காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி யை அதிமுக மாசெவும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு புகழ்ந்து கருத்து தெரிவித்திருப்பது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 நாட்களுக்கு முன் ராகுல் காந்தி டெல்லியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள உணவகம் ஒன்றில் மக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
உணவு அருந்திக் கொண்டே கல்லூரி மாணவிகளின் கேள்விகளுக்கும் ராகுல் காந்தி பதிலளித்தார். ராகுல் காந்தியின் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி உணவருந்தும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதில், “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் !!!” என ராகுல் காந்தியை புகழ்ந்திருக்கிறார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு தனி அணியாக போட்டியிட்டது. அதேநேரம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் இந்தியா கூட்டணியை கடுமையாக விமர்சித்தார். பாஜகவை கூட கடுமையாக விமர்சிக்காத எடப்பாடி, இந்தியா கூட்டணி என்பது ஒவ்வொரு சக்கரமாய் கழன்று ஓடும் காரை போல தடுமாறுகிறது என்றெல்லாம் கூறினார்.
இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்திருப்பது அரசியல் டிரெண்டில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்த்துகிறது என்று பலரும் சமூக தளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, தனியார் தொலைக்காட்சிக்கு செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில், “முன்னாள் பிரதமரின் மகன் என்று எந்தவித அலட்டலும் இல்லாமல், எளிமையாகவும், சாதாரணமாகவும் உணவகத்தில் அனைவருடனும் அமர்ந்து ராகுல் காந்தி உணவருந்தி உள்ளார். இது மிகவும் பாராட்டிற்குரியது.
ராகுல் காந்தி எளிமையான தலைவர் என்பதால் தான் பாராட்டினேன். வேறு எந்த காரணமும் இதில் இல்லை. இந்த கருத்தால் அதிமுகவுக்குள் எந்த சலசலப்பும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…