மகனுக்கு பதவி: மாவட்ட செயலாளர்களுக்கு பணிந்த வைகோ

politics

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (அக்டோபர் 9 )ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி தனது சொந்த கிராமமான கலிங்கப்பட்டியில்… தனது மகன் துரை வைகோவுடன் சேர்ந்து வாக்களித்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ தனது மகன் துரை அரசியலுக்கு வருவது பற்றி மனம் திறந்து பேசினார்.

கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி வைகோவின் பிறந்தநாளை ஒட்டி ஒரு நாள் முன்னதாக இருபத்தி ஒன்றாம் தேதியே சென்னை எழும்பூரில் மதிமுகவின் வடசென்னை மாவட்ட செயலாளர் ஜீவன் ஒரு விழாவை நடத்தினார். வைகோவின் இந்த பிறந்தநாள் விழாவில் அவரது மகன் துரை வைகோ கலந்துகொண்டு கேக் வெட்டினார். இதைய டுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வைகோவின் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்து அந்தந்த மாவட்ட செயலாளர்கள் துரை வைகோவை தங்கள் மாவட்டத்திற்கு வருமாறு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனிடையே துரை வைகோ ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி முதல்முறையாக கலிங்கப்பட்டி உள்ளடக்கிய குருவிகுளம் ஒன்றியத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

வரும் 20ஆம் தேதி மதிமுகவின் தலைமை அலுவலகமான தாயகத்தில் மாவட்ட செயலாளர்கள் உயர்நிலை குழு கூட்டம் வைகோ தலைமையில் நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் துரை வைகோ மதிமுகவின் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்ற குரல்களை வலியுறுத்துவதற்கு பல மாவட்ட செயலாளர்கள் தயாராகி வருகிறார்கள்.

இந்த சூழலில் இன்று தனது மகனுடன் வாக்களிக்க வந்த வைகோ செய்தியாளரிடம் பேசுகையில்…என் மகன் அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் நான் 56 ஆண்டுகள் அரசியலில் ஈடுபட்டு எனது வாழ்க்கையை ஓரளவு அழித்துக்கொண்டேன். இது என்னோடு போகட்டும் என்று நினைக்கிறேன். ஆனால் எனக்குத் தெரியாமலேயே என் மகனை பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளுக்கும் அழைத்துச் செல்கிறார்கள்.

பிற கட்சி தலைவர்களின் வாரிசுகள் அரசியலுக்கு வருவது போல் துரையும் வரவேண்டுமெனறு எங்கள் கட்சியிலேயே பலபேர் என்னிடம் கேட்கிறார்கள். இதில் எனக்கு விருப்பமில்லை என்றாலும் இதுபற்றி கட்சி தான் முடிவு செய்யும்.

இருபதாம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்க இருக்கிறது. அங்கே இதுபற்றி முடிவெடுக்கப்படும்” என்று கூறினார் வைகோ.

நாம் மதிமுகவின் சில சீனியர்களிடம் இதுபற்றி பேசினோம்.

“துரை வைகோ அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை மதிமுகவில் முக்கிய பதவி வகிக்கப் போகிறார் என்பதை மின்னம்பலம் இதழில் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எழுதினீர்கள். அப்போதிலிருந்தே இந்த விவகாரம் கட்சிக்குள் விவாதிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாங்கள் துரை வைகோ பற்றி பேசிய போதும் வைகோ கண்டுகொள்வதில்லை.

ஆனால் இப்போது எனக்கு விருப்பமில்லை என்றாலும் இதில் கட்சி தான் முடிவு செய்யும் என்று வைகோ அறிவித்திருப்பது எங்களுடைய நெருக்கடியால் தான்.

வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியத்தில் துரை வைகோ கடந்த ஓரிரு வாரங்களாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு கிடைத்த வரவேற்பு பற்றி வைகோவுக்கும் தகவல் சென்றிருக்கிறது. அதனால்தான் தன்னுடைய விருப்பத்தை முன்னிலைப் படுத்தாமல் கட்சியின் விருப்பத்தை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறார். வரும் 20ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் துரை வைகோவிற்கு மதிமுகவில் முக்கிய பதவி அளிக்க வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுவோம்” என்கிறார்கள்.

**ஆரா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *