பொதுத்துறை பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு!

politics

தமிழகத்தில் அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களின் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முக்கிய சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார்.

அந்த சட்ட முன்வடிவு, அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள் சட்டப்பூர்வமான வாரியங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான கூடுதல் பணிகளை அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைப்பது ஆகும்.

அதில், ‘மேற்குறிப்பிட்ட பணியிடங்களின் சேர்க்கையானது டிஎன்பிஎஸ்சி மூலம் நடைபெறுவதன் மூலம் விண்ணப்பதாரர்களின் தேர்வு முறையில் ஒத்த தன்மையைக் கொண்டு வரமுடியும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், “அத்தகைய பணிகளுக்கு மாநிலத்தின் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களும் விண்ணப்பிப்பதை இயல செய்கிறது. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அத்தகைய ஆட்சேர்ப்பினை ஒப்படைப்பதன் மூலம் அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள் மற்றும் சட்டப் பூர்வமான வாரியங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளில் எழும் காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பில் நிபுணத்துவத்தைப் பேண முடியும்.

இந்த சட்ட முன்வடிவு அத்தகைய நிறுவனங்களின் ஆட்சேர்ப்பு தொடர்பான, இக்கட்டான வேலைகளிலிருந்து விடுவித்து அவர்களின் அடிப்படை வேலைகளில் கவனம் செலுத்த அதிக நேரம் வழங்குகிறது.

எனவே மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆட் சேர்க்கை தொடர்பான கூடுதல் பணிகளை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 321ஆம் பிரிவில் வழங்கியவாறு ஒரு சட்டத்தினை மேற்கொள்வதன் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்ட முன் வடிவு பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் ஆவின், போக்குவரத்து ஊழியர்கள் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து அரசுப் பணியிடங்களும் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் மட்டுமே நிரப்பப்படும்.

இந்த மசோதாவை அறிமுகம் செய்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தில் உள்ள எல்லா அரசு பணியிடங்களும் தமிழர்களுக்கு மட்டுமே என்று குறிப்பிட்டார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *