உயிரிழந்த 4 பெண்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குக! – அன்புமணி

அரசியல்

வாணியம்பாடியில் இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் ஒன்று சார்பில் சமூக ஆர்வலர் ஐயப்பன் என்பவர் வருடந்தோறும் இலவச வேட்டி, சேலைகளை வழக்கமாக வழங்கி வருகிறார்.

முன்னரே அறிவித்தபடி வாணியம்பாடி வாரச்சந்தையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இலவச வேட்டி, சேலைக்கான டோக்கன் பெற ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து வட்டாட்சியர், காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

rs 10 lakh for who were died vaniyambadi crowd

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் நடத்தப்பட்ட இலவச வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது.

அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இத்தகைய உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும்,

அதில் ஏற்படும் நெரிசலில் சிக்கி அப்பாவி மக்கள் உயிரிழப்பதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இத்தகைய நிகழ்வுகளும் உயிரிழப்புகளும் தடுக்கப்பட வேண்டும்!

பொதுமக்களுக்கு மனித நேயத்துடன் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால், அவை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செய்யப்படவேண்டும்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத சூழலில் நெரிசல் ஏற்படுவதும், உயிரிழப்புகள் நிகழ்வதும் தவிர்க்க முடியாதவை!

எத்தகைய உதவிகள் வழங்கப்படுவதாக இருந்தாலும், அரசின் அனுமதி பெற்று, காவல்துறையின் பாதுகாப்புடன் வழங்கப்பட வேண்டும். உதவி வழங்கும் இடத்தில் ஒரு நேரத்தில் 200 பேருக்கு மேல் கூட அனுமதிக்கக்கூடாது. மக்கள் வரிசையில் செல்ல தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்!

முறைப்படுத்தப்படாத உதவி வழங்கும் நிகழ்ச்சிகளை அரசு தடை செய்ய வேண்டும். வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

இலவச வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சி : 4 பெண்கள் பரிதாப பலி

டெல்டாவில் பயிர்கள் சேதம்: அமைச்சர்கள் குழுவை அனுப்பிய முதல்வர்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0