”கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் என்பது நகைச்சுவை” : அண்ணாமலை

Published On:

| By christopher

”international Cricket stadium in Coimbatore is a joke

கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் என்பது நகைச்சுவையாகக் கருதப்பட வேண்டியது என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கோவை தொகுதியில் திமுக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, இன்று (ஏப்ரல் 7) தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர்  மு.க.ஸ்டாலினுக்கு ஒரு முக்கிய கோரிக்கையை வைத்தார்.

அமைச்சரின் கோரிக்கை ஏற்பு!

அதன்படி கோவையில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ’சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் உலகத்தரம் வாய்ந்த பல்நோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம்’ நிறுவ வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தை தொடர்ந்து தமிழ்நாட்டின் இரண்டாவது சர்வதேச தரமான கிரிக்கெட் மைதானம் கோவையில் அமைக்கப்படும் என்பதை திமுக தேர்தல் வாக்குறுதியாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதனை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்  கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், தமிழக பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை, கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டுவது தொடர்பான திமுகவின் வாக்குறுதியை விமர்சித்துள்ளார்.

வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை!

இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 2021 ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்த 511 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. மேலும் தோல்வியை உணர்ந்த பிறகு மேலும் வாக்குறுதிகளை வழங்குவதற்கு முன்பு அவர் முதலில் தான் வழங்கிய வாக்குறுதிகளை கவனிக்க வேண்டும்.

தி.மு.க.வின் தேர்தல் வித்தைகளால் கோவையில் உள்ள இளைஞர்களையும், விளையாட்டு ஆர்வலர்களையும் ஏமாற்ற முடியாது.

கோவையில் கடந்த 3 ஆண்டுகளாக புதிய பேருந்து நிலையம் அமைக்க முடியாத கட்சி திமுக. கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் என்பது நகைச்சுவையாகக் கருதப்பட வேண்டியது” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் : திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார் ஸ்டாலின்

ஜே.பி.நட்டாவின் ரோடு ஷோவுக்கு அனுமதி… ஆனால்… : நீதிமன்றம் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share