Caldwell's book on Dravidian is fake

திராவிடம் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது: ஆளுநர் ரவி

அரசியல்

கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் போலியானது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (மார்ச் 4) தெரிவித்தார்.

அய்யா வைகுண்டர் அவதார தினத்தின் 192-வது பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (மார்ச் 4) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பேசும்போது,  “சனாதன தர்மத்திற்கு நெருக்கடி ஏற்பட்டபோது ஐயா வைகுண்டர் சனாதன தர்மத்தை பாதுகாத்தார். மேலும், சனாதன தர்மத்தை நாம் அனைவரும் அறியும்படி கற்றுக்கொடுத்தார்.

அனைவரும் சமம் என்பது தான் சனாதன தர்மத்தின் கோட்பாடு. நாம் அனைவரும் ஒரே தெய்வீகத்தின் குழந்தைகள். அனைத்து நாடுகளில் இருந்தும் வருபவர்களை நாம் வரவேற்கிறோம்.

அதனால் தான் ஐரோப்பிய நாடுகளுக்கு முன்பாக இந்தியாவில் கிறிஸ்துவ மதம் வந்தது. முகமது நபிகள் காலக்கட்டத்தில் இந்தியாவில் மிகவும் பழமையான மசூதி கட்டப்பட்டது. ஏனென்றால் நாம் மதங்களை வேறுபடுத்தி பார்க்கவில்லை. சனாதன தர்மத்தை நாம் பின்பற்றியதால், அனைவரும் ஒரே குடும்பம் என்று நம்பிக்கை கொண்டிருந்தோம்.

வெளிநாடுகளில் இருந்து சிலர் வந்து சனாதன தர்மத்தை ஒழிக்க நினைத்ததால் தான் பிரச்சனை வந்தது. அதுவரை நாம் சகோதரர்கள், சகோதரிகளாக ஒன்றாகத் தான் இருந்தோம்.

சமீபத்தில் இந்தியா ஜி20 தலைமை பொறுப்பேற்று மாநாடு நடத்தியது. இதன் கருப்பொருள் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது தான். இதனை தான் ஐயா வைகுண்டர் நமக்கு கற்றுக்கொடுத்தார்.

ஆங்கிலேயர்களால் 1600-ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி தோற்றுவிக்கப்பட்டது. வணிகம் செய்வதற்காக ஆங்கிலேயர்கள் முதலில் இந்தியாவிற்கு வந்தனர். அவர்கள் செல்லும் அனைத்து நாடுகளிலும், சுவிஷேம் செய்து மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற பணி அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதனால் தான் அவர்கள் இந்தியாவில் வணிகம் செய்துகொண்டிருந்தபோது, கிறிஸ்துவ மதத்தை பரப்பிக்கொண்டிருந்தார்கள்.

150 ஆண்டுகளுக்கு பிறகு 1757-ஆம் ஆண்டு வங்கதேசத்தை முதலில் கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றினார்கள். உள்ளூர் மன்னர் தோற்கடிக்கப்பட்டார். வங்கதேசத்தை அவர்கள் கைப்பற்றிய பிறகு வணிகம் செய்வதை விட நாட்டை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வந்தது. பிரிட்டிஷ் அரசாங்கமும் அதை தான் விரும்பியது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளை அவர்கள் கைப்பற்றிய போது, உள்ளூர் மக்கள் தொகையை அழித்தார்கள். போரால் அல்ல, பெரியம்மை நோயை பரப்பி அழித்தார்கள். இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

இந்தியாவிலும் இதே போன்று ஆட்சியை கைப்பற்றலாமா என்று அவர்கள் எண்ணியபோது, அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தார்கள். இந்தியா பெரிய நாடாக இருந்தாலும், கட்டமைக்கப்பட்டதாக இருந்தது. இந்தியாவில் பல்வேறு மொழி, இனம் சார்ந்த மக்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் சனாதன தர்மத்தின் கீழ் ஒற்றுமையாக இருந்தார்கள்.

அதனால் அவர்கள் சனாதன தர்மத்தை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதுதான் அவர்களின் அஜெண்டவாக இருந்தது. 1801 காலகட்டத்தில் இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் அவர்கள் கைப்பற்றினார்கள்.

நீண்ட நாட்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்றால், அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது சனாதன தர்மம். அதனால் சனாதன தர்மத்தை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

1813-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இந்தியாவில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும், கிறிஸ்துவ மதத்தை பரப்ப வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தார்கள்.

ராபர்ட் கால்டுவெல், ஜி.யு.போப் போன்றோர் கிறிஸ்துவ மதத்தை இந்தியாவில் பரப்புவதற்காக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்டவர்கள். ராபர்ட் கால்டுவெல் பட்டப்படிப்பு முடித்ததாக சிலர் எழுதுகிறார்கள். அவர் பள்ளிப்படிப்பை தாண்டவில்லை. விக்கிப்பீடியோ போன்ற தகவல்களில் அவர் பட்டப்படிப்பு முடித்ததாக தவறான தகவல்கள் உள்ளன. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற போலியான நூலை கால்டுவெல் எழுதியிருக்கிறார். தன்னை மொழியியல் அறிஞர் என்று அறிவித்துக்கொண்டார்.

1825 – 30 காலகட்டத்தில் இந்தியாவில் உள்ள பல பள்ளிகளை ஆங்கிலேயர்கள் மூடினார்கள். கிறிஸ்துவ மிஷனரிகள் மட்டுமே பள்ளிகள் நடத்த அனுமதிக்கப்பட்டனர். கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே பள்ளிகளில் படிக்க அட்மிஷன் வழங்கப்பட்டது. இதுதான் வரலாற்று உண்மை. நான் இயேசு கிறிஸ்துவை நேசிக்கிறேன். பைபிளில் எந்த தவறான கருத்துக்களும் இல்லை. 1833 ஐயா வைகுண்டர் பிறந்த பிறகு, சனாதன தர்மத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘ராஜதந்திரம்’ – மோடி நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்துகொள்ளாதது ஏன்? ஆர்.எஸ்.பாரதி விளக்கம்!

‘சியான் 62’ படத்தில் இணைந்த பிரபலம்!

+1
0
+1
2
+1
0
+1
1
+1
3
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *