சிறப்புக் கட்டுரை: நான் கண்ட ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை!

Published On:

| By Balaji

பேராசிரியர் நா.மணி

எனது நண்பர் ஒருவருக்கு அரசு உதவிபெறும் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் வேலை கிடைக்க வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. 1993ஆம் ஆண்டுக்கு முன்னர் அவர் எம்ஃபில் ஆய்வுப் பட்டம் பெற்று இருப்பின், காரியம் எளிதாகக் கைகூடியிருக்கும். ஆனால், அவரோ 1994இல் மேற்குறிப்பிட்ட பட்டம் பெற்றவராக இருந்தார். 1990ஆம் ஆண்டு தொடங்கி மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து விதிவிலக்கு அளித்துக்கொண்டே வந்தது பல்கலைக்கழக மானியக் குழு. இன்னும் ஓராண்டு விலக்கு கிடைக்கும் என்று நினைத்த எங்கள் எண்ணம் ஈடேறவில்லை. “எம்ஃபில் மற்றும் பிஹெச்டி படித்தவர்களுக்குப் பேராசிரியர் தகுதித் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு வேண்டும்” என தமிழ்நாடு ஆய்வு மாணவர்கள் சங்கம் என்ற அமைப்பு தொடர்ந்து அரசிடம் முறையீடு செய்து வந்தது. அந்த சங்கத்திடம் நாங்களும் சென்று முறையிட்டோம். அவர்களோ, டெல்லி சென்று, டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் பேரவை மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் பேரவை போன்ற அமைப்புகளை அணுகி முறையிடுமாறு ஆலோசனை கூறினர்.

சச்சின் முதன்முதலாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புயலைக் கிளப்பிக் கொண்டிருந்த நேரம் அது. டெல்லி சென்ற நான், முதலில் டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் பேரவைத் தலைவர் பங்கஜ் குமார் கார்க் என்பவரைச் சந்தித்து கோரிக்கையை விளக்கிக் கூறினேன். அவரும் “ஆமாம், இந்தப் பேராசிரியர் தகுதித் தேர்வு ஆராய்ச்சி பட்டம் படித்த மாணவர்களுக்குப் பெரும் இடையூறு. இணைந்து போராடலாம் வாருங்கள்” என்று உறுதி அளித்தார். எங்கள் கோரிக்கைக்கு முழு ஆதரவு தெரிவித்தார். மிகுந்த நம்பிக்கையோடு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் பேரவைப் பொதுச் செயலாளர் அனில் குமாரைச் சந்தித்து எங்கள் கோரிக்கையும் டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் பேரவை அளித்த ஆதரவையும் குறித்து அவரிடம் எடுத்துக் கூறினேன். இணைந்து போராட்டம் செய்ய வேண்டிய அவசியம் குறித்துப் பேசினேன்.

எங்கள் மாணவர் தலைவர் பிகாரைச் சேர்ந்தவர். சொந்த ஊர் சென்று இருக்கிறார். திரும்ப மூன்று நாட்கள் ஆகும். நான்காம் நாள் அவர் வந்தவுடன் எங்கள் மாணவர்கள் பேரவையின் செயற்குழுக் கூட்டம் கூட இருக்கிறது. அதில் உங்கள் வேண்டுகோளை முன்வைக்கிறேன். அன்றே முடிவு தெரிந்துவிடும். சென்று வாருங்கள்” என்றார். எழுந்து நின்ற என்னை எங்கு தங்கி உள்ளீர்கள் என்றார். ரயில் நிலையம் அருகில் ஒரு தங்கும் விடுதியில் என்றேன். “உங்கள் கோரிக்கைக்குப் பதில் அளிக்க நாங்கள்தான் காலதாமதம் செய்கிறோம். அதற்காக நீங்கள் ஏன் செலவு செய்து அறை எடுத்து தங்க வேண்டும்? அறையைக் காலி செய்து விட்டு வாருங்கள். எங்களோடு விடுதியில் தங்கிக் கொள்ளலாம்” என்றார். “பரவாயில்லை” என்று நான் மறுத்து கூறியதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த நான்கு நாட்களும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகம் முழுவதும் சுற்றிப் பார்த்தேன்.

ஒன்பது மாடிக் கட்டடத்தில் அமைந்துள்ள நூலகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஆய்வு இதழ்கள், லட்சக்கணக்கான நூல்கள் ஆகியவற்றை கண்டு பிரமித்து போனேன். தமிழில் கூட நிறைய ஆய்விதழ்கள் தினசரி நாளிதழ்கள் அங்கு இருந்தன. ஒவ்வொரு நாளும் சமகால அரசியல், பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு பிரச்சினைகளைக் கையில் எடுத்து ஆங்காங்கே கருத்தரங்கம் நடந்தது. அந்தந்தப் புலத்தில் தேசிய அளவில் நிபுணத்துவம் மிக்கவர்கள் கருத்தாளர்களாக அழைத்து வரப்பட்டனர். மாணவர்கள் ஆர்வமுடன் ஒவ்வொன்றிலும் பங்கு பெற்றனர். வாதப் பிரதிவாதங்கள் நடந்தது. இதன் வழியாகத் தங்கள் ஞானத்தை வா என்று கூவி பெருக்கிக்கொண்டனர். அங்கு படித்துக்கொண்டிருந்த பல தமிழ்நாட்டு மாணவர்களைச் சந்தித்தேன். அப்போது, எழுத்துத் தேர்வு மூலம் பேராசிரியர்களைத் தேர்வு செய்யும் நடைமுறை தமிழ்நாட்டிலிருந்தது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சற்றேறக்குறைய எல்லா மாணவர்களும் அந்தத் தேர்வில் தேர்ச்சி அடைந்து, நேர்முகத் தேர்வுக்குக் காத்துக் கொண்டு இருந்தனர். பேராசிரியர் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு நடத்தி பேராசிரியர்களைத் தேர்வு செய்தல், பேராசிரியர் தகுதித் தேர்வு என்ற எந்த நடைமுறையும் அவர்களை பாதிக்கவில்லை. மிக இயல்பாக அந்தத் தேர்வுகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் பெற்று திறனையும் பெற்றிருந்தனர். கணினிப் பயன்பாடு பெருமளவு வெ‌குஜனப் பயன்பாடாக இல்லாத நேரம் அது. விடுதி மாணவர்கள் விடிய விடிய படிப்பதும் விவாதிப்பதும் மிக இயல்பாக நடைபெறுவதை அங்கு பார்த்தேன்.

ஒவ்வோர் அரசியல் கட்சியையும் சார்ந்த மாணவர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் உயிர்த் துடிப்புடன் பணியாற்றி வந்தனர். ஒருநாள் முழுவதும் பத்திரிகை, தொலைக்காட்சி வழியாகச் சேகரித்த செய்திகளை தங்கள் மாணவர் சங்கத்தின் புரிதலுக்கும் அரசியல் நிலைப்பாடுகளுக்கும் ஏற்ப ஒவ்வொரு நாளும் ஒரு செய்தி சுற்றறிக்கை தயார் செய்தனர். அதிகாலையில் எழுந்து, அவற்றை தட்டச்சு செய்து ரோனியோ தாள் கொண்டு உருட்டி எடுத்து அனைத்து மாணவர் விடுதிகளிலும் காலை உணவின்போதே கொண்டுசென்று வரிசையாக அடுக்கி வைத்து விடுவார்கள். சிற்றுண்டிக்கு வரும் ஒவ்வொரு மாணவரும் உணவைப் பெற்றுக்கொண்டு, ஒவ்வொரு மாணவர் சங்கத்தின் சுற்றறிக்கை தாள்களையும் கையில் எடுத்துக்கொண்டு செல்வார்கள். சிற்றுண்டி முடிவதற்குள் பலர் வாசித்து முடித்து விடுவார்கள். கையில் எடுத்துக்கொண்டு சென்று முழுமையாகப் படித்தும் கருத்துகளை முழுமையாக உள்வாங்கிக் கொள்வார்கள். இத்தகைய உயிரோட்டமான செயல்பாடுகள் வழியாக மாணவர்கள் சமகால அரசியல் பொருளாதார சமூக பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த அறிவை பெற்றுக்கொண்டார்கள்.

ஒவ்வொரு பிரச்சினையிலும் உள்ள ஆழ அகலத்தை இந்தச் செயல்பாட்டின் வழி தெரிந்துகொள்ள உதவியாக இருந்தது. அவர்கள் நடத்திய வாதப் பிரதிவாதங்கள் மாணவர்கள் சங்கங்களின் பார்வைகள் அவர்களை நுட்பமாக வளர்த்தெடுத்தது. நான் அங்கு தங்கியிருந்த கடைசி நாளில் காலையில் ஒவ்வொரு சங்கத்தின் செயல்பாட்டாளனையும் ஒரு துரிதம் கட்டி இழுத்துக்கொண்டு இருந்தது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் பேரவை கட்டடமே ஒரு தனித் துறை போல் இயங்கிக்கொண்டு இருந்தது. அங்கு மாணவப் பொறுப்பாளர்களுக்கு என்று தனி அறைகள் இருந்தன. மாணவர்கள் பேரவைக்கு என ஊழியர்கள்கூட ஒதுக்கப்பட்டிருந்தனர். அந்த அலுவலகத்துக்கு வெளியே ஒவ்வோர் அரசியல் கட்சி சார்ந்த மாணவர்கள் அமைப்பின் செயற்குழுவும் கூடி இருந்தது. டெல்லி நகர அல்லது அகில இந்தியப் பொறுப்பாளர்கள்கூட அவர்களுடன் குழுமியிருந்தனர்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் பேரவை முன்வைத்த கூட்டப் பொருள் மீது அந்தந்த சங்கம் சார்பாகக் கலந்து கொள்ளும் பொறுப்பாளர்களுக்கு (பல்கலைக்கழக மாணவர்கள் பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள்) தரவுகளைத் தயார் செய்து கொடுத்துக்கொண்டு இருந்தனர். சம்பந்தப்பட்ட மாணவர்கள் சிரமேற்கொண்டு எல்லாவற்றையும் கையேட்டில் குறித்துக்கொண்டு இருந்தார்கள். என்னோடு மூன்று நாளும் அறையில் தங்கியிருந்த மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளருக்கு அன்று என்னைப் பார்த்து முகம் சிரிக்கக்கூட நேரம் இல்லை. பேரவைக் கூட்டத்தில் விவாதங்கள் அனல் பறப்பது வெளியில் உள்ளோருக்கு நன்கு கேட்டது.

மதியம் இரண்டு மணி இருக்கும். கூட்டம் முடிந்த பிறகு வெளியேவந்த பொதுச் செயலாளர் அனில் குமார், “சார் நீங்கள் கொடுத்த கடிதம் கூட்டப் பொருளில் வைத்துப் பேசப்பட்டது. நாளுக்கு நாள் உயர்கல்வி தரம் குறைந்து வருவதை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் பேரவை கவலையோடு பார்க்கிறது. அதைச் சரி செய்ய அரசு எடுத்துள்ள முயற்சிக்குப் பேரவை உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் பேரவையின் ஏகோபித்த முடிவு. எனவே கல்லூரி பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பணிக்கு இத்தகைய (NET) தகுதித் தேர்வு தேவை என்று எங்கள் பேரவை கருதுகிறது. தங்கள் கோரிக்கையை எங்களால் ஏற்க இயலாது” என்று குறிப்பிட்டார்.

“உங்கள் முயற்சிக்கு எங்கள் நன்றி. ஆனால், டெல்லி பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் பேரவை பொறுப்பாளர்கள் முழு ஒத்துழைப்பு நல்கினார்களே” என்று சுட்டிக் காட்டினேன். “அவர்கள் ஆதரவு தருவார்கள். அதோடு அந்தப் பிரச்சினையை கைவிட்டு விடுவார்கள். நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்து போராட்டம் நடத்தி கோரிக்கையை வென்று எடுத்துக் கொடுத்தால் அதை அவர்கள் அனுபவித்துக் கொள்வார்கள். நாங்கள் அப்படியல்ல. இந்தக் கோரிக்கையைச் சரி என்று இப்போது ஏற்றுக்கொண்டால் இனி நீங்கள் இங்கு வரத் தேவையில்லை. இந்தக் கோரிக்கை இன்று முதல் எங்கள் கோரிக்கை ஆகிவிடும். நாங்களே போராடி வென்றெடுத்து விடுவோம்” என்றார்.

பேராசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு கிடைத்தால் அங்கு இருக்கும் அனைத்து மாணவர்களும் பயன்பெறுவார்கள். ஆனால், அவர்கள் அதை விரும்பவில்லை. உயர் கல்வியின் தரத்தின் மீது 1996ஆம் ஆண்டிலேயே அவர்களுக்கு உயரிய பார்வை இருந்தது. நாட்டின் நலன் மீது அக்கறை இருந்தது. தங்களுக்குக் கிடைக்கும் சலுகைகளுக்காக நாட்டின் உயர் கல்வி நலனை காவு கொடுக்க அவர்கள் விரும்பவில்லை. அந்த மாணவர்களையும் மாணவர் சங்கத்தின் பொறுப்பாளர்களையும் பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருந்தது. பெருமையாக இருந்தது. அந்த மாணவர்கள் பேரவை கொடுத்த உற்சாகம், அவர்களின் மனத் திண்மை எனது நண்பரையும் பேராசிரியர் தகுதித் தேர்வை ஒரே மூச்சில் படித்து எழுதி வெற்றி பெற உந்து சக்தியாக இருந்தது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் உயிர் துடிப்பில் அதில் படித்து வெளிவரும் மாணவர்கள் திறனில் தகுதியில் திறமையில் பல்கலைக்கழகத்தின் பெயரின் புகழில் மாணவர்கள் பேரவை வைக்கும் முக்கியப் பங்கு இருப்பதாக உணர்ந்தேன். தற்போது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் குறித்து வரும் செய்திகள் மனத்தை வாட்டுகிறது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் பேரவையின் உயிர் துடிப்பை அதன் குரல்வளையே நசுக்கத் துடிக்கும் ஆட்சியாளர்களைக் கண்டு மனம் கொதிக்கிறது. அன்றைய உயிர் துடிப்பு மிக்க செயல்பாடுகளும் அந்த அனுபவங்களும் நெஞ்சில் நிழலாடிக் கொண்டே இருக்கிறது.

**கட்டுரையாளர்**: பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share