ரூ.200 கோடி லஞ்சம்: மு.க.ஸ்டாலின் மீது சிபிஐயில் புகாரளிக்கும் அண்ணாமலை

அரசியல்

திமுகவினர் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் மீது சிபிஐயில் புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 14) பேசியஅவர் , “2008ஆம் ஆண்டு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை ஆரம்பிக்கும் போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு உதயநிதி ஸ்டாலின் எந்த வேலையும் செய்யவில்லை. 

2008 முதல் 2011 வரை 300 கோடி ரூபாய்க்கு படம் எடுத்துள்ளார். அதில் நிறைய படங்கள் தோல்வி அடைந்திருக்கிறது. அப்படியானால் அந்த பணம் எங்கிருந்து வந்தது. 

ரெட் ஜெயண்ட் முதலீட்டாளர்கள் யார்? ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் இன்றைய மதிப்பீடு 2010 கோடி ரூபாயாக கொடுத்துள்ளோம். அது இல்லை என்றால் அவர் மறுக்கலாம்” என்றார்.

தொடர்ந்து அவர், “முதல்வரின் மருமகன் சபரீசன் மீது மிக முக்கியமான குற்றச்சாட்டை வைக்கிறேன். கள்ள பணம், கருப்பு பணத்தை தாண்டி மணி லாண்ட்ரிங் செய்கிறார். வெஸ்ட் பேக் என்ற நிறுவனம் இருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மணி லாண்ட்ரிங் செய்யும் நிறுவனமாகும். 

2008 முதல் வெஸ்ட் பேக்  நிறுவனம்  செண்ட் ஜார்ஜ்ஜஸ் பேங்க் என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. லண்டனில் உள்ள ஒரு முகவரியில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் இயக்குநர் சீனிவாஸ் வெங்கடேஷ். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். 

லண்டனில் இயங்கி வரும் செண்ட் ஜார்ஜ்ஜஸ் பேங்க் கட்டடத்தில் சீனிவாஸ் வெங்கடேஷ் இரண்டு கம்பெனிகளை நடத்துகிறார். அதில் ஒன்று ஸ்பேஸ் டெல் யுகே லிமிட்டெட், மற்றொன்று வாய்ஸ் டெக்ஸ்ட் சிஸ்டெம் லிமிட்டெட். சீனிவாசன் வெங்கடேஷ் நடத்தும் இந்த இரண்டு நிறுவனங்களின் பங்குதாரர் சபரீசன் வேதமூர்த்தி.

இப்படி மணி லாண்டரிங் கம்பெனி இருக்கக் கூடிய பில்டிங்கில் இயங்கும் இரண்டு நிறுவனங்களின் முதலீட்டாளராக, பங்குதாரராக சபரீசன் இருக்கிறார். 

குறிப்பாக கென்யா உள்ளிட்ட பகுதியில் வெஸ்ட் பேக் மணி லாண்டரிங் செய்து  மிகப்பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டது. அப்படி இருக்கும் போது முதலமைச்சரின் சொந்த மருமகன் இங்கிலாந்தில் இருக்கக் கூடிய மணி லாண்டரிங் பேங்க் செயல்படும் பில்டிங்கில் இரண்டு கம்பெனிகளை நடத்துகிறார். இதற்கு முதல்வரும் சபரீசன் வேத மூர்த்தியும் பதில் அளிக்க வேண்டும். 

காரணம், இது மாபெரும் குற்றம். பணத்தை எடுத்துச் சென்று லாண்டரிங் செய்து திரும்ப கொண்டு வருவது குற்றமாகும். 

முதல்வர் தூபாய் சென்ற போது மணி லாண்டரிங் செய்கிறார்கள் என்று சொன்னோம். ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டார்கள்.  முதல்வர் துபாய் சென்ற போது நிறைய கையெழுத்து போட்டார். 

நோபல் ஸ்டீல் என்ற கம்பெனியுடன் ஒரு கையெழுத்திட்டார். அப்போது இந்த கம்பெனி இந்தியாவில் வந்து 1000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக பெருமையாக திமுகவினர் சொன்னார்கள். 

நோபல் ஸ்டீல்ஸ் கம்பெனியின் சேர்மேன் பஷீர் முகமது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இக்கம்பெனியின் இயக்குநராக 2009ல் உதயநிதி இருந்தார். பின்னர் ராஜினாமா செய்தார். 2016ல் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இயக்குநராக இருந்து ராஜினாமா செய்தார்.  

இப்படி திமுகவின் முதல் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் இயக்குநர்களாக இருந்து ராஜினாமா செய்த அந்த கம்பெனியில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.  

அந்த கம்பெனியுடன் கையெழுத்திட்டு 1000 கோடி ரூபாய் தமிழகத்துக்குள் வருகிறது என்றால் அது எப்படி? இதன் மர்மத்தை முதல்வர் விளக்க வேண்டும்” என்றார். 

தொடர்ந்து, முதல்வர் மீது முக்கிய குற்றச்சாட்டை முன்வைப்பதாக தெரிவித்த அண்ணாமலை,  “2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் சென்னையில் முதல் கட்ட மெட்ரோ கட்ட அனுமதி வருகிறது. இந்த திட்டத்தை சிறப்பு திட்டமாக அறிவித்தார்கள். இந்த திட்டத்துக்காக ஜிகா என்ற ஜப்பான் நிறுவனம் 59 சதவிகிதம், மத்திய அரசு 15 சதவிகிதம், துணைக் கடன் 5 சதவிகிதம், மாநில அரசு 21 சதவிகிதம் என நிதி ஒதுக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பு 14,600 கோடி ரூபாய். 

தேர்தலுக்கு 6 மாதம் இருக்கும் போது அவசர அவசரமாக இந்த திட்டத்தை கொண்டு வருகிறார்கள். 

இதற்கான டெண்டர்கள் மூன்று நிறுவனங்கள் பங்கேற்கிறது. ஒன்று இந்திய நிறுவனம் விமல், இரண்டாவது அல்ஸ்டாம். மூன்றாவது ஸ்பெயின் நிறுவனமான சி.ஏ.எஃப்.எம்.சி ஆகிய நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

டெண்டர் மூடப்பட சில நாட்கள் இருக்கும் போது கஸ்டம்ஸ் டியூட்டி சேர்க்க போகிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால்  மத்திய அரசின் எக்சிம் பாலிசியின் படி, எந்த காரணத்துக்கும் கஸ்டம்ஸ் டியூட்டி சேர்க்கக் கூடாது என்று சொல்கிறது. 

கஸ்டம்ஸ் டியூட்டிக்கு முன்னதாக  இந்த டெண்டரில் சி.ஏ.எஃப்.எம்.சி நிறுவனம் 1,417 கோடி ரூபாய் மதிப்பில் தேர்வாகிறது. இரண்டாவது ரூ.1,439 கோடியில் அல்ஸ்டாம் கம்பெனியும்,  மூன்றாவதாக 1,476 கோடி ரூபாய் மதிப்பில் விமல் நிறுவனம் தேர்வாகிறது. 

இவர்கள்  கஸ்டம்ஸ் டியூட்டி  கொண்டு வந்த உடன் இரண்டாவது இடத்தில் இருந்த அல்ஸ்டாம் முதலிடத்துக்கு வந்து டெண்டரை பெறுகிறது. 

அல்ஸ்டாம் நிறுவனம் என்பது உலகம் முழுவதும் லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு 722 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்படுகிறது.

இப்படி இருக்கையில் கஸ்டம்ஸ் டியூட்டியை கொண்டு வந்து  அல்ஸ்டாம்  நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்படுகிறது. இதில் எங்களுடைய நேரடி குற்றச்சாட்டு என்னவென்றால், முதலமைச்சருக்கு 200 கோடி ரூபாய் அல்ஸ்டாம் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை கொடுத்த நிறுவனம் சிங்கப்பூரைச் சேர்ந்த இண்டோ யூரோப்பியன் வெண்ட்சர் பிரைவேட் லிமிட்டெட் ஆகும். 2011 தேர்தல் செலவுக்காக 200 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் பங்கு 15 சதவிகிதம் இருக்கிறது எனவே, இன்று சிபிஐ இயக்குநரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் மீது புகார் அளிக்க  இருக்கிறேன்” என குறிப்பிட்டார் அண்ணாமலை

பிரியா

திருச்சி மாநாடு… ஓபிஎஸ் அழைப்பு: சசிகலா பதில்!

அம்பேத்கர் பிறந்தநாள்: முதல்வர் மரியாதை!

காவலருக்கே இந்த நிலை… முதல்வர் எப்போது உணர்வார்?: ஈபிஎஸ்

Annamalai complaint to CBI against Stalin
+1
0
+1
3
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

1 thought on “ரூ.200 கோடி லஞ்சம்: மு.க.ஸ்டாலின் மீது சிபிஐயில் புகாரளிக்கும் அண்ணாமலை

  1. ஏன் இவ்வளவு தாமதம், இப்படி பிஜேபி ஆட்சிக்கு வரும் முன்பு காங்கிரஸ் மீது கணக்கில்லா ஊழல் பட்டியல் சொன்னது 10 வருடத்தில் எத்தனை பேருக்கு தண்டனை கொடுத்திருக்கு அல்லது அந்த லிஸ்ட் தண்ணீரில் மூழ்கி விட்டது?
    அதானி பற்றி ராகுல் கேட்க்கும் கேள்விக்கு உன் தலைவன் ஏன் வாய் திறக்கல….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *