டபுள் டக்கர் ரசிகர்களைக் கவர்ந்ததா? – திரை விமர்சனம்!

சினிமா

தமிழ் திரைப்படங்களில் அனிமேஷன் இடம் பெறுவதென்பது அரிதாகச் சில நேரங்களில் நிகழும். போதுமான பட்ஜெட் இல்லாமல் அக்காட்சிகள் நம்மைச் சோதிப்பதாக அமையும். அப்படிப்பட்ட சூழலில், படம் முழுக்க இரண்டு அனிமேஷன் பாத்திரங்கள் இடம்பெறுவது நிச்சயமாக வித்தியாசமாக அமையும்.

அந்த நம்பிக்கையோடு களமிறங்கியிருக்கிறது ‘டபுள் டக்கர்’ படக்குழு. இதன் ட்ரெய்லர் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் இப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. இதனை மீரா மஹதி இயக்கியிருக்கிறார். ’டபுள் டக்கர்’ எப்படிப்பட்ட அனுபவத்தை வழங்குகிறது? என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

மீண்டுமொரு வாழ்க்கை

ஊருக்கு வெளியே இருக்கும் பெரிய வீடொன்றில் வசித்து வருகிறார் அரவிந்த் (தீரஜ்). சிறு வயதில் நேரிட்ட விபத்தொன்றில் அவர் தனது பெற்றோரை இழந்துவிடுகிறார். அப்போது அவரது முகத்தில் ஏற்பட்ட காயம், அவருக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் அளவுக்கு வடுவாக மாறுகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கார்த்திக் எனும் சிறுவனோடு நெருங்கிப் பழகுகிறார் அரவிந்த். அப்போதும் கூட தனது முகத்தைக் காட்டாமல் இருப்பதற்காக முகமூடி அணிந்து கொள்பவர்.

ஒருநாள் அரவிந்தின் முகத்தை கார்த்திக் பார்க்க நேர்கிறது. அப்போது, அவர் பயந்து ஓடி விடுகிறார். போலவே, தன்னிடம் அன்பு காட்டும் கல்லூரித் தோழி பாருவிடம் (ஸ்மிருதி வெங்கட்) காதலைத் தெரிவிக்கிறார். அவரும் முடிவு ஏதும் சொல்லாமல் சென்றுவிடுகிறார்.

Thalapathy 69: மொத்தம் 4 ஹீரோயின்கள்… விஜயுடன் ஜோடி போடப்போவது யார்?

இரண்டு நிகழ்வுகளும் அரவிந்தைக் கடுமையாகப் பாதிக்கின்றன. ‘தனக்கென்று யாரும் இல்லை’ என்ற வேதனையில் தவிக்கும் அவர், அதையடுத்து தற்கொலை செய்யும் முடிவை நோக்கி நகர்கிறார். அந்த தகவலை ‘வீடியோ கால்’ மூலமாகப் பாருவுக்குத் தெரிவிக்கிறார்.

அந்த நேரத்தில், அரவிந்தின் வீட்டை அபகரிக்கும் நோக்கில் ராக்கெட் ரெட்டியின் (சுனில்) அடியாளான மர்டர் மணி (ஷரா) அங்கு வருகிறார். தூக்கிலிட்டுச் சாகும் எண்ணத்தைச் செயல்படுத்தும் அரவிந்த், அப்போது மொபைலில் பாருவின் பெயரைப் பார்த்ததும் அதிர்கிறார். கயிறைப் பிடித்து இழுக்கிறார்.

ஆண் தேவதைகள் 

கீழே இருக்கும் கட்டிலில் விழுகிறார். ஆனாலும், அவரது உயிர் பறிபோகிறது. ரைட் (காளி வெங்கட்), லெப்ட் (முனீஸ்காந்த்) என்ற இரண்டு ஆண் தேவதைகளே அதற்குக் காரணம். அவர்களைக் கண்டதும், முதலில் பயந்தோடுகிறார் அரவிந்த்.

தன் வீட்டுக்கு வரும் பாருவைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்து, அவரை நோக்கி ஓடுகிறார். ஆனால், அவரைக் கட்டி அணைக்க முடிவதில்லை. அப்போதுதான், தனது உடல் தனியே கிடப்பதைக் காண்கிறார் அரவிந்த். பாரு தன்னைக் காதலிப்பதாகச் சொல்வதைக் கேட்டுக் கதறுகிறார்.

ரைட், லெப்ட் இருவரிடம் சென்று, ‘பழைய வாழ்க்கையைத் தந்துவிடுங்கள்’ என்று கேட்கிறார். அதனை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். ‘எங்களது தலைவரான சென்டர் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்’ என்கின்றனர்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, நெடுங்காலம் உயிர் வாழத் தகுதியான அரவிந்தின் உயிரைப் பறித்து தவறிழைத்ததை இருவரும் அறிகின்றனர். தவறுக்குத் தீர்வு காண, அரவிந்தின் உடலைக் காணச் செல்கின்றனர்.

அதற்குள், அதனைக் கடத்திச் சென்றுவிடுகிறார் மர்டர் மணி. அவரிடம் இருந்து அதனைப் பிடுங்க முயற்சிப்பதற்குள் பல களேபரங்கள் நிகழ்கின்றன. இடைப்பட்ட காலத்தில், ஏற்கனவே இறந்துபோன ராஜா என்பவரது உடலில் அரவிந்தின் ஆன்மாவை ரைட்டும் லெப்ட்டும் செலுத்துகின்றனர்.

Good Bad Ugly: இணைந்த தெலுங்கு நடிகர்… ஷூட்டிங் எப்போன்னு பாருங்க!

ராஜாவின் தோற்றத்தில் பாருவைச் சந்திக்கச் செல்லும் அரவிந்த், நீண்ட பிரயத்தனங்களுக்குப் பிறகு அவரிடம் உண்மையை உரைக்கிறார். அதற்குள் பாருவின் பெரியப்பாவுக்கு (மன்சூர் அலிகான்), அவர் அரவிந்தைக் காதலிக்கும் விஷயம் தெரிய வருகிறது. இன்னொரு புறம், அவரது ஆட்களில் ஒருவரே ராஜாவைக் கொலை செய்தார் என்பதும் நமக்குச் சொல்லப்படுகிறது.

அனைத்தும் மொத்தமாகச் சேரும்போது, நமக்குள் பல கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு இயக்குனர் சரியாக விடையளித்தாரா? ரைட், லெப்ட் உதவியோடு மீண்டும் பழைய வாழ்க்கையை அரவிந்த் அடைந்தாரா என்று சொல்கிறது இந்த ‘டபுள் டக்கர்’.

’என்னடா கலர் கலரா ரீல் விடுற’ என்று கவுண்டமணி, செந்திலைப் பார்த்துக் கேட்பது போல அமைந்துள்ளது இதன் திரைக்கதை. ஆனால், தத்தித்தத்தி தாவும் அத்திரைக்கதையில் ஆங்காங்கே நிறைந்திருக்கும் நகைச்சுவை பொருட்காட்சி ராட்டினத்தில் ஏறிச் சுற்றிய உணர்வை ஏற்படுத்துகிறது.

வித்தியாசமான அனுபவம்

தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், மன்சூர் அலிகான், ராம்தாஸ், காளி வெங்கட், சுனில் ரெட்டி, ஆர்ஜே ஷரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

ராஜா, அரவிந்த் என்று இரு வேறு பாத்திரங்களில் நடித்துள்ளார் தீரஜ். அப்பாத்திரங்கள் ஒரேமாதிரியாகத் தென்படாமல் இருப்பதே, அவர் காட்டியிருக்கும் பிரயத்தனத்திற்குச் சான்று.
ஸ்மிருதி வெங்கட் இப்படத்தின் நாயகி. ஆனால், அவருக்குப் பெரிதாகக் காட்சிகள் இல்லை.

இன்ஸ்பெக்டராக வரும் கோவை சரளா, கேங்க்ஸ்டராக வரும் மன்சூர் அலிகான், மருத்துவமனையில் இருந்து தப்பிய மனநோயாளியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் இரண்டொரு காட்சிகளில் தோன்றியிருக்கின்றனர். அக்காட்சிகள் வெடிச்சிரிப்பினை வழங்கியிருப்பது ஆறுதல் தரும் விஷயம்.

காளி வெங்கட், முனீஸ்காந்த் ஒரு காட்சியில் தோன்றியிருக்கின்றனர். மற்றபடி படம் முழுக்க அவர்களது குரல்கள் ஒலிக்கின்றன. அந்த அனிமேஷன் பாத்திரங்களை வடிவமைத்திருக்கும் விதம் ‘சூப்பர்ப்’ ரகம். உண்மையில், அதுவே இப்படத்தின் யுஎஸ்பியும் கூட.

‘குறி வச்சாச்சு’ வேட்டையன் வெளியீடு குறித்து லைகா அறிவிப்பு!

ஆங்கிலம் உள்ளிட்ட அயல்மொழித் திரைப்படங்களில் இந்த உத்தி பயன்படுத்தப்பட்டபோதும், இந்தியாவில் அது பெரியளவில் வெற்றியைப் பெறவில்லை என்ற தகவலை இந்த இடத்தில் நாம் நினைவுகூற வேண்டும்.

குறிப்பாக ‘விக்ரம்’ கமல் மற்றும் சூர்யா, ‘கபாலி’ ரஜினி தொடங்கி ‘காந்தாரா’ கிளைமேக்ஸில் வரும் கடவுள் பாத்திரம் வரை அனைத்தையும் அனிமேஷனில் ஆங்காங்கே புகுத்திச் சிரிக்க வைத்திருப்பது அருமை. அந்த எழுத்தாக்கத்தினைத் தனியாகப் பாராட்ட வேண்டும்.

இன்னும் சுனில் ரெட்டி, கருணாகரன், யாஷிகா ஆனந்த், ஷரா என்று இப்படத்தில் வரும் அனைவருமே ஏதோ ஒரு வகையில் நம்மைச் சிரிக்க வைக்கின்றனர். இதில் வில்லனாக மன்சூர் அலிகான், அவரது அடியாட்களாக டெடி கோகுல், ஜார்ஜ் விஜய் வந்து போயிருக்கின்றனர். அவர்களும் கூடச் சில இடங்களில் கிச்சுகிச்சு மூட்டுகின்றனர்.

ஒவ்வொரு காட்சியையும் வித்தியாசமாகக் காட்ட முயற்சித்திருக்கும் ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரன், திரையில் பரபரப்பு மிளிர்வதற்காக காட்சிகளைக் கறாராக ‘கட்’ செய்திருக்கும் படத்தொகுப்பாளர் வெற்றிவேல், வித்தியாசமான களத்தைக் காணச் செய்திருக்கும் கலை இயக்குனர் சுப்பிரமணிய சுரேஷ் என்று பலரும் இப்படத்திற்காக உழைப்பைக் கொட்டியிருக்கின்றனர்.

ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, டிஐ, விஎஃப்எக்ஸ் உட்படச் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே இயக்குனர் திரையில் காட்ட விரும்பிய படைப்புக்குத் தம்மால் முடிந்த பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.

நகைச்சுவையைப் பாத்திரங்கள், காட்சியாக்கம் வழியே சரியாக வெளிப்படுத்தினாலும், ரசிகர்களை அது சென்றடையப் பெருமளவில் பின்னணி இசையே உதவும். அந்த வகையில், வித்யாசாகரின் நீண்ட நெடிய அனுபவம் இப்படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறது.

’கினி கினி கின்கினி’, ‘டூப்பு டப்பா டக்கரு’ பாடல்கள் நாம் ரசித்த ‘கிரேஸி ப்ராக்’ பாடலை நினைவூட்டுகின்றன. காட்சிகள் தரும் பரபரப்பை மட்டுப்படுத்தி நிதானத்தை விதைக்கிறது ’டாலுமா’ பாடல்.

இவை போதாதென்று தான் ‘வில்லாதி வில்லன்’ படத்தில் தந்த ‘தீம்தலக்கடி தில்லாலே’ பாடலையும் இதில் ஒலிக்கச் செய்திருக்கிறார் வித்யா சாகர். இப்படம் அவரது பெயரைத் தொடர்ந்து திரையில் பார்க்க வகை செய்திருக்கிறது.

இயக்குனர் மீரா மஹதி உடன் இணைந்து எழுத்தாக்கத்தில் பங்கேற்றிருக்கிறார் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் சந்துரு. ’லாஜிக் இல்ல ஒன்லி மேஜிக்’ என்ற சிந்தனையுடன் நாயகன், நாயகி முதல் அனைத்து பாத்திரங்களையும் வடிவமைத்துள்ளனர்.

மனிதரின் பாவ புண்ணியங்கள் அடிப்படையில் மரணக் கணக்கினை வாசிக்கும் லெப்ட், ரைட், சென்டர் போன்ற பாத்திரங்களும் கூட அவற்றில் அடங்குகின்றன.

அந்த பாத்திரங்களை வார்த்துவிட்டு, குறிப்பிட்ட காட்சிகளில் அவை வந்து போகுமாறு செய்திருப்பது திரைக்கதையில் தொய்வினை உணரவிடாமல் தடுக்கிறது. அதுவே, வித்தியாசமான காட்சியனுபவத்தையும் நமக்குத் தருகிறது.

குறைகள் உண்டா?

படத்தின் தொடக்கத்திலேயே நாயகன், நாயகி காதல் ‘சீரியஸ்’ தொனியில் காட்டப்படுகிறது. அதன்பிறகு லெப்ட், ரைட் என்ற அனிமேஷன் பாத்திரங்கள் திரையில் தோன்றுகின்றன. அந்தக் காட்சிகள் ஒவ்வாமையை ஏற்படுத்தவில்லை என்றால், ஒருவரால் கிளைமேக்ஸ் வரை இப்படத்தினை ரசித்துச் சிரிக்க முடியும்.

அதற்கான அத்தனை சாத்தியங்களையும் தந்திருக்கிறது ‘டபுள் டக்கர்’ படக்குழு. அதற்காகவே இயக்குனர் மீரா மஹதியைத் தனியாகப் பாராட்டலாம். நாயகனின் தனிமையை ஓரிரு வசனங்களில் விளக்குவதும், நாயகியின் பின்னணி பற்றித் திரைக்கதையில் குறிப்பிடாததும் இப்படத்தில் சொல்லத்தக்க குறைகள்.

அவை தாண்டி ரொம்பவும் லாஜிக் சார்ந்த கேள்விகளை இக்கதையில் எழுப்பக் கூடாது. அதனைச் செய்யாமல் ‘கமெண்ட்’ அடிப்பவர்களை விமர்சிக்கும் வகையில், ’இன்னுமாடா இந்த படத்துல லாஜிக்கை எதிர்பார்க்குறீங்க’ என்ற வசனத்தையும் தந்திருக்கிறார் இயக்குனர் மீரா மஹதி.

அவ்வளவு ஏன்? தமிழ் திரைப்படங்களில் பாடல்கள் இடம்பெறும் சூழலைக் கிண்டலடிக்கும் ‘தமிழ் டாக்கீஸ்’ மாறனை அனிமேஷனில் காட்டி, ஒரு காதல் பாடலை ஓட விட்டிருக்கிறார்.
அப்படிப்பட்ட புத்திசாலித்தனமான உத்திகள் தான், ’மொக்கை’ என்று ரசிகர்கள் தவிர்க்கும் வாய்ப்புகளைக் கொண்ட இப்படைப்பின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சிருக்கிறது.

இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு, தெளிவான ‘டீட்டெய்லிங்’ உடன் இதன் திரைக்கதையை ஆக்கியிருந்தால் ’சூப்பரான காமெடிப் படம்’ என்று சொல்லியிருப்போம். அது நிகழாமல் போனதால், ஒருமுறை பார்க்கலாம் என்ற அந்தஸ்தை எட்டியிருக்கிறது இந்த டபுள் டக்கர்’!

மொத்தத்தில் இந்த டபுள் டக்கர் ‘நோ லாஜிக் ஒன்லி காமெடி மேஜிக்’

-உதய் பாடகலிங்கம்  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரம்ஜான் புது வெண்பாக்கள்!

”கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் என்பது நகைச்சுவை” : அண்ணாமலை

ஜே.பி.நட்டாவின் ரோடு ஷோவுக்கு அனுமதி… ஆனால்… : நீதிமன்றம் உத்தரவு!

Rain Update: இடி, மின்னலோட… ஆறு நாளைக்கு ‘மழையும்’ உண்டு மக்களே!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *