தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் பாரதிராஜா சென்னையில் வசித்து வருகிறார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமுலில் இந்தியா முழுவதும் இருந்து வருகிறது. சிறப்பு அனுமதி பெற்று சொந்த ஊரான தேனிக்கு பாரதிராஜா சில தினங்களுக்கு முன்பு சென்றார்.
தமிழகத்தில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
அத்தகைய நபர்களுக்கு பாதிப்பு இல்லாத பட்சத்தில் வீட்டில் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சிவப்பு மண்டல பகுதியான சென்னையில் இருந்து, தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள தனது வீட்டுக்கு இயக்குநர் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றார்.
அவருடன் உதவியாளர்கள் 3 பேரும் சென்றுள்ளனர். இதையடுத்து இயக்குநர் பாரதிராஜா தானாக முன்வந்து தேனி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று, தான் சென்னையில் இருந்து தேனி வந்த விவரத்தை தெரிவித்தார். இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.
மேலும் அவருடைய உதவியாளர்கள் 3 பேருக்கும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த மாதிரிகள், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.
இருப்பினும் இயக்குநர் பாரதிராஜா உள்பட 4 பேரும் வீட்டில் 28 நாட்களுக்கு தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொண்டனர். அதை ஏற்றுக்கொண்ட பாரதிராஜா உள்பட 4 பேரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.
அவருடைய வீட்டின் முன்பு தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற நோட்டீசை தேனி அல்லி நகரம் நகராட்சி அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் கொரோனாவுக்காக சுகாதாரத் துறை விதிகளின்படி தனிமைப்படுத்தபட்ட முதல் இயக்குநர் பாரதிராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
**-இராமானுஜம்**
�,”