வாக்கு சதவீதத்தை வெளியிட 11 நாட்கள் ஆனது ஏன்? சதவீதம் இருக்கிறது…எண்ணிக்கை எங்கே? தேர்தல் ஆணையம் பதிலளிக்குமா?

அரசியல்

முதல் கட்டத் தேர்தல் மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தலில் எவ்வளவு சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என்ற இறுதியான அறிவிப்பை அறிவிக்காமலேயே இருந்து வந்த தேர்தல் ஆணையம், 11 நாட்கள் கழித்து அதனை அறிவித்திருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு கட்டத் தேர்தல்கள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. ஏப்ரல் 19 ஆம் தேதி நடந்த முதல் கட்டத் தேர்தலில் எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என்ற முழுமையான அறிவிப்பினை 11 நாட்கள் கழித்து ஏப்ரல் 30 அன்று வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். எப்போதும் இதுபோல் நடைபெற்றதில்லை. இது நடைமுறைக்கு மாறானதாக இருக்கிறது. தாமதத்திற்கான காரணமும் எதுவும் தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இது எதிர்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

வாக்கு சதவீதத்தை அறிவிப்பதில் இவ்வளவு தாமதம் ஏற்பட்டிருப்பது நடைமுறைக்கு மாறான கவலையளிக்கக்கூடிய விடயம் என்று சுயாட்சி இந்தியா அமைப்பின் தலைவரும், இந்தியாவில் தேர்தல்கள் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவருமான யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

முதல் கட்டத் தேர்தலில் 66.14% சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்டத் தேர்தலில் 66.71% சதவீத வாக்குகளும் பதிவாகி இருப்பதாக தகவல்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் 60.96% சதவீத வாக்குகள் பதிவாகியதாக அன்று மாலை 7 மணி வரையிலான நிலவரத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் இரண்டாம் கட்டத் தேர்தலில் 66.71% சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திடீரென 5%-6% வாக்குகள் அதிகமாகக் குறிப்பிடப்பட்டிருப்பது எப்படி என்று பல கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன. வாக்கு சதவீதத்தில் 1% அல்லது 2% மாறுவது என்பது இயல்பானது. ஆனால் 6% மாறியிருப்பது இயல்பானதாக இல்லை என்ற சந்தேகத்தை அரசியல் விமர்சகர்கள் எழுப்புகிறார்கள். இதற்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்ற குரல்களும் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.

இதையெல்லாம் தாண்டி முக்கியமான இன்னொரு விடயம் என்னவென்றால், ஒவ்வொரு தொகுதியிலும் மொத்த வாக்குகள் எத்தனை என்ற எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ”மொத்த வாக்காளர் எண்ணிக்கையை தெரிவிக்காமல், பதிவான சதவீதத்தை மட்டும் குறிப்பிடுவது அர்த்தமில்லாதது” என்று குறிப்பிட்டுள்ளார். வாக்குகள் எண்ணப்படும் நேரத்தில் எண்ணிக்கையை மாற்றி அமைக்க முடியும் என்பதால் முடிவுகளை அறிவிப்பதில் முறைகேடு நடக்குமோ என்ற அச்சம் எழுந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ”2014 தேர்தலிலிருந்து ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர் என்ற எண்ணிக்கை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டே வந்தது. தேர்தல் ஆணையம் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும். வாக்காளர்களின் எண்ணிக்கையை வெளியிட வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, தேர்தல் ஆணையம் எத்தனை வாக்குகள் பதிவாகின என்ற எண்ணிக்கையை இணையதளத்தில் வெளியிட்டது. மேலும், அதனை 2014 தேர்தலின் எண்ணிக்கையோடும் ஒப்பிட்டு வெளியிட்டிருந்தது. ஆனால், இந்த முறை ஏன் எண்ணிக்கையில் வெளியிடாமல் சதவீதத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது என்ற கேள்வியை பத்திரிக்கையாளர் பூனம் அகர்வால் எழுப்பியிருக்கிறார்.

இப்படி பல கேள்விகளை தேர்தல் ஆணையத்தை நோக்கி பலரும் எழுப்பி வருகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விவேகானந்தன்

EVM-VVPAT வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது! – அசோக் வர்தன் ஷெட்டி

பாலியல் குற்றச்சாட்டு: பிரஜ்வல் ரேவண்ணா ரியாக்‌ஷன்!

அமேதி, ரேபரேலியில் யார் வேட்பாளர்கள்? – 24 மணி நேரத்தில் அறிவிப்பு : காங்கிரஸ்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *