ஊட்டி கொடைக்கானலுக்கு செல்ல இ பாஸ் நடைமுறையை கொண்டு வர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, “ஊட்டிக்கு தினமும் 11,500 கார்கள் 1300 வேன்கள் 600 பேருந்துகள் மற்றும் 6500 இரு சக்கர வாகனங்கள் என 20 ஆயிரம் வாகனங்கள் வருகிறது” என்று நீதிமன்றத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்தது.
இதை விசாரித்த நீதிபதிகள் ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் ஊட்டி கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் வரை இடைக்கால நடவடிக்கையாக இ பாஸ் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளது.
எனினும் உள்ளூர் மக்களின் வாகனங்கள், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் வணிக வாகனங்கள் மற்றும் விவசாய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு உரிய அறிவிப்பை வெளியிட்டு இ பாஸ் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இ பாஸ் நடைமுறையை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது.
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் பிரத்தியோக இணையதளம் ஒன்றும் துவங்கப்பட இருப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
விரைவில் இ பாஸ் நடைமுறைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இ பாஸ் தொடர்பாக கொடைக்கானல் நகராட்சி ஆணையர் சத்தியநாதன் கூறுகையில், “கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நாள் அன்று 2091 வாகனங்கள் கொடைக்கானலுக்குள் வந்தன. இது ஏப்ரல் 20-ம் தேதி 2377 ஆக இருந்தது. ஏப்ரல் 21ஆம் தேதி 1610 ஆக குறைந்தது. நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர்,“இ பாஸ் மூலம் மலைப்பகுதிக்கு எந்த வகையான வாகனங்கள் வருகின்றன. வாகனத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் தங்கும் இடம், எத்தனை நாட்கள் தங்குகிறார்கள் என்பதை நகராட்சியால் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். இந்த விவரங்கள் அவசியமானது. ஏனென்றால் இது போக்குவரத்து மேலாண்மை மற்றும் கழிவு மேலாண்மைக்கு உதவும்” என்றும் தெரிவித்துள்ளார்.
“உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பல ஹோட்டல்களில் முன்பதிவு குறைந்துவிட்டதாகவும், இ-பாஸ் நடைமுறைகள் எல்லாம் வார இறுதி நாட்களில் மட்டுமே பொருந்தும்” என்றும் கொடைக்கானலில் ஹோட்டல் நடத்தி வரும் அஜயன் தெரிவித்துள்ளார்.
மற்றொரு ஹோட்டல் உரிமையாளரான ரஞ்சித், “சுற்றுலா காலத்தில் தான் பணம் சம்பாதிக்க முடியும். இ-பாஸ் முறை கொண்டு வந்தால் அது வருமானத்தை பாதிக்கும்” என்று கூறியுள்ளார்.
இ பாஸ் குறித்து உள்ளூர் வாசிகள் தரப்பில் கூறுகையில், ” எங்களுக்கு கிடைக்கும் வழக்கமான நீர் கூட கிடைப்பதில்லை. தற்போது வெப்பம் அதிகரித்து வருவதால் மலைப்பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.
இரவு நேரங்களில் ஏரியில் உள்ள நீரை பம்பு மூலம் ஹோட்டல்காரர்கள் எடுக்கிறார்கள்.
ஆனால் இ பாஸ் நடைமுறை இங்கு வசிக்கும் மக்களுக்கு படிப்படியாக தண்ணீர் வழங்க உதவும். அதேபோன்று ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கான நீர் விநியோகத்திற்கும் நகராட்சிக்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் தண்ணீரையும் சேமிக்க முடியும்” என்கிறார்கள் நாயுடுபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர்வாசி மக்கள்.
இ பாஸ் மூலம், மலை பகுதிகளில் சுற்றுச் சூழலை பாதுகாத்து, உள் கட்டமைப்பை மேபடுத்தமுடியும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தகவல் – நன்றி – தி இந்து
பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு பறந்தது எப்படி? வெளியுறவுத்துறை புது விளக்கம்!
திருவிழா நடத்துவது யார்? தீவட்டிப்பட்டியில் பற்றி எரியும் தீ!