– ஸ்ரீராம் சர்மா
ஏக இறையாம் சுவனத்துக் கோர்பதியாம்
பார உலகாளும் பெம்மானாம் – சாரத்தைக்
கொள்ளும் குணமுள்ள நல்லோனை கண்டாரவர்
(ஸல்)லல்லாஹு அலை(ஹி)வசல்ல மே !
*******
ஹீரா குகைகண்டீர்; ஞானக் கதீஜாவை
வேராக்கிக் கொண்டீர்; விடைகண்டீர் – வேதத்தை
அல்லாஹ் இறக்கத் தாங்கினீர்; தந்தீரே
(ஸல்)லல்லாஹு அலை(ஹி)வசல்ல மே !
*******
அன்புதா னேசொன்னீர்; அவ்வல் பிறைநாளில்
திங்கட் கிழமை மறைந்தீர் – செம்புலத்து
நன்னீராய் நின்றீரே; வென்றீரே; ஓஎங்கள்
(ஸல்)லல்லாஹு அலை(ஹி)வசல்ல மே !
*******
நீங்கள் வகுத்தவழி வேறு; வழிவழியாய்
வாங்க கிடைத்தவரோ வேறாக்கி – மார்கமதை
அல்லுசில் லாக்கி மடைமாற்றி வைத்தாரே
(ஸல்)லல்லாஹு அலை(ஹி)வசல்ல மே !
*******
இஸ்ரேல் ஒருபுறமாய் செல்ல; எதிர்கணைகள்
புஸ்ஸுபுஸ் சென்றே விரைந்தெழுதே – அல்ரஃபா
சொல்லறியா பச்சைக் குழந்தை பதருதையே
(ஸல்)லல்லாஹு அலை(ஹி)வசல்ல மே !
*******
அன்பழிய லாச்சே; மதியழியப் பாரெல்லாம்
வன்புணர லாச்சே; வழக்காச்சே – குண்டுகள்
எங்கும் பொழிய இருளாச்சே; ஐயொஎன்
(ஸல்)லல்லாஹு அலை(ஹி)வசல்ல மே !
*******
எல்லோரும் ஓர்வழியாய் உணரத் தலைப்பட்டு
அன்பே வழியென்று வாழணுமே – செல்லாத
பொல்லா மதமேறப் பலனுண்டோ என்னருமை
(ஸல்)லல்லாஹு அலை(ஹி)வசல்ல மே !
*******
சீனம் பகையாம்; கடலோரம் ஆபத்தாம்
கோண இலங்கை கொடிவழியாம் – வேகமாய்
இந்தியம் மேலேற என்னவழி சொல்லுமையே
ஸல்லல்லா(ஹு) அலை(ஹி) வசல்ல மே !
*******
இந்து மதத்தான் எளியேனாம் என்கணக்கில்
நன்கு தெரியும்நீர் இங்குள்ளீர் – அந்தவிதம்
கொண்டே அழைக்கின்றேன் வந்தருள வேணுமையே
(ஸல்)லல்லாஹு அலை(ஹி)வசல்ல மே !
*******
நாயகமே உம்மில் எனக்குரிமை உண்டல்லோ
ஆதலினால் கேட்பேன் அருள்செய்வீர் – பூதலத்தில்
கொல்லும் அணுகுண்டை கொன்றொழிக்க வேணுமே
(ஸல்)லல்லாஹு அலை(ஹி)வசல்ல மே !
*******
இலக்கணம் அறியா சிறுபிள்ளை நானே
பிலாக்கணம் வைத்தேன்; பிழைத்தேன் – அளப்பரிய
அன்பதனைக் கொண்ட அருளார ரேவாரும்
(ஸல்)லல்லாஹு அலை(ஹி)வசல்ல மே !
*******
ரம்ஜான் பிறைதோன்றும் நேரம் அகிலத்தில்
அஞ்சேல் எனும்சேதி கேட்கணுமே – அன்பென்னும்
நல்லூள் குறிசொல்ல வந்தருள வேணுமையே
ஸல்லல்லா(ஹு) அலை(ஹி) வசல்ல மே !
*******
பிறைதோன்றும் நேரம் உலகோருக் கெல்லாம்
குறையேதும் இல்லாது போக – மறையோதும்
நல்லோரை எல்லாம் நலமாக்கி வைத்தருளே
(ஸல்)லல்லாஹு அலை(ஹி)வசல்ல மே !
*******
பேரன்புமிக்க
இஸ்லாமிய பெருமக்கள்
அனைவருக்கும்
எனதெளிய
ரமலான் நல் வாழ்த்துகள் !!
கட்டுரையாளர் குறிப்பு
வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர்.
300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜே.பி.நட்டாவின் ரோடு ஷோவுக்கு அனுமதி… ஆனால்… : நீதிமன்றம் உத்தரவு!
Rain Update: இடி, மின்னலோட… ஆறு நாளைக்கு ‘மழையும்’ உண்டு மக்களே!