4 கோடி விவகாரம்… எஸ்.ஆர். சேகரிடம் 2 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை- நடந்தது என்ன?

அரசியல்

தேர்தல் கால கட்டத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களால் கொண்டு செல்லப்பட்ட   4  கோடி ரூபாய்  தாம்பரம் ரயிலில் பறக்கும் படை, தாம்பரம் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது.

இந்த விவகாரம் சிபிசிஐடி போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று (மே 21) தமிழ்நாடு பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரின் கோவை வீட்டுக்கு சிபிசிஐடி போலீஸார் சென்று சேகரிடம் விசாரணை நடத்தினர்.

இன்று காலை 9 மணிக்கு சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினரும்,  கோவை சிபிசிஐடி அதிகாரிகள் குழுவினரும், லோக்கல் போலீஸாரும் சேகர் வீட்டுக்குச் சென்றனர்.

11 மணி வரை அவர்கள் விசாரணை நடத்திவிட்டுச் சென்றனர். இதன் பின் பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.

“தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பிடிபட்டது தொடர்பாக நேற்று (மே 20) எனக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பினார்கள். ஜூன் 1-ஆம் தேதி வரை கட்சி தொடர்பான நிகழ்ச்சிகள் இருக்கிறது. அதனால் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று நேற்று மதியம் 1.15 மணிக்கு சிபிசிஐடிக்கு கடிதம் எழுதி கொடுத்தேன்.

அதை ஏற்றுக்கொண்டது சிபிசிஐடி. ஆனால் இன்று  நான் வெளியூர் நிகழ்ச்சிக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தபோது, சட்டத்திற்கு புறம்பாக நோட்டீஸ் மற்றும் தகவல் எதுவும் கொடுக்காமல் எனது வீட்டிற்கு விசாரிப்பதாக காலை 9 மணிக்கு வந்தார்கள்.

வந்த போலீஸ் அதிகாரிகள் அனைவரையும் உபசரித்து உட்கார வைத்தேன்.  நான் அவர்களுக்கு சட்டப்பூர்வமாக மரியாதை கொடுத்து அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி அனுப்பி வைத்தேன்.

தமிழ்நாடு அரசின் அழுத்தம் காரணமாக, சென்சேஷன் உருவாக்க வேண்டும் என போலீஸை அவர்களுடைய ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சிபிசிஐடி விசாரணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளோம். நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

அதற்கு முன்பாக விசாரணை நடத்திவிட வேண்டும் என்பதற்காகவே சென்னையில் இருந்து திட்டமிட்டு சிபிசிஐடி குழுவினர் நேற்றே புறப்பட்டு இன்று காலை 9 மணிக்கெல்லாம் என் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்.

பாஜக மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் எண்ணம் வெளிப்படையாக தெரிகிறது. நாங்கள் விசாரணையை கண்டு பயந்து ஓடுபவர்கள் அல்ல.

நம் மடியில் கனமில்லை என்றபோது, சட்டத்திற்கு புறம்பாக எதையும் செய்யாதபோது நாம் விசாரணையை எதிர்கொண்டோம்.ஆனால், அரசாங்கத்தின் நோக்கம் என்பது ஹராஸ்மெண்ட், சென்சேஷனல் பண்ணுவதற்காகவே .

சென்னையிலிருந்து டிஎஸ்பி சசிதரன் தலைமையில் 5 போலீசார் வந்தனர். சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டனர். சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் சொன்னேன். ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டதற்கும் பாஜகவிற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்பதைச் சொன்னேன்” என கூறினார் எஸ்.ஆர். சேகர்.

சென்னை பசுமைவழிச் சாலையில் பாஜகவின் மாநில தொழில் பிரிவு தலைவர் கோவர்த்தனுடைய கட்டிடத்தில் இருந்து பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.  இதுகுறித்து ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் பணத்தைக் கொண்டு சென்ற நயினாரின் ஆட்களிடமும், கோவர்த்தனிடமும் விசாரணை நடத்தி பல விவரங்களை சேகரித்துள்ளனர்.

அதன் அடிப்படையிலேயே  கேசவ விநாயகன், எஸ்.ஆர். சேகர்  ஆகியோருக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர். கேசவ விநாயகன்,  விசாரணையில் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கேட்டு வழக்கறிஞர் மூலம் கடிதம்  எழுதியிருக்கிறார்.

இந்நிலையில் கோவை சென்று பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள் சிபிசிஐடி டீம்.

செல்வம் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம்… வீடியோ வெளியிட்ட இர்ஃபான்… சுகாதாரத் துறை நடவடிக்கை?

இளம் தலைவர் ராகுல்… சலசலப்பை கிளப்பிய செல்லூர் ராஜு

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *