விமர்சனம்: யாதும் ஊரே யாவரும் கேளிர்!

சினிமா

நாடற்றவனின் குரல்

ஒரு படம் என்ன வகைமையின் கீழ் உருவாக்கப்படுகிறது என்பதும், அது எப்படிப்பட்ட எதிர்பார்ப்பினை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது என்பதும் அதன் வெற்றியைத் தீர்மானிக்கும். சில நேரங்களில் டைட்டில், போஸ்டர் வடிவமைப்பு, ஸ்டில்கள், படத்தில் பணியாற்றியவர்கள் அளிக்கும் பேட்டிகள் மக்கள் மத்தியில் ஒரு பிம்பத்தை உருவாக்கும். அதற்குப் பொருத்தமாகவோ, அதைவிட மேலானதாகவோ இல்லாமல் வேறொரு திசையில் திரைக்கதை பாய்ந்தால் அவ்வளவுதான். அந்தப் படமே அதளபாதாளத்திற்குத் தானாகப் பயணப்பட்டுவிடும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ அப்படியொரு உதாரணமாகிவிட்டதே என்று வருத்தப்பட வேண்டியிருக்கிறது.

ஒரு அகதியின் வாழ்க்கை!

‘யா.ஊ.யா.கே.’ திரைக்கதையின் தொடக்கத்தில் ஒரு சிறுவன் இசைக்கல்வி பயில லண்டனுக்குச் செல்லத் தயாராவது காட்டப்படுகிறது. அது, ஈழத்தமிழர்கள் வாழ்ந்த பகுதி எனத் திரையில் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள ஒரு காவல்நிலையத்தில் அகதிகளாக வந்தவர்களை போலீசார் விசாரிப்பதும் ஒரு பெண்ணை அவமரியாதையாக நடத்துவதும் அதற்கடுத்த காட்சியாக விரிகிறது. இவ்விரு காட்சிகளுக்குப் பிறகு, கொடைக்கானல் மலைச்சரிவில் பயணம் மேற்கொள்ளும் நாயக பாத்திரம் திரையில் தோன்றுகிறது.

புனிதன் (விஜய் சேதுபதி) எனும் நபர், தற்செயலாக ஜெஸ்ஸி (மதுரா) எனும் பிரிட்டன் இசைக்கலைஞரைச் சந்திக்கிறார். அப்போது, அவர்கள் நிற்குமிடத்தில் நிலச்சரிவு ஏற்படுகிறது. அதிலிருந்து ஜெஸ்ஸியைக் காப்பாற்றுகிறார் புனிதன். அதன் தொடர்ச்சியாக, ஜெஸ்ஸி உடன் சேர்ந்து கொடைக்கானலில் இருக்கும் ஒரு தேவாலயத்திற்குச் செல்கிறார் புனிதன். அங்கிருக்கும் பங்குத்தந்தை சேவியர் (விவேக்) உட்படப் பலரும், ஜெஸ்ஸியின் இசைக்குழுவைச் சேர்ந்தவர் என்றே புனிதனைக் கருதுகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானலில் நிகழ்ந்த நிலச்சரிவில் தன் தந்தையை (மோகன் ராஜா) பலி கொடுத்தவர் மெட்டில்டா (மேகா ஆகாஷ்). தந்தையின் நினைவுகளோடு, இசையே தனது வாழ்க்கை என்றிருக்கிறார். புனிதனின் முயற்சியால், சில ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்ட பழைய தேவாலயமும் அதிலுள்ள மெட்டில்டா தந்தையின் எலும்புக்கூடும் வெளியுலகுக்குத் தெரிய வருகிறது. அது, புனிதன் பற்றிய நல்லெண்ணத்தை மெட்டில்டா மனதில் விதைக்கிறது.

ஒருகட்டத்தில் ஜெஸ்ஸி உடன் புனிதன் வரவில்லை என்பதை அறிகிறார் சேவியர். அவரைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்கச் செல்கிறார். அதேநேரத்தில், கிருபாநதி என்ற பெயரில் அகதிகள் மறுவாழ்வு விண்ணப்பமொன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது; அதில் புனிதனின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கிறது. அந்த கிருபாநதியோ ஒரு கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்தவர்.

கிருபாநதி மீண்டும் அகதிகள் முகாமுக்கு வருவதை அறியும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும் க்யூ பிராஞ்ச் அகதிகள் பொறுப்பு அதிகாரியும் கொந்தளிக்கின்றனர்; அவரைக் கொல்லத் துடிக்கின்றனர். அதேநேரத்தில், மெட்டில்டாவும் ஜெஸ்ஸியும் புனிதனிடம் ‘நீ யார்’ என்ற கேள்வியைக் கேட்கின்றனர். அவர் மீதிருக்கும் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள முயல்கின்றனர்.

உண்மையில் கிருபாநதியும் புனிதனும் ஒருவர்தானா? அவ்வாறு இல்லையென்றால், கிருபாநதி எனும் பெயரைப் புனிதன் பயன்படுத்த வேண்டிய தேவை என்ன? காவல் துறையைச் சேர்ந்த இரண்டு பேர், கிருபாநதி எனும் நபரைக் கொல்லத் துடிப்பது ஏன்? திரைக்கதையில் அடுத்தடுத்து இடப்படும் இந்த முடிச்சுகள் இறுதியில் ஒவ்வொன்றாக விடுபடுகின்றன; அதோடு, படமும் முடிவடைகிறது.

ஒரு அகதியின் வாழ்க்கை வரலாறாக விரியும் இக்கதையில், போர் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியா உட்பட வெளிநாடுகளுக்குச் சென்ற ஈழத்தமிழர்கள் மட்டுமல்லாமல் உலகெங்குமுள்ள அகதிகளின் வாழ்க்கைத் துயரங்களுக்கான தீர்வு என்னவென்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

உலகத்தரமான இசை!

விஜய் சேதுபதி நாயகனாக நடித்த படங்கள் ரசிகர்களின் பார்வையில் முழுதாகப் படுவதற்குள் முடங்கிப் போவது ஒரு வழக்கமாக மாறிவிட்டது. மாமனிதன் படத்திற்குப் பிறகு அப்படியொரு சாபத்திற்கு ஆளாகியுள்ளது யா.ஊ.யா.கே. திரைப்படம்.

வெவ்வேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்டதை உணர்த்தும் வகையில், வெவ்வேறு உடல்வாகோடு இதில் தோன்றியிருக்கிறார் விஜய் சேதுபதி. கிளைமேக்ஸில் தொடர்வசன மழை பொழிவதைத் தவிர, படம் முழுக்க இயல்பாக வலம் வந்திருக்கிறார்.

மேகா ஆகாஷை பொறுத்தவரை, ‘ஒருபக்கக்கதை’க்குப் பிறகு இதில் பெயர் சொல்லும் பாத்திரம். காதல், பாசம் இரண்டையும் அபாரமாகப் பொழிந்திருக்கிறார்.

ஜெஸ்ஸியாக வரும் மதுரா, பாதர் சேவியராக வரும் மறைந்த நடிகர் விவேக், மேகாவின் தாயாக வரும் ஸ்ரீரஞ்சனி, ராஜேஷ், சின்னி ஜெயந்த், இமான் அண்ணாச்சி, ரித்விகா, கனிகா என்று ஒரு டஜனுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதில் தங்கள் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மகிழ் திருமேனி, ரகு ஆதித்யாவின் வில்லத்தனம் திரைக்கதையை விறுவிறுப்பாக மாற்ற உதவியிருக்கிறது. இவர்கள் தவிர்த்து இயக்குனர்கள் மோகன்ராஜாவும் கரு.பழனியப்பனும் இரண்டொரு ஷாட்களில் இடம்பிடித்துள்ளனர். இலங்கை, கேரளா, தமிழ்நாடு, லண்டன் என்று கதை பயணிப்பதால், அதற்கேற்றவாறு சில துணை பாத்திரங்களும் இதில் நிறைந்திருக்கின்றன.

இந்த படத்தின் மாபெரும் பலமாகவும் பலவீனமாகவும் அமைந்திருக்கிறது வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு. அவர் உருவாக்கிய ஒவ்வொரு பிரேமும் ஒரு நல்ல காதல் படம் பார்த்த திருப்தியைத் தருகிறது. அகதிகளின் வலியைச் சொல்லும் ஒரு படத்தை வெகுயதார்த்த ட்ரீட்மெண்டில் தராமல் இப்படியொரு முயற்சியை மேற்கொண்டிருப்பது ஒருவித பரிசோதனையே. ஆனால், அதுவே படம் குறித்த வேறுவிதமான எதிர்பார்ப்பை உருவாக்கக் காரணமாகிவிட்டது.

கலை இயக்குனர் வீரசமர், படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரகாம் ஆகியோரின் உழைப்பு ஒவ்வொரு காட்சியையும் செறிவானதாகவும் நிறைவானதாகவும் மாற்ற உதவியிருக்கின்றன. கூடவே, நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசையும் சேர்ந்துகொள்கிறது. உண்மையில், இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ஒருபடி உயர்த்துவதில் இசைக்குப் பங்கு அதிகம். அது உலகத்தரத்தில் அமைந்திருக்கிறதென்று தாராளமாகச் சொல்லலாம்.

வான் மேல், இமைத்திடாதே இரண்டும் இதயத்தில் மென்மையாகக் காதலை நிரப்புகின்றன; ஒரு அதிகாலை தேவாலய ராகமாக ’ஆத்மநேசர்’ இருக்க, மலையேறும் பக்தர்களின் உள்ளக் கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவதாக ’முருகா’ பாடல் அமைந்துள்ளது. முதன்முறை கேட்கும்போதே இப்பாடல்கள் நம் மனதில் புகுந்துவிடுகின்றன. ஆனால், யா.ஊ.யா.கே. படத்தைப் பற்றியோ, பாடல்கள் குறித்தோ பெரிதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகவில்லை. அதனைச் சிலாகித்து நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. பொருளாதாரரீதியான பிரச்சனை அவற்றின் பின்னிருக்கலாம். அவற்றைச் சரி செய்திருந்தால் இப்படத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு வேறுவிதமாக மாறியிருக்கும்.

அருமையான வரவு!

ராதாமோகன் உட்பட வெகுசில இயக்குனர்களே ரொம்பவே மென்மையாகத் தமிழ் திரையில் கதை சொல்வதில் வித்தகர்களாக இருந்து வருகின்றனர். ‘யா.ஊ.யா.கே.’ மூலமாக அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இந்த ஆண்டின் ஒரு அருமையான வரவாக ஆகியிருக்கிறார்.

அகதிகள் முகாமில் இருப்பவர்கள் என்ன மாதிரியான துயரங்களை அனுபவிக்கின்றனர்? தங்களது எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்வதில் அவர்களுக்கு இருக்கும் தடைகள் என்ன என்பது பற்றித் திரைக்கதையில் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார் இயக்குனர். ஒரு பிரசாரமாக இல்லாமல், இவ்வாறு மிக மெலிதாகக் கருத்துகளைப் புகுத்துவதற்குப் பெரும் சாமர்த்தியம் வேண்டும்.

இந்த படத்தில் வி.சே. பாத்திரம் இந்துவா, கிறிஸ்துவரா, இஸ்லாமியரா என்பதனை ரசிகர்கள் அறிய முடியாது. அதனை ரசிகர்களிடம் விட்டுவிடுகிறார் இயக்குனர். இப்படியொரு கதாபாத்திரம் கொண்டு, இலங்கைப்போரில் வதைபட்ட தமிழர்களின் துயரங்களைச் சொல்வதற்கு எவ்வளவு உழைக்க வேண்டும்? அதனை ஒரு நேர்த்திமிக்க கமர்ஷியல் படமாக ஆக்க எத்தனை கஷ்டங்களை கடந்து வந்திருக்க வேண்டும்? இந்தக் கேள்விகளை யோசிக்கும்போதே, கதை திருட்டு புகாருக்கு இலக்காகியிருக்கிறது யா.ஊ.யா.கே. அதேநேரத்தில், படத்தின் மீது சிறு வெளிச்சம் விழுவதற்கும் அந்த எதிர்மறைச் செய்தியே காரணமாகியிருக்கிறது.

காவல் நிலையத்தில் கனிகா இடம்பெறும் காட்சியும், கிளைமேக்ஸில் அகதிகளின் வாழ்வு பற்றி வி.சே. ஆற்றும் உரையும் மட்டுமே ஒட்டுமொத்தப் படத்தின் நேர்த்தியிலிருந்து சற்றே விலகி நிற்கும். அவற்றைப் பொறுத்துக்கொண்டால், ஒரு நாடற்றவனின் குரலை எதிரொலிக்கும் மிகச்சிறந்த காட்சியனுபவமாக ‘யா.ஊ.யா.கே.’ நிச்சயம் அமையும்.

திரைக்கதையின் மெதுவான நகர்வோ அல்லது வசனங்களை விடக் காட்சியமைப்புக்கு முக்கியத்துவம் தரும் அணுகுமுறையோ, இன்றைய ‘பரபர’ ஆக்‌ஷன் பட வேட்கைக்கு எதிரானதாகத் தெரியலாம். ஆனால், ஒவ்வொரு பிரேமையும் ரசித்துச் செதுக்கியிருக்கும் இயக்குனர் மற்றும் குழுவினரின் உழைப்பை உற்றுநோக்கினால், இது காலம் கடந்தும் கொண்டாடப்பட வேண்டிய படைப்பென்பது தெரிய வரும். கொஞ்சம் தாமதமாகவேனும், ‘யா.ஊ.யா.கே.’ மீது வெளிச்சம் பாய்ந்தால் மகிழ்ச்சி!

உதய் பாடகலிங்கம்

உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியானார் எஸ்.வைத்தியநாதன்

ஜனாதிபதியை புறக்கணிக்கும் மோடி: ஒன்றுசேர்ந்த 19 எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!

+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *