பாமக தலைவர் அன்புமணியை மையமாக வைத்து நெய்வேலியில் சில வாரங்களுக்கு முன்புதான் சர்ச்சை வெடித்தது. என்.எல்.சி.க்கு எதிராக அன்புமணி நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததாக பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் அன்புமணி சென்ற கான்வாயில் ஒரு கார் மீது ஆட்டோ ஒன்று திடீரென மோதியிருக்கிறது. அன்புமணி உயிருக்குக் குறிவைத்து விஷமிகள் நடத்திய சதி என்று பாமகவினர் பேச… வடமாவட்டங்களில் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
என்ன நடந்தது?
செப்டம்பர் 14 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி பண்ருட்டி, நெய்வேலி ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளைக் கூட்டி களப் பணியாளர்கள் கூட்டங்களை நடத்தினார் பாமக தலைவர் அன்புமணி.
முதல் கூட்டம் காலையில் கடலூர் சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்திலும் இரண்டாவது கூட்டம் மாலையில் காடம்புலியூர் தனியார் திருமண மண்டபத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடலூர் நிகழ்ச்சிக்கு காலை 11.30 மணிக்கு வந்த அன்புமணி நிர்வாகிகளிடம் பேசிவிட்டு அனைவருடனும் போட்டோ எடுத்துக் கொண்டு மாலை 3.50 க்குப் புறப்பட்டார்.
சர்க்யூட் ஹவுஸில் இரண்டு மணி நேரம் ஓய்வு எடுத்துவிட்டு மாலை 5.40 மணிக்கு காடம்புலியூர் நிகழ்ச்சிக்கு புறப்பட்டார். போகும் வழியில் காராமணிக்குப்பம் அருகில் குறுகிய இடத்தில் அன்புமணியின் கான்வாய் சென்று கொண்டிருக்க… அதில் வந்த பாமக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் காரின் மீது திடீரென உரசியது எதிரே வந்த ஓர் ஆட்டோ. முத்துகிருஷ்ணனுடைய காரின் வலது புறக் கண்ணாடியில் இடித்து விட்டது அந்த ஆட்டோ. உடனடியாக இந்த சம்பவம் பாமகவினர் மத்தியில் தீயாகப் பரவியது.
இந்த சம்பவத்துக்கு பிறகு நடந்த காடம்புலியூர் கூட்டத்தில் பேசிய மாசெ. முத்துகிருஷ்ணன், “பாமக தலைவர் அன்புமணிக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. இதோ சில நிமிடங்களுக்கு முன்பு கூட நமது தலைவரை குறிவைத்து கான்வாயில் ஒரு ஆட்டோ புகுந்துவிட்டது. அந்த ஆட்டோ என் காரின் மீது மோதியது” என்று கூற நிர்வாகிகள் பரபரப்பாக இதுகுறித்து விவாதிக்க ஆரம்பித்தார்கள். அன்புமணி மீது தாக்குதல் முயற்சியா? என்றெல்லாம் தகவல்கள் பரவின. பாமக நிர்வாகிகள் போலீஸிடமும் இதுபற்றி போன் செய்து தெரிவித்துள்ளார்கள்.
உடனடியாக தகவல் அறிந்த கடலூர் எஸ்.பி. ராஜாராம், பாமக தலைவர் அன்புமணியின் கான்வாயில் ஆட்டோ மோதிய சம்பவம் குறித்து டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர்களிடம் கேட்டிருக்கிறார். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை முழுமையாக உடனே ஆராயுங்கள் என்று உத்தரவிட்டார்.
எஸ்.பி. உத்தரவை அடுத்து அந்தப் பகுதியில் ஒரு கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்ததை ஆராய்ந்தனர் போலீஸார். அதில் அன்புமணி கார் கான்வாயில் சென்ற மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் கார், வலது பக்கம் ஏறிச் செல்ல முயன்றபோது எதிரில் வந்த ஆட்டோவின் கண்ணாடி இடித்துள்ளது. அவ்வளவுதான் சதிவேலை ஏதும் இல்லை என உறுதி செய்தனர் காவல் துறையினர். இதை அன்புமணியிடமும் தெரிவித்திருக்கிறார்கள்.
நாம் பாமக மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணனைத் தொடர்பு கொண்டு கேட்டோம். “நான் சென்ற காரில் ஆட்டோ மோதியது சதிவேலையாக இருக்குமா என சந்தேகப்பட்டோம், அதைப்பற்றி போலீஸாரிடம் தெரிவித்தோம். அவர்களும் விசாரித்தனர். அதன் பிறகு… சதிவேலை இல்லை எதுவும் இல்லை. எதிர்பாராமல் நடந்த விபத்துதான் என்று விளக்கம் அளித்தனர். மற்றபடி எதுவும் இல்லை” என்றார்.
சிசிடிவி கேமரா பதிவாலும் போலீஸாரின் உடனடி விசாரணையாலும் கடலூரிலும் வட மாவட்டங்களிலும் நிகழ இருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்று போலீஸாரே நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.
–வணங்காமுடி
ED-யின் பொறுப்பு இயக்குநர்: யார் இந்த ராகுல் நவீன்?
ஜவான்: பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?