ரவிக்குமார்
பிப்ரவரி 3 – பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள்.
இன்றைய அரசியல் சூழலில் நமக்கு மிகவும் பயன்படக்கூடியவை அண்ணாவின் சிந்தனைகள். நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைப்போல இன்று தமிழ்நாட்டில் சனாதன நச்சரவுகள் வீதியெங்கும் நெளிவதைப் பார்க்கிறோம். தமிழ்நாட்டின் உரிமைகள் ஒவ்வொரு நாளும் பறிக்கப்படுகின்றன, வடவர் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது.
நாம் உயிரினும் மேலானதாய்க் கருதும் தமிழ் மொழிக்குப் பேராபத்து சூழ்ந்துள்ளது. இந்தத் தீமைகளை எதிர்ப்பதற்கு அண்ணாவின் சிந்தனைகளைப்போல சிறந்த படைக்கலன் வேறொன்று இருக்காது. புறத்திலிருந்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான ஆயுதமாக மட்டுமல்ல, அகத்தில் இருக்கும் நோய்க்கிருமிகளை அகற்றுவதற்கான மருந்தாகவும் அண்ணாவின் சிந்தனைகள் இருக்கின்றன.
செல்வி ஜெயலலிதா அவர்கள் உடல் நலம் குன்றிய காலத்திலிருந்தே தமிழ்நாட்டை கொல்லைப்புற வழியாக பாஜகதான் ஆண்டு வந்தது. கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக அவர்களின் கருத்தியல் இங்கே கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி வந்துள்ளது. மதவெறியைப் பரப்பும் வேலையை சங்கப் பரிவார அமைப்புகளும், சாதி வெறியைப் பரப்புவதை பாஜகவின் கூட்டணிக் கட்சிகளும் செய்துவந்தன.
சமூகத்தில் சனாதன நஞ்சு பரவப் பரவ தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பிற்போக்கு சக்திகள் புத்துயிர் பெறத் தொடங்கிவிட்டன. திமுக, ஆட்சிக்கு வந்தபின்னர் அரசாங்க ஆதரவு சனாதனத்துக்கு இல்லாமல் போய்விட்டது என்றாலும் சமூகத்தில் அவர்களால் ஏற்றப்பட்ட வெறுப்பு என்னும் விஷம் இன்னும் வீரியமாகவே இருக்கிறது. அந்த நஞ்சை அகற்றுவதற்கு அண்ணாவின் சொற்களே அருமருந்து.
இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு 1948 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமைகள் அதிகரிக்கத் தொடங்கின. நாட்டுக்குக் கிடைத்த சுதந்திரம் நமக்கும்தானே சொந்தம் என்று நினைத்த ஆதிதிராவிட மக்கள் அதுவரை தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த ஆலயங்களுக்குள் சென்று வழிபட முற்பட்டார்கள். ஆனால் சனாதனிகள் அதைக் கடுமையாக எதிர்த்தார்கள். அந்த நேரத்தில் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை ஒன்று இன்று நினைவு கூரத்தக்கதாக இருக்கிறது.
அண்ணா அந்த உரையை ஆற்றிய 1948 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சாதிக் கொடுமைகள் எப்படியிருந்தன என்பதை அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த சுவாமி சகஜாநந்தரின் விவரிப்பிலிருந்து அறியலாம்.
சட்டமன்றத்தில் பேசும்போது ( 1948 மார்ச்) அவர் கூறியிருக்கும் செய்திகளைப் பாருங்கள்:
“ஹரிஜனங்களின் தீண்டாமையைப் போக்க சர்க்கார் சட்டம் கொண்டு வந்தார்கள். இன்னும் இது கிராமங்களில் சரியாக அமுலில் வரவில்லை. இந்த தீண்டாமை ஒழிப்பது என்பது காந்தியடிகளால் கொண்டு வரப்பட்டது. இப்பொழுது அவர் மறைந்துவிட்டார். யாத்திரைசெய்யும் ஹரிஜனங்கள் சத்திரம், ஹோட்டல் முதலிய வசதி இல்லாமல் கஷ்டப்பட்டார்கள். கஷ்டப்படுகிறவர்களுக்கு சௌகர்யம் செய்வதற்கு சிவில் தடை நீக்க சட்டம் கொண்டு வந்தார். இந்த சட்டம் கிராமங்களில் சரியாக அமுலுக்கு வரவில்லை.
ஆலய பிரவேச சட்டம் பெரிய ஆலயங்களில் அமுலுக்கு வந்துள்ளது. சிறிய கோவில்கள் மூடியே கிடக்கிறது. சீர்காழி தாலுகாவில் திருநகரி, திருவாலி முதலான இடங்களில் திறந்த ஒருநாள் தவிர மறுநாள் முதல் ஹரிஜனங்களை வரவேண்டாமென்று தடுத்துவிட்டார்கள். சட்டம் செய்திருக்கிறார்கள். ஆனால் கனம் ஸ்பீக்கர் அவர்கள்தான் பல கோவில்களைத் திறந்து விட்டிருக்கிறார்.
அவைகளிலும் இப்பொழுது ஹரிஜனங்களை அனுமதிக்கவில்லை. திறந்துவிட்ட திருநகரி, திருவாலி கோவில்களில் இவ்வாண்டு தை அமாவாசையில் நடக்க வேண்டிய கருட சேவையை நிறுத்திவிட்டார்கள். சட்டத்தை இயற்றியும் பலனை அனுபவிக்க முடியாமலிருக்கிறது.”
‘‘சத்திரம் சாவடி ஹோட்டல்கள் இவைகளில் இந்த சட்டம் இன்னும் பயனடையவில்லை. ஒழுங்காக நடத்த உள்ளூர் அதிகாரிகளுக்கு சர்க்கார் உத்தரவு போடவேண்டும்.” என்று சட்டமன்றத்தில் பேசிய சகஜாநந்தர், ‘‘ சில இடங்களில் போலீஸ்காரர்களால் ஹரிஜனங்களுக்குக் கெடுதல்கள் நடக்கிறது. திருச்சியிலிருந்து கூட ஒரு விண்ணப்பம் வந்திருக்கிறது. அங்கே ஹரிஜன பிள்ளைகள் கூட்டம் கூடினார்களாம்.
அதற்கு அவர்களைக் கட்டிவைத்து அடித்து சாப்பாடு தண்ணீர் இல்லாமல் செய்தார்களாம். தண்ணீரில் மண்ணுளிப்பாம்பு, மலம் இவைகளைப் போட்டு சாப்பிடச் சொன்னார்களாம்.” என்று தனது உரையில் பதிவு செய்திருக்கிறார் ( சாதி வெறிக்கும் மலத்துக்கும் 75 ஆண்டுகால தொடர்ச்சி!) அந்த கால கட்டத்தில்தான் அண்ணா தீண்டாமை குறித்த தனது உரையை நிகழ்த்தியுள்ளார்.
’ஊரெல்லாம் கோயில்களைக் கட்டி வைத்துவிட்டு அவற்றின் பெருமைகளை நாள்தோறும் பேசிக்கொண்டு அங்கு வழிபடுவதற்கு சிலருக்கு மட்டும் அனுமதி இல்லை எனச் சொல்வது எப்படி நியாயமாகும்?’ என அண்ணா அந்த உரையில் கேட்கிறார். “ ஆலயங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றின் அழகும் மகிமையும் பேசப்படுகின்றன. அங்கு சென்று சேமிப்பது இகபர சுகம் தரும் என்று பேசப்படுகிறது.
கோயில் இல்லா ஊரிலே குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. திருக்கோயிலை வலம் வராத கால் என்ன காலோ, ஐயனை சென்று காணாத கண் என்ன கண்ணோ என்ற பஜனைகள் நடக்கின்றன. தூய்மையின் இருப்பிடம் என்று கூறப்படுகிறது. இவ்வளவு கூறிவிட்டு, ஏடுகளை இதற்காக குவித்து விட்டு, இறைவனின் இல்லங்களை எங்கும் எழுப்பி விட்டு, அவற்றின் அருமை பெருமை அங்கு போக வேண்டியது அவசியம் போனால் ஏற்படும் பலன் ஆகியவற்றை பாட்டாகவும் கூத்தாகவும் படமாகவும் எடுத்துக்காட்டி விட்டு,
கேட்டதும் மக்களுக்கு ஒரு ஆவல் பற்று பாசம் ஏற்படும்படி செய்துவிட்டு, ஆசையை தட்டி எழுப்பி விட்டு -வீணையை மீட்டத் தொடங்கியதும் இசை கேட்க வருபவரின் காதுகளை அடைப்பது போல, எழில் மிகு சித்திரத்தை தயாரித்து காண வாரீர் என்று அனைவரையும் அழைத்து காணவரும் சிலரின் கண்களை கட்டியிருப்பது போல, பழச்சாற்றின் இனிப்பை கூறிக்கொண்டு பருகக் கொஞ்சம் தருக என்று கேட்பவனை விரட்டுவது போல – ஆலயங்களுக்கு மகிமையும் பலன் அளிக்கும் சக்தியும் இருப்பதை கூறிவிட்டு அங்கு வரக்கூடாது நுழையக்கூடாது என்று சிலரை அல்ல ஏறக்குறைய 8 கோடி மக்களை தடுத்து வருகிறோம்.”
என அண்ணா சுட்டிக் காட்டுகிறார். அதற்குக் காரணம் அப்படி அவமதிக்கப்படுகிறவர்கள் திருப்பி நம்மைத் தண்டிக்கும் சக்தியைப் பெறாத காரணத்தினால்தான் அப்படி செய்துகொண்டிருக்கிறோம் என்கிறார்.
”எந்த இந்து மதத்திலே அந்த மக்கள் இருப்பதாகக் கூறி பெருமைப்பட்டு புள்ளி விவரம் காட்டி குதிக்கிறோமோ அதே மதத்தில் இருக்கும் மக்களை மதத்தின் ஊற்றாகக் கருதப்படும் கோயிலிலே அனுமதிக்காமல் இருப்பது மனப் புண்ணை, ஆற்ற முடியாத புண்ணை ஏற்படுத்தி விட்டது” என்று வேதனைப்பட்ட அண்ணா, தீண்டாமைக் கொடுமையை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிடுகிறார்:
“நந்தனாரை, திருப்பனாழ்வாரை மக்களுக்கு கவனப்படுத்தியாகிவிட்டது; ஆவுரித்துத் தின்று உழலும் புலையரேனும் அவர் கண்டீர் யாம் வணங்கும் தெய்வமாமே’ என்று பாசுரம் பாடிப் பார்த்தாகிவிட்டது; ஜாதி மதங்களை பாரோம் உயர் ஜென்மம் இந்த தேசத்தில் எய்தினராயின் வேதியர் ஆயினும் ஒன்றே அன்று வேறு குலத்தவர் ஆயினும் ஒன்றே’ என்ற பாடலை எத்தனை எத்தனையோ ஆயிரம் மேடைகளில் பாடி காட்டி ஆகிவிட்டது;… எத்தனை மாநாடுகள் எவ்வளவு அறிக்கைகள், சத்தியாகிரகங்கள், உண்ணாவிரதங்கள், கிளர்ச்சிகள்- இந்த மாசு துடைக்க ஏற்பட்டன! ” என்று அடுக்கிவிட்டு பெருமூச்செறிகிறார் அண்ணா.
’ஆலயங்களிலே பல வகையான சீர்திருத்தங்கள் வேண்டும் என்று பேசுபவர்கள் கூட அங்கு ஆதிதிராவிடர்கள் வருவதைத் தடுக்கிறார்கள் என்பதையும், ஆதிதிராவிடர்களுக்கு கல்வி சுகாதார வசதி செய்த தர வேண்டும் என்று அன்புடன் பேசுகிறவர்கள் கூட அவர்களுக்கு கோயில் பிரவேசம் கூடாது’ என்று சொல்வதையும் அண்ணா வேதனையோடு சுட்டிக் காட்டுகிறார்.
ஆதிதிராவிட மக்களுக்கு இழைக்கப்படும் இந்தக் கொடுமைகளுக்கு அடிப்படையாக இருப்பது என்ன என்பதை அண்ணா சிறப்பாக விளக்கியிருக்கிறார்.
“இதற்குக் காரணம் என்னவென்றால் அவர்களுடைய மனநிலை – உபகாரம் செய்ய சம்மதிக்கிறார்கள், உரிமையைத் தருவது என்றால் சங்கடப்படுகிறார்கள். உபகாரம் செய்வது சுலபம், உரிமையைத் தருவது கஷ்டம். உபகாரம் செய்வதிலே காட்ட வேண்டிய தியாக உணர்ச்சி குறைவு, தீரமும் குறைவுதான். ஆனால், உரிமையைத் தருவதற்கு தியாக உணர்ச்சியும் தீரமும் அதிகமாகத் தேவை” என்று கூறிய அண்ணா,
”உபகாரத்தைப் பெறுபவருக்கும் தருபவருக்கும் இடையே ஏறத்தாழ அடிமை எஜமானன் என்ற நிலைமை தான் இருக்கும், உரிமை தருவது பெறுவது என்பது இந்த நிலை அல்ல. இருவருக்கும் சமநிலை சம அந்தஸ்து ஏற்படச் செய்கிறது. உபகாரம் ஐயோ பாவம் என்ற உணர்ச்சியின் விளைவு, உரிமை- ஏன்? என்ற முழக்கத்தின் விளைவு” என உபகாரத்துக்கும் உரிமைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை சிறப்பாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.
அண்ணாவின் மீது உண்மையான பற்றுகொண்டவர்கள் இதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஆதி திராவிட மக்களுக்கு அளிக்கப்படுபவை சலுகைகள் (உபகாரம்) அல்ல, அவை அவர்களது உரிமைகள் என்ற தெளிவு அவர்களுக்கு வேண்டும்.
ஆதி திராவிட மக்களை அனுமதிக்க மறுக்கும் கோயில்களில் எத்தகையவர்களெல்லாம் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதை அண்ணா விவரிக்கிறார்: “ஒழுக்கக் குறைவு உள்ளோர், அழுக்கு மனம் படைத்தோர், இழுக்கான வழி சொல்பவர்கள் ஆலயங்களில் நுழைய முடியாதபடி தடை உண்டா? இல்லை! ஆனால், ஆதிதிராவிடரை மட்டும் ஆலயத்துக்குள் வரக்கூடாது என்று தடுக்கிறோம் நியாயமா?” என்று கேள்வி எழுப்புகிறார்.
இந்த வாதங்களைக் கேட்டு மனம் மாறினாலும் சமூகத்தில் உள்ளவர்களைப் பார்த்து பயந்து ’ ஆனால்’ எனத் தயங்குகிறவர்களை நோக்கி அண்ணா கூறுகிறார், “ நண்பர்களே! ஆனால் என்பதை மறந்து, ஆகையால் தீண்டாமை கூடாது ஆலயப் பிரவேசம் அவசியம்தான் என்று அச்சத்தை விட்டுத் தீர்ப்பு அளியுங்கள்” என்று ஆணையிடுகிறார்.
1948 ஆம் ஆண்டில் அண்ணா இட்ட ஆணையை இன்று நினைவுபடுத்த வேண்டிய தேவை தமிழ்நாட்டில் இருக்கிறது. சேலத்துக்கு அருகிலுள்ள திருமலைகிரி என்ற ஊரில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாரியம்மன் கோயிலில் வழிபட வேண்டும் எனக் கேட்டதற்காக ஆதி திராவிட சமூகத்தவரை அந்த ஊரைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் எப்படியெல்லாம் வசைபாடி இழிவுபடுத்தினார் என்பதைக் காணொலியில் பார்த்தோம். திமுகவின் ஒன்றியச் செயலாளராக இருந்த அவரை உடனே கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்துவிட்டனர். காவல்துறையும் அவர்மீது உரிய சட்டங்களின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைதும் செய்துவிட்டது.
இது மாணிக்கம் என்ற தனிநபர் சார்ந்த பிரச்சனை அல்ல, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட அரசியல் களத்தில் பணியாற்றுகிறவர்களின் மனதில் சமத்துவ உணர்வு வேர்பிடிக்கவில்லை என்பதன் அடையாளம்.
அண்ணா சுட்டிக் காட்டியதுபோல ‘ உபகாரத்துக்கும் உரிமைக்கும் ‘ இடையிலான வேறுபாட்டை உணராததன் விளைவு. அதனால்தான் இன்னும் அரசாங்கத்தில்கூட ஆதி திராவிடர் ‘நலத்துறை’, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ‘ நலத்துறை’ எனப் பெயர் வைத்திருக்கிறோம், ஒன்றிய அரசுகூட அந்தத் துறையின் பெயரை சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் துறை என மாற்றிவிட்டது.
ஆனால் நாம் இன்னும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர் ஆகியோருக்கு செய்வதை welfare என்றே கருதுகிறோம், justice, empowerment என உணரவில்லை.
’அண்ணா வழியில் அயராதுழைப்போம்’ என உறுதியேற்ற ஒவ்வொருவரும் இன்று நினைவில் ஏந்த வேண்டிய அண்ணாவின் கருத்து இதுதான்: “உரிமையைத் தருபவருக்கும் பெறுபவருக்கும் இடையே இருப்பது சமநிலை, சம அந்தஸ்து’. அவர்கள் வழிமொழிய வேண்டிய அண்ணாவின் கட்டளை இதுதான்: ‘தீண்டாமை கூடாது’.
நல்லாட்சிக்கான திறவுகோல்! – ரவிக்குமார்
கன மழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?
சென்னை ஏடிஎம்மில் ரூ.200-க்கு பதிலாக ரூ.500 வந்த விநோதம்!
சமத்துவத்தையும் உரிமை யை.யும் வலியுறுத்தும் சிறப்பான கட்டுரை.
வாழ்க அண்ணா.
நன்றி – தலைவர். ரவிக்குமார். MP.