு வெளியே வந்த பின்னர், திறன்களை வளர்த்துக் கொண்டு, தனக்கான வேலை வாய்ப்பை வாழ்வாதார யுக்திகளை தேடிக்கொள்ளட்டும் என்று விட்டுவிடலாமா? இந்த மதிப்பீட்டு நிலைமைகள் இப்படியே தொடரட்டும் என்று அமைதியாக இருந்து விடலாமா? ஆசிரியர்களும், கற்றல் கற்பித்தலுக்காக பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை.
சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை, என்று கண்டுகொள்ளாமல் இருந்து விடலாமா? என்ற கேள்விகள் மிகவும் அடிப்படையானது. எதிர்கால தலைமுறை நலன் சார்ந்தவை. இதனை, ஆட்சியாளர்கள், கல்வியாளர்கள், கல்வி நலனில் அக்கறை உள்ளவர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். சிந்திக்க வேண்டும். செயலாற்ற திட்டமிட வேண்டும். இந்த திட்டமிடுதலில், முதல் படியாக, மாணவர்கள் முன்பு போல் இல்லை. மாணவர்கள் இதை படிக்க முடியவில்லை. இவர்களால் இது முடியாது, என்ற எண்ணத்தை ஆசிரியர்கள் முற்றாக கைவிட வேண்டும். மாணவர்கள் படிக்கவே வந்திருக்கிறார்கள்.
உரிய முறையில், உரிய கற்றல் கற்பித்தல் யுத்திகளை பயன்படுத்தினால், மாணவர்கள் படிப்பார்கள். மாணவர்கள் சரியில்லை. அவர்களுக்கு ஏற்ற, அவர்களுக்கு தக்க முறையில், பாடத்திட்டத்தை, மதிப்பீட்டு முறைகளை மாற்றி விடலாம் என்பதெல்லாம், செருப்புக்குத் தக்கவாறு, காலை செதுக்கும் கலை.
தேர்வுகள் எதற்கு மதிப்பீடுகள் எதற்கு?:
1)ஒரு மாணவன் கற்றுக் கொடுத்ததை உள்வாங்கிக் கொண்டு இருக்கிறானா? புரிந்து கொண்டிருக்கிறானா? எந்த அளவுக்கு தெரிந்து கொண்டு இருக்கிறான்? அவனது கற்றல் அடைவுகள் என்னவாக இருக்கிறது? என்ன காரியத்திற்காக சொல்லிக் கொடுக்கிறோமோ அந்த இலக்கை நோக்கி மாணவன் பயணித்திருக்கிறானா? என்று அறிந்து கொள்வது.
2)மாணவனது கற்றல் அடைவுகளை ஒட்டி, கல்வி நிறுவனங்கள், கல்வி அமைப்புகள் ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை, புரிந்து கொள்ள வேண்டியவை, அபிவிருத்தி செய்ய வேண்டியது, மேலும் பாடத்திட்டத்தை, கலைத்திட்டத்தை செழுமைப்படுத்த வேண்டிய வழிமுறைகள், ஆகியவற்றை கண்டடைவதற்கு மதிப்பீடுகள் பெருமளவு பயன்படுகின்றன.
3) கல்வி, கற்றல் கற்பித்தல், என்று வரும்போது, கல்வியின் தரம், கல்வியின் வழி ஆற்றல் படுத்துதல் என, இதில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும், ஒரு பங்கு இருக்கிறது. இதனை இந்தப் பொறுப்பை சரிவர செய்கிறோமோ? என்று ஆராய்ந்து அறிய, மதிப்பீடுகள் ஆகச்சிறந்த கருவிகளாக இருக்கிறது.
4)ஒரு பட்டப் படிப்பு, அதனை வழங்கி வழங்கும் கல்வி நிறுவனம், அதன் தரத்தை, அது பராமரிக்க, தொடர்ந்து நிலை நிறுத்த, அதிகரித்துக் கொண்டே செல்ல, மதிப்பீடுகள் அவசியம் .
5)மாணவர்களை பற்றிய மதிப்பீடு, அவர்களது நிலை, ஆகியவற்றை தெரிந்தால் மட்டுமே, கல்வி முகமைகள், கல்வி நிறுவனங்கள் அதற்கு ஏற்றவாறு செலவு செய்ய முடியும். நிதி ஒதுக்கீடு செய்ய இயலும்.
6)ஒரு கல்வி நிறுவனத்தின் தரம் என்பது, நிலையானது அல்ல. தொடர் மாற்றங்களுக்கு உட்பட்டது. முன்னேற்றம் காண வேண்டும். சவால்களை சந்திக்க வேண்டும். இதற்கும் மதிப்பீட்டுகள் பயன்படுகிறது.
7)மதிப்பீடு வழியாகவே ஒப்பீடுகள் சாத்தியமாகிறது. அத்தகைய ஒப்பீடுகள் வழியாகவே, எது சிறந்தது? என்ற நிலையை அடையாளம் காண முடிகிறது. மாணவர்களை மதிப்பிடுவதும், அதன் அடிப்படையில் பின்னூட்டங்கள் பெருவதும், கற்றல் கற்பித்தல் அனுபவங்களை பகிர்வதும், கல்வியின் தரத்தையும், பயன்பாட்டையும், மேலும் மேலும் அதிகரிக்க உதவுகிறது.
8) மதிப்பீடுகள் வழியாகவே, கற்றல் கற்பித்தல் யுத்திகள் செய்ய வேண்டிய மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும். அத்தகைய மாற்றங்கள், அத்துறையில் நிலவும் பல போதாமைகளை செழுமைப்படுத்தும்.
9) தொடர்ச்சியான ஆய்வுகளும், தேவைப்படுகிறது. இந்த ஆய்வுகளை, மதிப்பீடுகள் உந்தித் தள்ளுகிறது. சுருக்கமாக கூறினால், கல்வியின் ஒட்டுமொத்த தரம் கல்வியின், மாண்புகள், ஆகியவற்றை உயர்த்த, மதிப்பீடுகள் ஒரு கருவியாக பயன்படுகிறது.
10) மதிப்பீடுகளை சரியாக பயன்படுத்தினால், மேம்படுத்தினால், இன்னும் தீர்க்கமாக யோசித்தால், மாணவர்கள் மேலும் மேலும் மேம்பட, அதனை செழுமைப்படுத்தவும், நிச்சயமாக இவை பயன்படும்.
மதிப்பீடுகளின் மேம்பட்ட பயன்பாடுகள்:
மாணவர்களின் திறன்களை வளர்க்கவும், போட்டி மிகுந்த உலகில் தன்னை தகுதிப்படுத்திக் கொள்ளவும், மதிப்பீடுகள் பயன்படும். மாணவர்களின் படைப்பூக்கத்தை அதிகரிக்கச் செய்யவும், வாழ்வியல் திறன்களை உயர்த்திக் கொள்ளவும், தலைமை பண்புகளை மேம்படுத்தவும், இந்த மதிப்பீடுகளை பயன்படுத்த இயலும்.
கல்வியில் மதிப்பீடுகளின் தேவை, அவசியம், இவ்வளவு இருக்கும்போது, அவை தற்போதைய மதிப்பீடுகளில் எங்கேயும் காணக் கிடைக்கிறதா? தற்போதைய மதிப்பீடு முறைக்கும், மதிப்பீடுகளின் நோக்கங்களையும், ஒப்பிடும் பொழுது, இரண்டுக்கும் முற்றிலும் தொடர்பற்ற நிலையை காண முடியும். மதிப்பீட்டின் நோக்கங்கள், இலக்குகள், தற்போதைய நிலையில் பெரும் பாகுபாடுகள் நிலவி வருவது கண் கூடு. உடனடியாக, இதில் மாற்றங்களை நிகழ்த்தி விட முடியாது. உடனடியாக, செய்ய வேண்டிய பல பணிகள் உள்ளன. அவற்றை சற்று பரிசீலனை செய்வோம்.
உடனடி பணிகள்
1)மதிப்பீடுகளில் மாற்றம் வர, அடிப்படை தேவை கற்றல் மொழி. கற்றல் மொழி என்பது, மிக முக்கியமானது. மாணவன் 12 ஆம் வகுப்பு வரை எந்த மொழியில் பயில்கிறாரோ, அதே மொழியில் உயர் கல்வி கற்கும் சுதந்திரம் மாணவர்களுக்கு வேண்டும். கல்வி நிறுவனங்கள், ‘இது தன்னாட்சி கல்லூரி’ ‘எங்கள் கல்லூரிக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்து கௌரவம் இருக்கிறது’ ‘எங்கள் கல்லூரியின் கற்றல் மொழி ஆங்கிலம்’ எனவே, ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும், என்று நிர்பந்தம் செய்தல் கூடாது. எந்த மொழியில் ஒரு மாணவரால் கற்றுக் கொள்ளவும், எழுதவும் கைகூடுமா, அந்த மொழியில் எழுத அனுமதிக்க வேண்டும்.
2) ஒரு மாணவன் என்ன எழுதுகிறானோ, அவை எல்லாவற்றையும் படித்து, உற்றுநோக்கி, ஆசிரியர்கள் மதிப்பீடு செய்வதாக தேர்வுகள் இருக்க வேண்டும். இரண்டு மதிப்பெண் கேள்வி, ஐந்து, பத்து மதிப்பெண் கேள்வி, என்று கேள்வித்தாளில் கேள்விகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம் .ஒவ்வொரு கேள்விக்கும் ஏற்ப, இத்தனை வரிகள் தான் எழுத வேண்டும். இத்தனை பக்கங்கள் தான் எழுத வேண்டும், என வரையறை செய்து கொடுக்க வேண்டும். அரைப்பக்கம் தான் எழுத வேண்டும் எனில், அரை பக்கத்தோடு கோடு போட்டு விட வேண்டும். பெரிய கேள்விகளுக்கும் பக்கங்கள் கறாராக நிர்ணிப்பதிலும் கோடு போடுவதிலும் அதற்கு மேல் எழுதக்கூடாது என்ற விதிமுறை அவசியமாகிறது.
3) அகமதிப்பீட்டு முறை, அதன் மீதான பார்வை, ஒரு சடங்கைப் போல் மாறிவிட்டது. ஒரு பாடத்தில், ஐந்து பகுதியில் இருக்கின்றன வைத்துக் கொள்வோம். ஐந்து பகுதிகளிலும் தனித்தனியாகவும், ஒட்டுமொத்தமாகவும், ஒரு முழுமையான மதிப்பீடு செய்யப்பட வேண்டும். இவை தற்போது “உண்டு ஆனால் இல்லை” என்று அளவில் நடைமுறை ஆக்கம் செய்யப்படுகிறது. அகமதிப்பிற்கான தேர்வுகள் உடனடியாக மதிப்பீடு செய்யப்பட்டு, மாணவர்களுக்கு உடனடியாக திருப்பி தரப்பட வேண்டும். குறைகள், தவறுகள், புரிந்து கொண்டு சரி செய்ய வாய்ப்பு வசதிகள் வழங்க வேண்டும். தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 40 விழுக்காடு எனில் மாணவனின் கற்றல் அடைவுகள் குறைந்தபட்சம் அதில் மூன்றில் இரண்டு பங்கேணும் இருத்தல் வேண்டும்.
4) குறைந்த கற்றல் அடைவுகளை எட்ட இயலாத மாணவர்களுக்கு, அதற்கான காரணங்களை கண்டறிந்து, உண்மையில் அவனது திறன்கள் மேம்பட வழிவகை செய்யப்பட வேண்டும்.
5)கல்லூரிகளில் கற்பித்தல், தேர்வு, மதிப்பீடு என்பது எந்திரத்தனமாகவும், எந்திர கதியிலும் நடத்தப்படுகிறது. வகுப்பறைக்கு வெளியே, எத்தனை மணி நேரம் ஒரு மாணவனால் கற்றலுக்காக செலவழிக்க முடியும் என்பதை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். வழி காட்ட வேண்டும். நாள் குறிப்பு ஒன்றை பராமரிக்கும்படி மாணவர்களுக்கு வழி காட்டலாம்.
6)ஒவ்வொரு நாளும் வகுப்பறைக்கு வெளியே எத்தனை மணி நேரம் கற்றலுக்காக ஒதுக்கீடு செய்ய முடிந்தது என்பதை பதிவு செய்யும்படி கூறலாம். ஒவ்வொரு நாளும், “இன்று புதிதாய் என்ன கற்றுக் கொண்டேன்” என்பதை நாட்குறிப்பில் பதிவு செய்யும் படி கூறலாம். அதன் வழியாக, மாணவர்கள் அவரது திறன்களை அவர்களே அளந்து பார்க்க உதவலாம்.
7)நல்ல ஆளுமையின் நூல்களை பயிற்றுவிக்கலாம். பரிந்துரை செய்யலாம்.
8) ஒவ்வொரு வகுப்பாசிரியரும், தொடர் இடைவெளியில் பெற்றோரை சந்திக்க ஏற்பாடு செய்யலாம். வருகைப்பதிவு, மதிப்பெண், வகுப்பறை நடத்தை இப்படி மதிப்பீடுகளை பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளலாம்.
9)”விரிவுரை- தேர்வு- மதிப்பீடு”என்று இல்லாமல், பல வடிவங்களில் இதனை விஸ்தரிக்கலாம். மதிப்பீட்டு உத்திகளின், மதிப்பீட்டின் வழி மாண்புகளை வளர்த்தெடுத்தல் என்பதில், நாம் தொடக்க நிலையிலேயே நிற்கிறோம். உயர் கல்வி நாம் உச்சம் பெற நாம் இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டும். அப்படி ஓர் பயணம் இருக்கிறது என்பதை தெரியாமல் இருப்பதே இன்றைய பெரும் வேதனைகளில் ஒன்று.
கட்டுரையாளர் குறிப்பு
நா. மணி
பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு
மதிப்பீட்டு உத்திகளில் எப்போது மாற்றம் வரப் போகிறது – 1
மதிப்பீட்டு உத்திகளில் எப்போது மாற்றம் வரப் போகிறது – 2