தெலங்கானா மாநில சட்டப்பேரவையின் 119 தொகுதிகளுக்கும் இன்று (நவம்பர் 30) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.
106 தொகுதிகளுக்கு மாலை 5 மணி வரையும், இடதுசாரி தீவிரவாதம் அதிகமுள்ள 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரையும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் பணியில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
காலை முதலே தெலுங்கானாவில் வசிக்கும் திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் பலரும் வாக்குச்சாவடி மையங்களில் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
அதன்படி நடிகர்கள் அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர், வெங்கடேஷ் டகுபதி, ஸ்ரீகாந்த் இயக்குநர் ராஜமெளலி ஆகியோரும்,
தெலுங்கு தேச கட்சி தலைவரும், முதல்வருமான சந்திரசேகர ராவ், ஜூப்ளி ஹில்ஸ் காங்கிரஸ் வேட்பாளரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான அசாருதீன், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆகியோர் தங்கள் வாக்கினை செலுத்தியதோடு, மக்களையும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றுமாறு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி 36.68% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதிகபட்சமாக ஜக்தியாலில் 46.14 சதவீதமும், அடிலாபாத்தில் 41.88 சதவீதமும், பத்ராத்ரியில் 39.29 சதவீதமும், ஹனுமன்கொண்டாவில் 35.29 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்குப்பதிவினை தொடர்ந்து தெலுங்கானா, ராஜஸ்தான், ம.பி, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில எக்ஸிட் போல் முடிவுகள் இன்று மாலை 5.30 மணிக்குப் பிறகு அறிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம்தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
‘அடிச்சவன் யாரோ’ வனிதா விஜயகுமாருடன் நேரடியாக மோதிய கஸ்தூரி
வேலைவாய்ப்பு : அண்ணா பல்கலையில் பணி!