அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள ஒன்பது சுங்கச்சாவடிகளில் பயனர் கட்டணம் 40 சதவிகிதம் குறைக்கப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் சுங்க கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு வருவதாக திமுக எம்.பி. வில்சன் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியிருந்தார்
திமுக எம்.பி வில்சன் கடிதத்திற்குப் பதிலளித்துள்ள நிதின் கட்கரி
“தமிழகத்தில் 55 சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலைத் துறை பராமரித்து வருகிறது. அதில் 23 சுங்கச்சாவடிகள் பொது நிதியுதவி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது.
மற்ற 22 சுங்கச்சாவடிகள் தனியார் நிறுவனத்தை உள்ளடக்கிய பில்ட் ஆப்பரேட்டர் ட்ரான்ஸ்பர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008-ன் படி பொது நிதியுதவி திட்டங்களின் கட்டப்பட்ட சுங்கச்சாவடிகளுக்கு 40 சதவிகிதம் கட்டணம் குறைக்கப்படும்.
மேலும், அந்த சுங்கச்சாவடிகளில் திட்டச் செலவை திரும்பப் பெற்றால் மட்டுமே இந்த கட்டணத்தை குறைக்க முடியும் என்று இந்த விதி கூறுகிறது.
அதன்படி 23 சுங்கச்சாவடிகளில் 9 இடங்களில் மட்டுமே திட்டச் செலவு மீட்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 9 சுங்கச்சாவடிகளில் மட்டுமே கட்டணத்தை குறைக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி வில்சன் தனது கடிதத்தில், “தேசிய நெடுஞ்சாலை துறை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வசூல்களை பகுப்பாய்வு செய்யவும் தணிக்கை செய்யவும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்.
60 கி.மீ தொலைவிலுள்ள சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த கட்காரி, “மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சிக்கலை தீர்க்க முடிவு செய்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.
நிதின் கட்கரி தெரிவித்தபடி தமிழகத்தில், தாம்பரம் – திண்டிவனம் நெடுஞ்சாலையில் உள்ள பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடி, சென்னையில் உள்ள வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடி, சென்னை – தடா நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி, சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், சென்னசமுத்திரம் சுங்கச்சாவடி, மதுரை – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள பூதக்குடி, சிட்டம்பட்டி சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் முதல் 40 சதவிகிதம் கட்டணம் குறைக்கப்படும்.
செல்வம்
இலவச வேட்டி, சேலை: இந்த ஆண்டு எப்படி இருக்கும் தெரியுமா?
பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு? – 6 பேர் வீடுகளில் அதிரடி சோதனை!