பொங்கலை முன்னிட்டு இன்று நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த் ராஜ் என்ற வீரர் காளை முட்டியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை அன்று மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாள் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
அதன்படி மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினமான இன்று (ஜனவரி 16) காலையில் பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு சுற்றுகளாக மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கும் வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுகளிலும் களமிறங்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 9 காளைகளை தழுவி 3ம் இடத்திலிருந்த பாலமேடு கிழக்கு தெருவைச் சேர்ந்த அரவிந்த் ராஜ் என்ற மாடுபிடி வீரரை காளை குத்தியதில் வலது பக்க வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
எனினும் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த அரவிந்த் ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆளுநருக்கு எதிராக தீர்மானம் : குருமூர்த்தி வெளியிட்ட பகீர் தகவல்
அதிமுக, பாஜகவினருக்கு திமுகவின் பொங்கல் பணம்!