ஜே.பி.நட்டாவின் ரோடு ஷோவுக்கு அனுமதி… ஆனால்… : நீதிமன்றம் உத்தரவு!

அரசியல்

பாஜக தேசிய தலைவர் நட்டாவின் ரோடு ஷோவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியது.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக ஜே.பி.நட்டா தமிழ்நாட்டுக்கு வருகைத் தந்தார். இன்று (ஏப்ரல் 7) சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். கரூரில் பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து ஜே.பி.நட்டா பிரச்சாரம் செய்தார். அங்கிருந்து விருதுநகர் தொகுதி திருமங்கலத்துக்கு சென்ற அவர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

இதனிடையே திருச்சியில் காந்தி மார்க்கெட் முதல் பெரியகடை வீதி வழியாக மலைகோட்டை வரை ஜே.பி.நட்டா ரோடுஷோ நடந்த பாஜக தலைமை திட்டமிட்டு, போலீசாரிடம் அனுமதி கேட்டது.

ஆனால் அதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. நேற்று இரவு வரை திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜகவினர் காத்திருந்தனர். அப்போது இந்த வழிக்கு பதில் மாற்றுப்பாதையை தேர்ந்தெடுக்குமாறு போலீசார் பாஜகவினருக்கு அறிவுறுத்தினர்.

இந்நிலையில் நட்டாவின் ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டு பாஜக நிர்வாகி ராஜசேகரன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “இன்று மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை ‘ரோடு ஷோ’ நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு போலீசாரிடம் முறையாக அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை.

பிரசாரத்துக்காக பயன்படுத்தப்படும் Isuzu goods வாகனம் நிரந்தரமாக பதிவு செய்யாமல் இருப்பதாக கூறி அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். இந்த வாகனம் கடந்த மார்ச் 18-ம் தேதிதான் வாங்கப்பட்டது. இதனை கருத்தில் கொள்ளாமல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து மலைக்கோட்டை வரை ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு அவசர வழக்காக விடுமுறை தினமான இன்று நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில் குமார் ஆஜரானார்.

அவர், “பாஜகவினர் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ள பாதை மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பாதை. அந்த பகுதியில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அந்த வழியில் பல்வேறு மதவழிப்பாட்டுத் தலங்களும் உள்ளன. எனவே அந்த பகுதியில் அனுமதி வழங்க முடியாது” என்று வாதிட்டார்.

கண்ணப்பா ஹோட்டல் முதல் இஎஸ்ஐ மருத்துவமனை வரை மாற்று பாதையில் ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி முரளிசங்கர், ஜே.பி.நட்டாவின் வாகனப் பேரணிக்கு மாற்றுப் பாதையில் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். கண்ணப்பா ஹோட்டல் முதல் இஎஸ்ஐ மருத்துவமனை வரை 1.5 கி.மீ. தூரத்துக்கு மாலை 4 மணி முதல் 6 மணி வரை வாகனப் பேரணி நடத்த அனுமதி அளித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

Rain Update: இடி, மின்னலோட… ஆறு நாளைக்கு ‘மழையும்’ உண்டு மக்களே!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் : திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார் ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *