புனேவில் மதுபோதையில் 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதியதில் இருச்சகர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் தந்தையும் தொழிலதிபருமான விஷால் அகர்வால் இன்று (மே 21) கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் கல்யாணி நகர் பகுதியில் கடந்த மே 19-ஆம் தேதி அதிகாலை வேகமாக வந்த போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார், சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த அனிஸ் அவதியா மற்றும் அஷ்வினி கோஷ்தா தம்பதி தூக்கி வீசப்பட்ட நிலையில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காவல்துறையின் அறிக்கையின்படி, கார் குறுகிய பாதையில் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் சென்றது சிசிடிவி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது புனே காவல்துறையின் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சிறுவன் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக பேசிய புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார், “சிறுவன் தனது 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் அருகில் உள்ள பப்பிற்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டி உள்ளார்.
மகாராஷ்டிராவில் மது அருந்தும் வயது 25 என்பதால், சிறுவன் மது அருந்தியது தண்டனைக்குரிய குற்றமாகும். இதனால், சிறுவனுக்கு மது வழங்கியது தொடர்பாக பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்த விபத்தில், சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், காரை ஓட்டி வந்த தொழிலதிபரின் மகனுக்கு அடுத்த 14 மணி நேரத்தில் ஜாமீன் கிடைத்தது.
இந்த வழக்கில், ஜாமீன் மறுக்கும் அளவிற்கு குற்றம் தீவிரமானதாக இல்லை எனக் கருதி புனே அமர்வு நீதிமன்றம் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கியதாக தெரிகிறது.
மேலும், வழக்கு தொடர்பாக நீதிபதிகள், அந்த சிறுவனுக்கு பல நிபந்தனைகள் விதித்தனர். அதாவது, “15 நாட்கள் போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும். மனநல மதிப்பீடு மற்றும் சிகிச்சைக்கு செல்ல வேண்டும். சாலை விபத்துகள் மற்றும் தீர்வு என்ற தலைப்பில் 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரை எழுத வேண்டும்.
போதை ஒழிப்பு மையத்தில் சேர வேண்டும். போக்குவரத்து விதிகளைப் படித்து இது தொடர்பாக சிறார் வாரியத்திடம் விளக்க வேண்டும்.
கடைசியாக, எதிர்காலத்தில் விபத்து ஏற்படுவதை பார்த்தால் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும்” போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
இதையடுத்து, இன்று விபத்து ஏற்படுத்திய 17 வயது சிறுவனின் தந்தை தொழிலதிபர் விஷால் அகர்வால் புனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது புனே காவல்துறையினர் சிறார் நீதிச் சட்டத்தின் பிரிவு 75 மற்றும் 77ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு : கோவையில் என்.ஐ.ஏ ரெய்டு!
லூசிஃபர் 2 : கருப்பு உடையில் மாஸ் காட்டும் மோகன்லால் : புது போஸ்டர் இதோ!