தமிழ் திரையுலக நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர், தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று இயக்குநரும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக, படப்பிடிப்புகள் ரத்து, திரையரங்குகள் மூடல் என திரைத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களுக்கு பெரும் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் படப்பிடிப்பிற்கு மத்திய அரசு அனுமதி அளித்த போதும், சில முன்னணி நடிகர்கள் படங்களின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.
இந்த சூழலில், தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தைக் கருத்தில் கொண்டு தெலுங்கு நடிகர்கள் 30 சதவிகித சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளச் சம்மதம் தெரிவித்துள்ளனர். கேரளாவைப் பொறுத்தவரை 75 சதவிகித நடிகர்கள் தங்களது சம்பளத்தைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் கேரள திரைத்துறை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் தமிழ் திரையுலக நடிகர்களும், தங்கள் ஊதியத்தில், 30 சதவிகிதம் விட்டுக்கொடுத்து, தயாரிப்பாளர்களுக்குத் தோள் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா தொற்று பரவலுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற படங்களை முடித்து திரைக்குக் கொண்டு வரும் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும். பணி தொடங்க நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் மனது வைக்க வேண்டும். ஏற்கனவே பிறரிடம் பணம் வாங்கி முதலீடு போட்டதில் தேக்கநிலை, அதற்கான வட்டி பெருக்கம், இதெல்லாம் தயாரிப்பாளர்களின் மீது விழுந்திருக்கும் மீள முடியாத பெருஞ்சுமை.
தயாரிப்பாளர்களுக்கு 50 சதவிகித நஷ்டம் என்பது உறுதியாகத் தெரிகிறது. தயாரிப்பாளர்களின் இந்த கடினமான சூழ்நிலையை உணர்ந்து ஏற்கனவே சில நடிகர்கள் அவர்கள் ஒப்பந்தம் செய்துகொண்ட சம்பளங்களிலிருந்து 30% குறைத்துக் கொள்வதாக வாக்குறுதி தந்திருக்கிறார்கள் அவர்களைப் பாராட்டும் அதே சமயத்தில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்குத் தோள் கொடுக்க வேண்டியது அனைத்து நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கடமை அல்லவா.
தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படத்துறையில் அனைத்து நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தாமே முன்வந்து தங்களின் சம்பளங்களில் 30 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை விட்டுக் கொடுத்துள்ளார்கள். இதை நீங்கள் அறிவீர்கள். அவர்களுக்கு எல்லாம் முன்னோடியான தமிழ் சினிமாவிலும் இது நடக்க வேண்டாமா?
எல்லோரையும் கேட்கவில்லை 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறைந்தபட்சம் தாங்கள் வாங்கும் ஊதியத்திலிருந்து 30 சதவிகிதம் விட்டுக் கொடுத்து நிறுத்தி வைத்திருக்கும் படங்களை முடித்துத் தரவேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இனி ஒப்பந்தம் செய்யும் படங்களுக்கு இந்த வேண்டுகோள் பொருந்தாது என்று தெரிவித்துள்ள அவர், ”நீங்கள் உங்கள் சம்பளங்களை பேசி ஒத்து வந்தால் வேலை செய்யப் போகிறீர்கள் ஆனால் முடிவடைய வேண்டிய படங்களுக்கு உங்கள் பங்களிப்பை கொடுத்து 30 சதவிகித சம்பளத்தை விட்டுக் கொடுத்து சினிமா உலகம் மீண்டெழ உதவ வேண்டும். தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் நீங்கள் அனைவரும் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். மீண்டெழ கைகள் கோர்ப்போம். சினிமாவையும், தயாரிப்பாளர்களையும் வாழவைப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார் பாரதிராஜா.
**-பிரியா**�,