பாரதிராஜா – ஒரு முன்மாதிரி..!

சினிமா

உதய் பாடகலிங்கம்

இயக்குனர் இமயம் என்ற பெயரைத் தாங்கி நிற்கும் பாரதிராஜா, தமிழ் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை. அனைத்துக்கும் மேலாக, அன்றும் இன்றும் திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைக்க நினைப்பவர்களுக்கான முன்னோடி.

இப்படிப் பலவிதமாகப் பல பிரபலங்கள் பேசி நாம் கேட்டிருக்கிறோம். இன்றும் பாரதிராஜா இயக்கிய படங்களை வியந்து பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு சாதனையாளர், இன்று தனது 83வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

இந்த நேரத்தில், ஒரு பிரபலமான அவரிடம் இருந்து சாதாரண மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன என்பதையும் சொல்லியாக வேண்டும்.

தேனி டூ சென்னை!

தேனி அருகிலுள்ள அல்லிநகரத்தில் பிறந்து வளர்ந்த பாரதிராஜா, சிறு வயது முதலே படைப்பாற்றலில் கவனத்தைக் குவித்தவர். அருகிலுள்ள கிராமங்களில் மேடை நாடகங்கள் நடத்திய அனுபவம் உடையவர். இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் உடன் இணைந்து பயணித்தவர். அப்படிப்பட்டவர் வாலிபப்  பருவத்தில் தான் பார்த்துவந்த சுகாதார ஆய்வாளர் பணியைத் துறந்தபிறகே, சினிமா வாய்ப்பு தேடத் தொடங்கினார். சென்னையிலும் பெட்ரோல் பங்கில் வேலை பார்ப்பது முதல் நாடகங்களில் நடிப்பது வரை பல பணிகளை மேற்கொண்டார்.

அந்த வேளைகளில், ஒரு நிரந்தரத் தொழில் கண் முன்னே நிழலாடிக் கொண்டிருக்கும்போது ‘காற்றில் வலை வீசும் வேலை எதற்கு’ என்ற கேள்வியை நிச்சயம் அவர் எதிர்கொண்டிருப்பார். அதனை மீறி, சினிமாவில் சாதிப்போம் என்ற வேட்கை அந்த ‘ரிஸ்க்’கை கையாளும் பக்குவத்தை அவருக்குத் தந்திருக்க வேண்டும்.

‘இருக்குறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஏன் ஆசைப்படுற’ என்ற வார்த்தைகள், இன்றும் கூட, சினிமா கனவுகளோடு திரிபவர்களைப் பார்த்து வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அப்படியென்றால், அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருந்திருக்கும் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

ஒரு உதவி இயக்குனர் ஒரேயொரு இயக்குனரிடம் தான் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும். திரைத்துறையில் கடுமையாக முன்வைக்கப்படும் நியதிகளில் இதுவும் ஒன்று. உண்மையில் இதற்கான சாத்தியம் மிகக்குறைவு.

Director Bharathiraja Biography

ஒரு இயக்குனருக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது அவரே விரும்பி இடைவெளி எடுத்துக்கொண்டாலோ, அவருக்கு உதவிகரமாக இருப்பவர்கள் அப்படியே இருந்துவிட முடியாது. பொருளாதார வளத்தைப் பொறுத்தவரை வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கும் உதவி இயக்குனர்களைப் பொறுத்தவரை அது சாத்தியமில்லை. அதனால், கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நிலைமை. போலவே,  முரண்பாடுகள் காரணமாக மூத்த படைப்பாளிகளிடம் இருந்து விலகி நிற்கும் இளையவர்களும் உண்டு. அவர்களுக்குப் பட வாய்ப்புகள் கிடைப்பது அரிதினும் அரிது.

ஆனால், அந்தக் காலத்திலேயே அது போன்ற நியதிகளை உடைத்தவர் பாரதிராஜா. கன்னட இயக்குனர் புட்டண்ண கனகல் தொடங்கி பி.புல்லையா, கிருஷ்ணன் நாயர், அவிநாசி மணி, ஏ.ஜகந்நாதன் போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, அன்று தன்னோடு இயக்குனர் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தவர்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டிருந்தார்.

சினிமாவில் கனவுகளோடு திரியும் ஆண்கள், பெண்களில் சிலர், அது நனவானபிறகே திருமணம் என்று சொல்லிக் கொண்டு திரிவதைப் பார்க்க முடியும். அவரவர்களுக்கான நியாயம் என்றளவில் அது சரியானதே. ஆனால், முதல் பட வாய்ப்பு அமையும் முன்பே திருமணம், குழந்தை போன்ற பேறுகளைக் கடப்பது வரமும் சாபமும் சரிவிகிதத்தில் கலந்த ஒரு வாழ்க்கையைத் தரும். அதற்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது பாரதிராஜாவின் குடும்ப வாழ்வு.

கிராமங்களைக் காட்டிய கேமிரா!

தமிழ் திரையுலகில் அசல் கிராமங்களைச் சில திரைப்படங்கள் காட்டியிருக்கின்றன. பல்வேறுபட்ட மக்களின் பழக்க வழக்கங்களையும் கலாசாரத்தையும் பேச்சு வழக்கையும் பிரதிபலித்திருக்கின்றன. ஆனால், முழுமையாக ஒரு கிராமத்திற்குள் இறங்கி நடந்து பல்வேறு மக்களின் வாழ்வைக் கடந்து வந்த அனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்தன பாரதிராஜாவின் படைப்புகள்.

முதல் படமான  ‘16 வயதினிலே’ மூலமாக, அதுவே தனது பலம் என்று உணர்த்தினார். கிழக்கே போகும் ரயில், மண் வாசனை, முதல் மரியாதை, கிழக்குச் சீமையிலே என்று அதற்குப் பல உதாரணங்களையும் தொடர்ந்து தந்தார்.

முதலிரண்டு படங்களுக்குப் பிறகு, இவருக்குக் கிராமத்துப் படங்கள் தான் எடுக்கத் தெரியும் என்று பேச்சு எழுந்தது. அந்த வாதத்தை உடைத்து, தான் பார்த்த உலக சினிமாக்களின் பாதிப்பில் ஒரு த்ரில்லர் படத்தை தந்து ரசிகர்களை வியக்க வைத்தார் பாரதிராஜா. கமல்ஹாசன், ஸ்ரீதேவியை அழகான திரை ஜோடியாக உருமாற்றிய ‘சிகப்பு ரோஜாக்கள்’ படம் தான் அது. அதேபோல ’டிக் டிக் டிக்’ படத்தில் செய்த மாயாஜாலம், மசாலா பட காட்சியாக்கத்தில் அவரை ஒரு ட்ரெண்ட்செட்டர் ஆக்கியது.

அதேபோல பீம்சிங், ஸ்ரீதர், பாலச்சந்தர் போன்ற தமிழ் பட இயக்குனர்களின் வரிசையில் தனது படங்களைத் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட வேறு மொழிகளில் இயக்கும் சவாலையும் பாரதிராஜா திறம்படச் சமாளித்தார். மேற்சொன்ன இயக்குனர்களின் படைப்புகளைப் போல பொத்தாம்பொதுவான கதைகளாக அவை இல்லை என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை போன்றவற்றின் ‘ரீமேக்’ ஆக அவை இருந்தன.

இவை தவிர்த்து நேரடியாக யுவதாரம் பிலிசிந்தி, ஜமதக்னி என்று இரண்டு தெலுங்கு படங்களையும் இயக்கியிருக்கிறார். ரஜினிகாந்த், விஜயகாந்தை நாயகர்களாக்கி, அவர்களது பாணியிலேயே கொடி பறக்குது, தமிழ்ச்செல்வன் படங்கள் தந்திருக்கிறார். அவற்றால் கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளாகியிருக்கிறார். வெறுமனே விருதுகளைக் குறிவைத்து ‘அந்தி மந்தாரை’ படைத்திருக்கிறார். தன் மனதுக்குப் பிடித்த படமாக ‘காதல் ஓவியம்’ தந்தபிறகு, அதன் தோல்வியால் தமிழ் மக்களைச் சபித்திருக்கிறார்.

இது போல எத்தனை சொன்னாலும், பாரதிராஜாவின் படைப்பு என்ற அடையாளம் ரசிகர்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு ஈடிணை கிடையாது. அவர் தந்த தோல்விப் படங்களைக் கொண்டாடும் ரசிகர்களைக் கண்டால், அது தானாகப் பிடிபடும்.

கேமிரா முன்னால்..!

பாரதிராஜா தன் மகன் மனோஜை நாயகனாக்கி ‘தாஜ்மஹால்’ தந்தார். அது கலவையான காட்சியனுபவத்தைத் தரக் கூடியது. அந்தப் படத்திற்குப் பிறகு, தனது பலங்களை எல்லாம் விட்டுவிட்டு ஒரு புதிய இயக்குனர் போல பல்வேறு பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்கினார். கண்களால் கைது செய், பொம்மலாட்டம் என்று வேறு திசையில் பயணித்தார்.

அதே நேரத்தில், மணி ரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ மூலமாக கேமிரா முன்பும் தலைகாட்டினார். அதற்கு முன்பும் கூடச் சில படங்களில் தோன்றியிருக்கிறார் என்றபோதும், அவற்றில் ஒரு பாத்திரமாக உலா வந்ததில்லை. இந்தப் படத்தில் அதனைச் செய்தார். தனது நடிப்பின் வழியே நிறையவே விமர்சனங்களை எதிர்கொண்டார்.

‘கல்லுக்குள் ஈரம்’ காலத்திலும் அதுவே நிகழ்ந்தது என்றபோதும், இம்முறை தகுந்த வாய்ப்புகள் வரும்போது அந்த எண்ணங்களை உடைத்தெறிய வேண்டுமென்று கங்கணம் கொண்டார். ‘பாண்டியநாடு’, ‘குரங்கு பொம்மை’ என்று தொடங்கி ‘திருவின் குரல்’ படத்திற்குப் பிறகும் அதனைச் சாதித்து வருகிறார். அந்த வகையில் ‘திருச்சிற்றம்பலம்’ படம் உருவாக்கிய தாக்கத்தில் ‘வாத்தி’யில் ஒரேயொரு காட்சியில் தோன்றியது கூட அவரது தனித்துவம் என்றே சொல்ல வேண்டும்.

ஒரு இயக்குனரின் உதவி இயக்குனர்களில் ஓரிருவர் இயக்குனர் அந்தஸ்து பெற்றாலே பெரிய விஷயம் என்றிருந்த காலகட்டத்தில் கே.பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, ரங்கராஜ், மனோஜ்குமார், சித்ரா லட்சுமணன். பொன்வண்ணன் என்று பெரும்படையே அவரிடம் இருந்து வெளிவந்து தமிழ் திரையுலக வெற்றிகளைத் தங்களுடையதாக்கியது. கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற வார்த்தைகளின் கீழே ஒருவரது பெயர் வருவதே கௌரவம் என்றிருந்த காலகட்டத்திலும், அவர் பல கதாசிரியர்களிடம் கதை வாங்கியே அவற்றைத் தனது திரைப்படங்களாக மாற்றிக் கொண்டிருந்தார்.

திரையுலக இலக்கணங்களில் இருந்து விலகி நின்று சுதாகர், ராதிகா தொடங்கி பல நடிகர் நடிகைகளை அறிமுகம் செய்த பெருமையும் இவருக்கு உண்டு. படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, நாயகத் தேடலில் ஈடுபட்டபோதே பாரதிராஜாவின் கண்களில் பாண்டியன் தென்பட்டார் என்பதும், அவரை ‘மண்வாசனை’யில் நாயகன் ஆக்கினார் என்பதும் வரலாறு. இது போன்று பல விஷயங்கள் அவரை ஒரு ‘தனித்துவக் கலைஞராக’ முன்னிறுத்தும்.

வேறொரு இயக்குனரால் அவற்றைச் சாதிக்க முடியுமா என்பதற்கு நம்மால் பதில் சொல்ல இயலாது. ஏனென்றால், அது போன்ற சம்பவங்களே பாரதிராஜாவை ஒரு இயக்குனர் என்பதையும் தாண்டி போற்றிப் புகழ வைக்கின்றன. ஒரு சினிமா படைப்பாளி என்பதை மறந்துவிட்டு, அவற்றை உற்றுநோக்கினால் எந்தவொரு சாதாரண மனிதரும் தங்களுக்கான பாடங்களைப் பெற முடியும். சமூகத்தில் வெற்றியாளராகத் திகழும் வகையில், எந்தத் துறையிலும் கோலோச்ச முடியும். அந்த வகையில் பாரதிராஜா ஒரு முன்மாதிரி..!

“பொன்முடி வீட்டின் லாக்கரை திறக்க முடியவில்லை” – சாவி தயாரிப்பாளர்

விஷாலுடன் இணையும் பிரியா பவானி சங்கர்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *