mutharasan reply to kp munusamy

நலம் விசாரிப்பது எப்படி கூட்டணியாகும்? முத்தரசன் கேள்வி!

அரசியல்

பாஜகவுடன் கூட்டணியை முறித்து கொள்வதாக அதிமுக அறிவித்துள்ளது. இந்த நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி கிருஷ்ணகிரியில் இன்று (செப்டம்பர் 28) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ”திமுக தலைமை தங்களது கூட்டணிக் கட்சிகள் அதிமுகவுக்கு வந்துவிடுமோ என அச்சப்படுகிறார்கள். பயம் வந்ததால் தான் கூட்டணிக் கட்சிகளை அழைத்து திமுக பேசுகிறது. யார் யார் எந்த கூட்டணிக்கு வருவார்கள் என இன்னும் நான்கு மாதங்களில் தெரியும்” என்றார்.

இதுகுறித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “கூட்டணி உடையும் என்று திமுக அஞ்சுவதாக கூறுவது எல்லாம் கட்டுக்கதை. அங்கு ஒரு அச்சமும் இல்லை.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விசிக தலைவர்  திருமாவளவனை தொலைபேசியில் அழைத்து முதல்வர் நலம் விசாரித்தார். நானும் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.

இதுபோல தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், திருமாவளவனிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். இதனை எப்படி கூட்டணிக்கு அழைப்பது என்று கூற முடியும்?

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் சென்று அவரை பார்த்தனர். அதற்காக அந்த நிகழ்வை கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை என்று எடுத்துக்கொள்ளலாமா?

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு இன்னும்  குழப்பமாக இருக்கிறது. இதனை தேர்தல் நாடகமாகவே நான் பார்க்கிறேன். இதனால் மதசார்பற்ற இந்தியா கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை.” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

டெங்கு காய்ச்சல்… 4 வயது சிறுமி பலி!

தங்கம் விலை: ஒரே நாளில் அதிரடி வீழ்ச்சி!

கூட்டணி… திமுக தலைமைக்கு அச்சம் வந்துவிட்டது: கே.பி.முனுசாமி

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

1 thought on “நலம் விசாரிப்பது எப்படி கூட்டணியாகும்? முத்தரசன் கேள்வி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *