‘நலிந்த தயாரிப்பாளர்கள்’ : அரசுக்கு பாரதிராஜா கோரிக்கை!

சினிமா

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 44-வது வருடத் துவக்க விழா நேற்று சென்னை அண்ணாசாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக செய்தித் துறை அமைச்சரான வெள்ளக்கோவில் சாமிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான முக்தா சீனிவாசன், கோவை செழியன், கே.ஆர்.ஜி., இப்ராகிம் ராவுத்தர், இராம.நாராயணன் ஆகியோரது திருவுருவப் படங்களை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.
சங்கத்தின் முன்னாள் தலைவர்களான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, ஏ.எஸ்.பிரகாசம், கே.முரளீதரன், சத்யஜோதி டி.ஜி. தியாகராஜன், எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், கலைப்புலி எஸ்.தாணு, விஷால் கிருஷ்ணா ஆகியோருக்கு நினைவு கேடயங்களையும் அமைச்சர் வழங்கினார்.

இந்த விழாவில் சங்கத்தின் தலைவரான என்.ராமசாமி பேசுகையில், “பாரம்பரியம் மிக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அழைப்பினை ஏற்றுச் சிறப்பித்த அமைச்சருக்கு நன்றி. திரையுலகினரின் நலனுக்காக சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு மானிய தொகையினையும் நிலுவையில் உள்ள தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கிட தங்களிடம் நாங்கள் வைத்துள்ள கோரிக்கையினை நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.

இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், “தயாரிப்பாளர்களில் நலிந்த தயாரிப்பாளர்கள் என்று கூறுவது மனதிற்குச் சங்கடமாக உள்ளது. நானும் சிறு முதலீட்டுப் படத் தயாரிப்பாளர்தான். எனக்கும் அவர்கள் படும் சிரமங்கள் அனைத்தும் தெரியும். படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் உதவி தொகை கேட்டு பெறுவது என்னை வருத்தமடைய செய்கிறது. தயாரிப்பாளர்கள் அனைவரும் நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள், சினிமா தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து, சம்பளமும் கொடுத்தவர்கள். கொடுக்கும் இடத்திலிருந்தவர்கள். இருப்பவர்கள். ஆகவே அவர்களின் அந்த பரிதாப நிலை மாற வேண்டும். சிறு முதலீட்டு படத் தயாரிப்பாளர்களுக்கு அரசு உதவிட வேண்டும். அவர்களின் வாழ்வு மேம்பட வேண்டும். ‘நலிந்த தயாரிப்பாளர்கள்’ என்ற வார்த்தையே இனி இல்லாமல் அவர்களை பாதுகாக்க அரசு உதவிட வேண்டும்..” என்றார்.

விழாவின் இறுதியாக அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பேசுகையில், “இந்தத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 44-வது ஆண்டு துவக்க விழாவில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நமது மாநிலத்தின் பெயர் ‘தமிழ்நாடு’ என்று மாற்றப்பட்ட அதே தேதியில்தான் இந்த தயாரிப்பாளர்கள் சங்கமும் துவங்கியுள்ளது என்பது ஒரு சிறப்பான ஒற்றுமையாக உள்ளது.
தமிழ்த் திரையுலகம் நலிந்து கொண்டிருந்த சூழ்நிலையில் கொரோன தொற்று, மேலும் அழுத்தி இந்த தொழிலை நசுக்கியது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.

நான் ஒரு விவசாய குடும்பத்தினை சார்ந்தவன். ஒரு விதத்திலே விவசாயமும் இந்த திரைத்துறையும் ஒத்துப் போகிறது. திரைப்பட தயாரிப்பாளர்களின் நிலைமையும், விவசாயிகளின் நிலைமையும் தற்போது ஒரே மாதிரிதான் உள்ளது.

உழைத்த விவசாயிகள் செலவு பத்தணா வரவு எட்டணா’ என்று சொல்வார்கள். அதே போன்ற சூழ்நிலைதான் இங்கேயும் இருக்கிறது என்பதை இந்த மேடையில் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பேசும்போது தெரிந்து கொண்டேன்.

நீங்கள் வைத்துள்ள கோரிக்கைகளை முதல்வரிடம் நான் எடுத்துச் செல்வதற்கு முன்னாலேயே அவருக்குப் போய்ச் சேர்ந்துவிடும். இங்குள்ள நிலைமைகள் அவருக்கும் தெரியும். இங்குச் சங்கம் வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் தமிழக அரசின் நிதி நிலைமையை கணக்கில் கொண்டு சரி செய்யப்படும்.

ராஜாஜி ஹால், மியூஸியம், வள்ளுவர் கோட்டம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கான துறை ரீதியான அனுமதியைப் பெற்றுத் தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

இப்பொழுதுகூட சென்னை அடையாற்றில் இருக்கும் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியை உலகத் தரத்தில் மேம்படுத்த அதன் திட்டப் பணிகளுக்காக முதல்வர் ரூபாய் பத்து லட்சத்தை ஒதுக்கித் தந்துள்ளார். தயாரிப்பாளர்கள் வைத்துள்ள கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றித் தர நான் என்றும் உறுதுணையாக இருப்பேன்” என்றார்.

இராமானுஜம்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *