மலையாள திரைப்படங்களை கொண்டாட உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பொதுவாக மலையாளத் திரைப்படங்கள் என்றாலே விமர்சன ரீதியாக அனைவரின் பாராட்டுகளை பெறும்.
ஆனால் இந்த 2024 ஆம் ஆண்டு கொஞ்சம் வித்தியாசமாக விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் மலையாள திரைப்படங்கள் கலக்கி கொண்டிருக்கிறது.
2024 ஆண்டின் இந்த முதல் ஐந்து மாதங்களில் வெளியான மலையாள திரைப்படங்களின் வசூலை கணக்கிட்டுப் பார்த்தாலே 1000 கோடி ரூபாய் வசூல் ஈட்டப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தற்போது மலையாளத்தில் எந்தெந்த படங்கள் எவ்வளவு கோடி வசூல் செய்து உள்ளது என்ற பட்டியலை பார்க்கலாம்.
நட்பை மையமாக வைத்து வெளியான “மஞ்சுமெல் பாய்ஸ்” திரைப்படம் 241 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது.
பிரித்விராஜ் நடிப்பில் வெளியான “ஆடு ஜீவிதம்” திரைப்படம் 159 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறது.
பகத் பாசில் நடிப்பில் கேங்ஸ்டர் நகைச்சுவை திரைப்படமாக வெளியான “ஆவேசம்” 155 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது.
நஸ்லேன், மமித்தா பைஜு நடிப்பில் வெளியான “பிரேமலு” திரைப்படம் 2K கிட்ஸ்களின் ஆதரவை பெற்று 135 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளியான “வர்ஷங்களுக்கு ஷேஷம்” திரைப்படம் 82 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.
மம்மூட்டி வில்லனாக நடித்து வெளியான “பிரம்மயுகம்” திரைப்படம் 58 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது.
பிரித்விராஜ், பசில் ஜோசப் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான “குருவாயூர் அம்பலநடையில்” திரைப்படம் இதுவரை 42 கோடி வசூல் செய்துள்ளது.
அதேபோல் ஜெயராம் நடிப்பில் வெளியான “ஆபிரகாம் ஓஸ்லர்” 40 கோடி ரூபாயும், மோகன்லால் நடிப்பில் வெளியான “மலைக்கோட்டை வாலிபன்” திரைப்படம் 29 கோடி ரூபாயும், நிவின் பாலி நடிப்பில் வெளியான “மலையாளி From இந்தியா” திரைப்படம் 30 கோடி ரூபாயும், டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான “அன்பேஷிப்பின் கண்டேதும்” படம் 16 கோடி ரூபாயும், நடிகர் திலீப் நடிப்பில் வெளியான “பவி கேர்டேக்கர்”திரைப்படம் 15 கோடி ரூபாயும், & மலையாளத்தில் வெளியான மற்ற திரைப்படங்கள் அனைத்தும் சேர்த்து 15 கோடி ரூபாயும் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
வெறும் ஐந்து மாதங்களில் வெளியான மலையாள படங்களின் மொத்த வசூலே 1000 கோடி ரூபாயை எட்டியுள்ள நிலையில், தமிழ் திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர்.
ஆனால் தமிழ் சினிமாவில் ஜூன் மாதத்தில் தனுஷின் “ராயன்” மற்றும் விக்ரமின் “தங்கலான்”, ஜூலை மாதம் கமலின் “இந்தியன் 2”, செப்டம்பர் மாதம் தளபதி விஜய்யின் “The GOAT”, அக்டோபர் மாதம் ரஜினியின் “வேட்டையன்”, நவம்பர் மாதம் சூர்யாவின் “கங்குவா” என அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருவதால் 2024 ஆம் ஆண்டின் கடைசி ஆறு மாதங்களில் இதுவரை திரையுலகம் கண்டிராத அளவுக்கு தமிழ் படங்கள் வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஈரான் அதிபர் உயிரிழப்பு: ஹெலிகாப்டர் பணியாளர்களின் புகைப்படம் வெளியீடு!
5-ஆம் கட்ட தேர்தல்… 5 மணி நிலவரம்… 56.68% வாக்குப்பதிவு!