பயனர்களின் இருப்பிட தகவல்களை அனுமதியின்றி சேகரித்ததாக கூகுள் நிறுவனத்திற்கு கலிபோர்னியா நீதிமன்றம் ரூ.700 கோடி அபராதம் விதித்துள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் கூகுள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூகுள் தனது லோகேஷன் ஆக்சஸ் மூலம் பயனர்களின் இருப்பிட விவரங்களை கண்காணிக்கும். இதன் மூலம் பயனர்கள் எளிதில் தங்களுக்கு வேண்டிய இடங்களுக்கு செல்லவும், தங்கள் பகுதியின் வானிலை உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ள முடியும். பயனர்கள் தங்களது லோகேஷன் ஷேரிங்கை ஆஃப் செய்தால் கூகுள் அவர்களின் இருப்பிடத்தை கண்காணிக்காது.
இந்தநிலையில் கூகுள் நிறுவனம் பயனர்களின் அனுமதியின்றி இருப்பிட தகவல்களை கண்காணித்து சேமித்து வைக்கிறது என்று கலிபோர்னியா அட்டார்னி ஜெனரல் ராப் போன்டா கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கூகுள் நிறுவனத்திற்கு 93 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தி கார்டியன் பத்திரிகைக்கு ராப் போன்டா அளித்த பேட்டியில், “கூகுள் நிறுவனம் லோகேஷன் ஷேரிங்கை ஆஃப் செய்தால் பயனர்களின் இருப்பிட விவரத்தை கண்காணிக்காது என்று தெளிவுபடுத்துகிறது. ஆனால் வணிக நோக்கத்திற்காக பயனர்கள் லோகேஷன் ஷேரிங்கை ஆஃப் செய்தாலும் இருப்பிட விவரத்தை தொடர்ந்து கண்காணிக்கிறது என்பது எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு கூகுள் பொறுப்பேற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கூகுள் செய்திதொடர்பாளர் ஜோஸ் கேஸ்டண்டா கூறும்போது, “சமீபத்தில் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டோம். பல ஆண்டுகளுக்கு முன்பு மாற்றிய காலாவதியான தயாரிப்பு கொள்கையின் அடிப்படையில் லோகேஷன் ஷேரிங் சிஸ்டத்தை மாற்றி அமைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
ஜவான்: பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
கொரோனாவை விட பல மடங்கு ஆபத்தானது நிபா வைரஸ்: ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை