பாலியல் புகார் ஐஜி முருகன் வழக்கு: விரைவில் விசாரணை!

தமிழகம்

பாலியல் புகார் சுமத்தப்பட்ட ஐஜி முருகன் மீது சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறையில் ஈரோடு அதிரடிப்படை ஐஜியாக முருகன் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய போது தனக்கு கீழ் பணி செய்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

‘செல்போனில் ஆபாச தகவல்களை அனுப்பினார் என்றும், அறைக்குத் தனியாக அழைத்து அத்துமீறியதாகவும், சம்மதம் இல்லாமல் செல்போனில் தன்னை புகைப்படம் எடுத்ததாகவும்’ பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. புகார் அளித்தார்.

இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் பெண் எஸ்.பி.சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐஜி முருகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

ஆனால் தமிழ்நாடு சிபிசிஐடி விசாரித்தால் தனக்கு நியாயம் கிடைக்காது என்று பெண் எஸ்.பி தொடர்ந்த வழக்கில், ஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கு தெலங்கானா மாநிலத்துக்கு மாற்றப்பட்டது.

2019ஆம் ஆண்டு வழக்கு தெலங்கானா மாநிலத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது.

இந்நிலையில் பெண் எஸ்.பி விருப்பப்படி ஐஜி முருகன் மீதான வழக்கு விசாரணையைத் தமிழகத்தில் மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஐஜி முருகன் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆளுநரிடமும் தமிழக அரசிடமும் சிபிசிஐடி அனுமதி கோரியது. இதற்குக் கடந்த ஜூலை மாதம் ஆளுநர் அலுவலகமும், தமிழ்நாடு அரசும் ஒப்புதல் அளித்தன.

இதைத்தொடர்ந்து சிபிசிஐடி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. 20க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் விசாரிக்கப்பட்ட நிலையில், சிபிசிஐடி போலீசார் 112 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை உரிய ஆவணங்களுடன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதன்மூலம் விரைவில் ஐஜி முருகன் விசாரணையை எதிர்கொள்ளவுள்ளார். அவரிடம் குற்றப்பத்திரிகையில் நகல் வழங்கப்படடு விசாரணை தொடங்கப்படவுள்ளது.

முன்னதாக மற்றொரு பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தற்போது ஜாமீனில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.700 கோடி அபராதம்!

உரசிச் சென்ற ஆட்டோ… அன்புமணி உயிருக்குக்  குறியா? 

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *