தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உடல் நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் இன்று (ஜூலை 4) காலை வீடு திரும்பினார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயிறு சிகிச்சை நிபுணர் மருத்துவர் பழனிசாமி பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தார்.
நேற்று மாலை முதல்வர் ஸ்டாலின் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
அதில், வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவித்திருந்தது.
அதன்படி இன்று காலை முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்குச் சென்றார்.

நேற்று காலை முதல் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் திடீரென மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்ததால், அவருக்கு என்ன ஆனது என திமுகவினர் தொடங்கி பொதுமக்கள் வரை பலரும் பேசத் தொடங்கினர்.
இந்நிலையில் முதல்வருக்கு என்ன ஆச்சு என்று அப்பல்லோ மருத்துவமனை வட்டாரத்தில் நாம் விசாரித்தோம்.
“முதல்வர் ஸ்டாலினுக்குக் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகவே செரிமான பிரச்சினை இருந்திருக்கிறது. அதனால் சாப்பிட்டு முடித்ததும் அவருக்கு வயிறு வலி ஏற்பட்டு வந்திருக்கிறது.
ஸ்டாலின் இயல்பாகவே அளவாகத்தான் சாப்பிடக்கூடியவர். ஆனால், செரிமான கோளாறு காரணமாக சாப்பிடக்கூட முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார்.
இந்நிலையில்தான் நேற்று பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்தார். வயிறு சிகிச்சை நிபுணர் மருத்துவர் பழனிசாமி பரிசோதித்து அவருக்குச் சிகிச்சை அளித்தார். கூடவே ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் செங்குட்டுவேலும் இருந்தார்.
பிளட் டெஸ்ட், ஈசிஜி, எக்கோ டெஸ்ட் உள்ளிட்ட வழக்கமான பரிசோதனைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து கொலோனோஸ்கோபி பரிசோதனை (colonoscopy test) செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்த பரிசோதனை பெருங்குடல் மற்றும் மலக்குடலில் ஏதேனும் கோளாறுகள் உள்ளதா என்பதைக் கண்டறியும் சோதனையாகும். சிறிய கேமரா பொருத்தப்பட்ட கொலோனோஸ்கோபி குழாய் ஆசனவாய் வழியாகச் செலுத்தப்பட்டு இந்த சோதனை மேற்கொள்ளப்படும்.
இந்த சோதனை காலையில் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும். அதனால் நேற்று இரவு மருத்துவமனையிலேயே தங்கவைக்கப்பட்டார் முதல்வர் ஸ்டாலின். இன்று காலை இந்த சோதனை முடிந்ததும் வீட்டுக்குக் கிளம்பினார்.
இன்று மேற்குறிப்பிட்ட பரிசோதனைக்கான ரிசல்ட் முதல்வர் வீட்டுக்கு அனுப்பப்பட்டது. ரிசல்ட் முடிவில் பயப்படும் படி எந்த பிரச்சினையும் இல்லை” என்கிறார்கள் அப்பல்லோ வட்டாரங்களில்.
பிரியா
’குறைமாதம் -அமைச்சரின் பேச்சால் வேதனை’ : குழந்தையின் பெற்றோர்
Comments are closed.