கோவை ஜோஸ் ஆலுக்காஸில் கொள்ளையடித்த திருடன் விஜய்யை சென்னையில் கைது செய்தது எப்படி என்று கோவை மாநகர துணை காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். kovai jos alukkas robbery
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் நகைக்கடைகள், துணிக்கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. இந்த சாலையில் தான் பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ் இயங்கி வருகிறது. இந்த கடையில் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி இரவு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 5 தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். தொடர்ந்து குற்றவாளியை தேடி வந்த தனிப்படை போலீசார் சென்னையில் வைத்து நேற்று (டிசம்பர் 11) குற்றவாளி விஜய்யை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இருந்த நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
கோவையில் நகையை கொள்ளையடித்த விஜய்யை சென்னையில் கைது செய்தது எப்படி என்று கோவை துணை காவல் ஆணையர் சந்தீஷ் விளக்கம் அளித்துள்ளார். இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த கொள்ளையில் கிட்டத்தட்ட 5.1 கிலோ தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட 4 வகையான நகைகள் திருடப்பட்டன. இதில் விதவிதமான ஆபரணங்களும் திருடப்பட்டன. இந்த சம்பவம் குறித்து உடனே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த 5 தனிப்படையினரும் இரவு பகலாக குற்றவாளியை தேடினர். இந்த வழக்கில் குற்றவாளி தர்மபுரியை சேர்ந்த விஜய் (26). கிட்டத்தட்ட 300 முதல் 350 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம். அதில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை ஆனைமலை வரை கண்காணித்தோம். அங்கு விஜய் ஆனைமலையில் அவரது நண்பன் சுரேஷ் என்பவரது வீட்டில் தங்கியிருந்தார்.
சம்பவம் நடைபெற்ற உடன் குற்றவாளியை பிடிக்க முடியவில்லை என்றாலும், விஜய்யின் மாமியாரிடம் இருந்து 1.2 கிலோவும் மனைவியிடம் இருந்து 3 கிலோ நகைகளை பறிமுதல் செய்தோம். ஆனால் இதில் வைர நகைகள் மட்டும் கிடைக்கவில்லை.
தொடர்ந்து அவர்கள் வீட்டை சுற்றி சோதனை செய்ததில் மண்ணில் புதைத்து வைத்திருந்த நகைகளையும் மீட்டு விட்டோம். ஆனால் விஜய் தான் இருக்கும் இடத்தை மாற்றி கொண்டே இருந்தார். இதனால் அவரை பிடிப்பது கஷ்டமாகவே இருந்தது. அவர் சென்னை, திருப்பதி, நெல்லூர் என்று இடத்தை மாற்றிக் கொண்டே இருந்தார்.
இதனிடையே விஜய் புதிய சிம் வாங்க முயற்சி செய்து வந்தார். ஆனால் அவரிடம் ஆதார் கார்டு இல்லாததால் சிம் வாங்க முடியவில்லை. நாங்கள் விஜய்யை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். அவர் சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு செல்போன் கடைக்கு அருகில் சிம் வாங்க முயற்சி செய்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் திட்டமிட்டு விஜய்யை கோயம்பேட்டில் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 700 கிராம் வெள்ளியை மீட்டுள்ளோம். விஜய் மீது ஐபிசி பிரிவு 457-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நகைக்கடையில் இருந்து மொத்தமாக 5.1 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டது. இன்னும் 20 முதல் 30 கிராம் நகையை தான் மீட்க வேண்டும். அதற்கும் நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
இந்த வழக்கின் ஆரம்பத்தில் எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. ஆனால் கோவை முழுவதும் இருந்து சுமார் 47 அதிகாரிகள் கடினமாக உழைத்துள்ளார்கள். இந்த சம்பவம் ரத்தினபுரியில் நடந்திருந்தாலும், சிட்டி முழுவதும் இருந்து போலீஸ் அதிகாரிகள் பணியாற்றியுள்ளார்கள்.
இந்த வழக்கில் மக்களும் போலீசுக்கு உதவியாக இருந்துள்ளார்கள். ஒரு சில க்யூ பிரிவு போலீசாரும் தர்மபுரி போலீசாரும் உதவி செய்தார்கள். இந்த வழக்கில் உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல்… அண்ணாமலை கண்டனம்: அறநிலையத்துறை விளக்கம்!
ஓடும் ரயிலில் பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது!
kovai jos alukkas robbery