தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பிறகு செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்று தமிழக அரசும்,
செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் அவர் அமைச்சராக தொடர கூடாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவியும் மோதி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் நேற்று (ஜூன் 30) செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் உத்தரவிட்டார்.
ஆனால் உத்தரவிட்ட 5 மணி நேரத்திலேயே உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார்.
இதனால் பலரும் ஆளுநரை விமர்சித்து வரும் நிலையில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (29.6.2023) ஓர் அரசமைப்புச் சட்ட விரோத ஆணையை சிறிதும் முன்யோசனையின்றி, ‘ஆத்திரக்காரருக்கு அறிவு மட்டு’ என்ற பழமொழிக்கொப்ப, அமைச்சர் செந்தில் பாலாஜியை “டிஸ்மிஸ்” செய்வதாக வெளியிட்டார்.
அதே ஆணையை 5 மணிநேரத்தில் திரும்பப் பெற்றார். இது அவர் எப்படி தனது பதவி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பதற்கான அதிகாரப்பூர்வ ஆவண சாட்சியம் ஆகும்.
இப்படி அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு, தி.மு.க. ஆட்சியின் மீது வன்மத்துடன் நடந்துகொண்டு வரும் இந்த ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்து வெளியேறவேண்டும்.
ஜனநாயகத் தத்துவப்படி இந்த ஆளுநரை ‘டிஸ்மிஸ்’ செய்ய முன்வரவேண்டும் குடியரசுத் தலைவர்.
அவரை ஆளுநராக அனுப்பியவர்களும், இதற்கான தார்மீகப் பொறுப்பேற்க முன்வரவேண்டும்.
13 மசோதாக்களை நிறுத்தி வைத்தும், நாளும் ஆளும் கட்சியின் கொள்கைகளை எதிர்த்தும் ஒரு போட்டி அரசு நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிகளும், மக்களும் திரண்டு, “ஆளுநரை டிஸ்மிஸ் செய்” என்ற ஒற்றைக் கோரிக்கையை – பிரச்சாரத்தை எங்கெங்கும் அடைமழையாகப் பொழிய வைக்கவேண்டியது, ஜனநாயகக் காப்புக் கடமையாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
“நான்கு மணி நேரத்தில் அதிகாரத்தை உணர்ந்த ஆளுநர்” – அப்பாவு
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!