ததும்பியெழுந்த தமிழ்ப் புதையல் !

politics

ஸ்ரீராம் சர்மா

திராவிடத் தமிழ்த் திருமண்ணின் பேராசான் பேரறிஞர் அண்ணா அவர்களால் “ஓவியப்பெருந்தகை” எனும் அங்கீகாரம் கொண்ட,

திருவள்ளுவர் திருவுருவம் அதனை, தன் தமிழாய்ந்த தூரிகையால் தன்னலமற்று வரைந்தளித்த கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களின் பிறந்த நாள் இன்று !

அவரது எளிய மகனாக மிகுந்த கூச்சத்தோடே இந்தக் கட்டுரையை எழுதத் துணிகிறேன். நிற்க.

ஆண்டு அது,1959.

தமிழ் மண்ணெங்கும் ஒரே பேச்சு.

**திருவள்ளுவர் தோன்றி விட்டார் ! **

பல்லாண்டுக்கால தனது ஓவிய முயற்சியின் பலனாக தமிழ் மொழியின் தலைமகனாம் திருவள்ளுவருக்கு, சாதி – சமய – மத – வர்க்க பேதமற்றதோர் கம்பீரமான – ஆழமான பொது உருவம் ஒன்றை மாயவரம் மதீனா லாட்ஜில் முழூ மூச்சாகத் தங்கி வரைந்து முடித்தார் கே.ஆர். வேணுகோபால் சர்மா என்னும் செய்தி…

அரசியல் – இலக்கிய – பத்திரிக்கை உலகமெங்கும் ஒரே குரலில் ஓங்கிக் கொண்டாடப்பட்ட தருணம் அது !

சேலம் ஜில்லா காமாட்சிப்பட்டி கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட கே.ஆர். வேணுகோபால சர்மா பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்கும், கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் நெருங்கிய நண்பராக இருந்தார் என்பது கூடுதல் பரபரப்பானது.

1959 ன் இறுதியில் கே.ஆர். வேணுகோபால் சர்மாவின் அன்றைய சென்னை இல்லத்தில் திருவள்ளுவரின் பொலிவு மிகு திருவுருவம் காட்சிக்கு வைக்கப்பட்டது.

அதைக் காணவும், வாழ்த்திப் பேசவும் அறிவுலகம் திரண்டு வந்தது.

பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – அன்றைய மத்திய அமைச்சரான டாக்டர் சுப்பராயன், கண்ணதாசன், ஓவிய மேதை மாதவன், எளிமைச் சிகரம் கக்கன், தோழர் ஜீவா, தத்துவமேதை டிகே சீனிவாசன், நாவலர், பேராசிரியர், சி.பி. சிற்றரசு, பன்மொழிப் புலவர் அப்பாதுரையார், முகவை ராஜமாணிக்கம், ஆன்மீகச் செம்மல் கிருபானந்த வாரியார், இசை மேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ, பி அண்ணாமலை, கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன், வரலாற்றுச் சிற்பி சாண்டில்யன், சிலம்புச் செல்வர் மபொசி, பிரிட்டன் பெண்ணிய எழுத்தாளர் மோனிகா ஃபெல்ட்டன், இன்னும் பல்லோரும்…

தங்கள் வாழ்த்துரைகளை வழங்கிப் பேசப் பேச, மொத்தமும் அன்றைய SPOOL TAPE ல் ரெக்கார்ட் செய்யப்பட்டது.

( கடந்த ஆறு தசாப்தங்களாக, என் உயிருக்கும் மேலாக பாதுகாத்து வந்த அந்த SPOOL TAPE ல் அடங்கிய பொக்கிஷக் குரல்கள் அனைத்தையும், ஈடு இணையற்ற அறிவுக் கருவூலமான ரோஜா முத்தையா நூலக நிர்வாகி சுந்தர் அவர்கள், அரும்பாடுபட்டு டிஜிட்டைஸ் செய்து மீட்டெடுத்தப் பாங்கு, தமிழுலகின் மகிழ்ச்சிக்கும் – நன்றிக்கும் உரியது ) .

காண்போர் மனமெல்லாம் கொண்டு கொண்டாடும்படிக்குத் தன் தமிழாய்ந்த தூரிகைத் திறமையால் திருவள்ளுவர் திருவுருவத்தை சமைத்துத் தந்த கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களை மனதார வாழ்த்திய பேரறிஞர் அண்ணா அவர்கள், “ஓவியப் பெருந்தகை” என்னும் பட்டத்தை அளித்துக் கௌரவித்தார் !

1960 ல் அன்றைய அமைச்சர் டாக்டர் சுப்பராயன் அவர்கள், ஒன்றிய அரசிடம் உணர்ந்து வலியுறுத்த, திருவள்ளுவர் திருவுருவம் தபால் தலையாக வெளியிடப்பட்டது.

அது, 1961.

கோவையில் கூடிய அஞ்சல் தலை ஊழியர்கள் மாநாட்டில், லட்சம் பேர் திரண்ட அந்த நிகழ்வில், எதிர்கட்சி தலைவரான போதும் பேரறிஞர் அண்ணா அவர்களை சிறப்புரை ஆற்ற அழைத்திருந்தார்கள் தோழர்கள் !

அந்த மாபெரும் மாநாட்டு மேடையில் ஓவியப் பெருந்தகை கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களை மேடையில் ஏற்றி, அவருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவம் செய்த பேரறிஞர் அண்ணா, அதன் பின் தோழர்களிடையே பேசிய அந்த வீரியப் பேச்சு, அரசியல் நாகரீகத்தின் கொடுமுடி எனலாம்.

( இதுவரை வெளிப்படாத அண்ணாவின் அந்தப் பேச்சும் – அதற்கு முன்பு வேணுகோபால் சர்மா பேசிய பேச்சும் டிஜிட்டைஸ் செய்யப்பட்டுள்ளது ).

ஆண்டு 1964.

அது, காங்கிரஸ் ஆட்சிக்காலம். அன்றைய முதல்வராக பெரியவர் பக்தவத்சலம் இருந்தார்.

வாராது வந்தமைந்த திருவள்ளுவர் திருவுருவத்தை காங்கிரஸ் அரசாங்கம் கண்டு கொள்ளாமல் விட்டு விடுமோ என்னும் தயக்கம் இயல்பாக எழுந்தது.

எந்தவோர் நற்செயலுக்கும் பிள்ளையார் சுழி போட்டு விடும் நாவன்மை படைத்த கலைஞர் அவர்கள் அன்று எம்.எல்.ஏ வாக வீற்றிருந்தார்.

சட்டசபையில்,தன் இருக்கையில் இருந்து துள்ளி எழுந்த அவர் பேசினார்…

“திருவள்ளுவருக்கு பொது உருவம் ஒன்று சமைக்கப்பட்டு விட்டதை இந்த சபை அறியும். அதனை இந்த சட்டசபையில் திறந்து வைக்க வேண்டும்”.

அவருக்கு அன்றைய முதல்வர் பதிலுரைத்தார்.

“உறுப்பினர் விரும்பினால் அவர் முயற்சியிலேயே இதை செய்யலாமே ?”

அதற்கென்றே காத்துக் கொண்டிருந்தவர் போல் கலைஞர் பதிலுரைத்தார்.

“அதற்கென்ன, திருவள்ளுவரை வரைந்த கே.ஆர். வேணுகோபால் சர்மா எங்கள் நண்பர்தான். அரசாங்கம் அனுமதித்தால் எங்கள் செலவிலேயே திருவள்ளுவர் திருவுருவத்தை இங்கே நிர்மாணிக்கத் தயார்..”

( சட்டசபை பொன்விழா பேச்சில் கலைஞர் இதை குறிப்பிட்டிருக்கிறார் )

இப்படிச் சொன்னதும் விழித்துக் கொண்ட அரசாங்கம், அன்றைய துணை ஜனாதிபதி ஜாகீர் உசேன் அவர்களின் கரங்களால் திருவள்ளுவர் திருவுருவத்தை சட்டசபையில் 1964 ஆம் ஆண்டில் திறந்து வைத்தது.

தன் பங்குக்கு ஓவியப் பெருந்தகை கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களுக்கு சட்டசபையில் துணை ஜனாதிபதி கரங்களால் பொன்னாடை போர்த்தியது.

அடுத்த மூன்றாண்டுகளில் 1967 ல் பேரெழுச்சியோடு திராவிட முன்னேற்றக் கழகம் அரியணை கண்டது.

ஆட்சி கண்ட மூன்றே மாதங்களில் முதலைமைச்சர் அண்ணா ஓர் அரசாணையை போட்டார். அதன்படி, அரசாங்கத்தின் அனைத்து ஸ்தாபிதங்களிலும் திருவள்ளுவர் திருவுருவம் இருக்க வேண்டும் என்றார்.

**எங்கெணும் நிறைந்தார் கம்பீரமான திருவள்ளுவர் ! **

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, சட்டசபையில் திருவள்ளுவருக்காக முதல் குரல் கொடுத்த கலைஞரின் பக்கம் நன்றியோடு நின்றார் கே.ஆர். வேணுகோபால சர்மா.

இடைப்பட்ட அரசாங்கம் வேணுகோபாலரையும் அவரது திருவள்ளுவர் திருவுருவத்தையும் நாகரீகமின்றி புறக்கணித்தது. அவர் அசரவில்லை.

அவருக்கென்று கடைசியாக இருந்த இரண்டு கிரவுண்டு நிலத்தையும் அரசாங்கம் எடுத்துக் கொண்டது. அந்தப் போதும் தளரவில்லை. அதற்கான ஈட்டுத் தொகையினையும் அவர் பெற்றுக் கொள்ளவில்லை.

1986 ல் கலைஞர் “குறளோவியம்” கண்டார். அதன் வெளியீட்டு விழா மேடையில், குறளோவிய படைப்புக்கான முதல் காப்புரிமைத் தொகையான ரூபாய் பத்தாயிரத்தை சந்தனப் பேழையில் வைத்து,

“ஓவியப் பெருந்தகைக்கான காணிக்கை இது” என்றபடி கையளித்த முத்தமிழறிஞர், முரசொலியில் எழுதி மரியாதை செய்தார்.

1989 ல், கலைஞரின் ஆட்சிக் காலத்தில், “ஓவியப் பெருந்தகை” கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்கள் தன் 81 ஆம் அகவையில் மண்ணுலகம் நீத்து மறைந்தார்.

திருவல்லிக்கேணி மாடி வீட்டில் அவரது பூத உடலைக் கண்டுக் குலுங்கிய இனமானப் பேராசியர் அவர்கள், “ஐயகோ, ஓர் திராவிட சூரியன் மறையக் கண்டோமே…’ என தினத்தந்திக்கு பேட்டி அளித்தார்.

அந்த ஆண்டே திருவள்ளுவர் திருவுருவம் அரசுடைமை ஆனது. அரசுடைமை ஆக்கப்பட்ட ஒரே ஓவியம் என்ற பெருமையைக் கொண்டது.

இதுதான் வரலாறு !

திருவள்ளுவர் திருவுருவப் படைப்பில் திராவிடத் தலைவர்கள் தலையிட்டு மாற்றம் சொன்னார்கள். அதற்கு துணை போனார் வேணுகோபால் சர்மா எனப் பொருந்தாப் புரளியை பலர் பேசி திரிகின்றார்கள். அது தவறான குற்றச்சாட்டு.

அன்று அவரது படைப்புள்ளத்தை கொண்டாடிய அத்துனை தலைவர்களும் திராவிடத் தலைவர்களாகவே இருந்தார்கள். அவர்கள்பால் தன்னிச்சையாக தன்னை இழந்து நகர்ந்தவர் வேணுகோபால் சர்மா என்பதே உண்மை !

ஆம், குழந்தையும் – தெய்வமும் மட்டுமல்ல கலைஞனும் கூட கொண்டாடும் இடத்தில் இருக்க விரும்புவதே இயற்கை !.

கடந்த காலங்களில், திருவள்ளுவர் திருவுருவம் குறித்து சகட்டு மேனிக்கு எத்தனையோ புரளிகள் ஆங்காங்கே எழுந்து அசிங்கப்படுத்தியதுண்டு. இன்று, மீட்டெடுக்கப்பட்டு விட்ட உண்மைக் குரல்கள் யாவும் அந்தப் பழிக் கூற்றுகளை சுக்கு நூறாக்கி விடப் போகிறது.

திருவள்ளுவரின் திருவுருவத்தை வாழ்த்திப் பேசிய மாமேதைகளின் வரலாற்றுக் குரல் பதிவு அனைத்தையும் ஆரக் கோர்த்து…

திராவிடத் தமிழ்த் திருமண்ணின் ஆகப்பெரும் வழித்தோன்றலாம் தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் விரைவில் ஒப்படைக்கப் போகிறோம்.

திருவள்ளுவர் திருவுருவத்தை எங்கெணும் வைத்தாக வேண்டும் என அண்ணா வழிதொட்டு உத்தரவு இட்டவரல்லவா இன்றைய முதல்வர் !

அவரையன்றி வேறு யாரால் உண்மை திருவள்ளுவரை உயர்த்திப் பிடிக்க முடியும் !

மீட்டெடுக்கப்பட்ட காலக் கருவூலத்தை முதல்வர் வெளியிடப் போகும் அந்த நன்நாளில்… திருவள்ளுவர் குறித்த முன்னோரின் ஈடு இணையற்ற குரல் வீச்சுகளை காதுறும் உலகார்ந்த தமிழ்மண் இறுமாந்து கொள்ளப் போகின்றது.

2022 ஆம் ஆண்டை, தமிழ் புதையல் ஒன்று ததும்பி எழுந்த ஆண்டாக வருங்காலம் குறித்துக் கொள்ளத்தான் போகின்றது.

முத்தமிழறிஞர் கலைஞரது அன்றைய உரையின் முத்தாய்ப்பை அப்படியே பதிந்து இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்

வாழிய வள்ளுவம் !

வாழிய திருவள்ளுவர் திருவுருவம் !

வாழிய வேணுகோபாலரும் !

**கட்டுரையாளர் குறிப்பு**

**வே.ஸ்ரீராம் சர்மா** – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *