திமுக எம்பி ஞான திரவியம் விவகாரம்: என்னதான் நடக்கிறது?

Published On:

| By Selvam

நெல்லை டயோசிஷன் விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சர்ச்சைக்கு உள்ளான நெல்லை திமுக எம்பி ஞானதிரவியம் ஆதரவாளர்களின் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

நெல்லை திருமண்டலத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளில் பணி நியமனம் செய்வது தொடர்பாக பேராயர் பர்னபாசுக்கும், ’லே’ செயலாளர் ஜெயசிங்கிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்த கருத்து வேறுபாடு அதிகரிக்கவே கடந்த சில மாதங்களாக பேராயர் பர்னபாஸ் தலைமையில் ஒரு அணியினரும், ’லே’ செயலாளர் ஜெயசிங் தலைமையில் ஒரு அணியினரும் என இரண்டு பிரிவாக பிரிந்தனர்.

இதில் ஜெயசிங் அணியில் நெல்லை தொகுதி தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம், திருச்சபை மேலாளர் மனோகர் உள்பட பலர் இருந்தனர்.

இந்தநிலையில் தனது எம்.பி பதவியை ஞான திரவியம் தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி சிஎஸ்ஐ திருமண்டலத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஜான் பள்ளியின் தாளாளர் பதவி மற்றும் கல்விக்குழு தொடர்பான பொறுப்புகளிலிருந்து ஞான திரவியத்தை நீக்கி பேராயர் பர்னபாஸ் உத்தரவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த் ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் சிஎஸ்ஐ திருமண்டல அலுவலத்திற்கு சென்று பேராயர் பர்னபாஸ் ஆதரவாளர்களை தாக்கினர். இதில் காயம் அடைந்த பாதிரியார் காட்பிரே நோபல் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சென்று புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரில், ஞானதிரவியம் எம்.பி. தூண்டுதலின் பேரில் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அதன் அடிப்படையில் நெல்லை எம்.பி ஞானதிரவியம் உள்பட அவரது ஆதரவாளர்கள் 33 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக 7 நாட்களுக்குள் தலைமைக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், எம்.பி. ஞானதிரவியத்திற்கு கடிதம் அனுப்பினார்.

இந்த வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் உள்பட 11 பேரின் முன் ஜாமீன் மனுக்களை நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக நேற்று செய்திகள் வெளியானது.

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட திமுக வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “பேராயர் தாக்கப்பட்ட வழக்கில் ஞானதிரவியம் ஆதரவாளர்கள் 11 பேர் நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இதனால் ஞானதிரவியமும் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

tirunelveli mp gnanathiraviam supporters bail denied

மேலும் தலைமையின் உத்தரவை அடுத்து கடந்த வாரம் அண்ணா அறிவாலயத்திற்கு சென்று திமுக தலைமைக் கழக நிர்வாகிகளை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக ஞானதிரவியம் விளக்கம் அளித்துள்ளார். தலைமையிடமிருந்து பாசிட்டிவான சிக்னல் கிடைக்கவே ஜூலை 2-ஆம் தேதி நெல்லையப்பர் கோவில் தேரோட்ட விழாவிலும் சபாநாயகர் அப்பாவு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோரோடு ஞானதிரவியமும் கலந்து கொண்டார்.

அவர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த பின்னணியில்தான் ஞானதிரவியம் ஆதரவாளர்கள் 11 பேரின் முன் ஜாமீன் மனுவை நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது” என்று தெரிவித்தனர்.

மு.செல்வம்

ஜெயலலிதாவின் புடவைகள், தங்க வைர நகைகள் : விஜிலன்ஸுக்கு பறந்த கடிதம்!

“விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்” – அமைச்சர் உதயநிதி