தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக 102 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களில் 90 பேரிடம் ரகசியமாக காவல்துறை சோதனை மற்றும் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தீவிரவாத சதித்திட்டம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்த நிலையில், முதலமைச்சர் தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்திற்கு பிறகு கோவை குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய் முகமைக்கு மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார்.
அதன்பிறகு அந்த வழக்கை என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கினர்.
கார் குண்டு வெடிப்பு விவகாரத்திற்கு பிறகு மாநிலத்திற்கு என்று பிரத்தியேக தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்குவதற்கு முன்னோட்டமாக தமிழகம் முழுவதும் தீவிரவாத மற்றும் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பவர்களை அடையாளம் காணும் பணி நடந்தது.
இதில் 102 நபர்கள் அடையாளம் காணப்பட்டு, அதில் 90 நபர்களிடம் ரகசிய சோதனை மற்றும் விசாரணையை தமிழக போலீசார் நடத்தி முடித்துள்ளனர்.
அதன்படி நேற்று(நவம்பர் 10) சென்னையில் ஐந்து இடங்களில் சோதனையானது நடைபெற்று மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக காவல்துறைக்கு என்று தனியாக தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்குவதற்கு முன்னோட்டமாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டு இருப்பதாக தமிழக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காவல் துறை கூடுதல் இயக்குனர் அல்லது ஐஜி தலைமையில் இந்த பிரிவு விரைவில் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
6 பேர் விடுதலை : சட்ட போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி – முதல்வர்
மும்முனை போட்டி: நாளை இமாச்சலப் பிரதேச தேர்தல்!