’தொகுதி மறுவரையறை… கிள்ளி எறிய வேண்டும்’: முதல்வர்

Published On:

| By christopher

Constitution redefining is knife hanging over head cm

மகளிர் மசோதாவை வரவேற்கும் அதே வேளையில், மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்திய மக்களுக்கு எந்தத் தீங்கையும் செய்துவிட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகளிர் உரிமைக்கு 75 ஆண்டு காலமாக பாடுபட்டு வரும் தி.மு.கழகம், மகளிர் ஒதுக்கீட்டை அன்றும் வரவேற்றது; இன்றும் வரவேற்கிறது.

பெரும்பான்மை பலம் இருந்தும் கடந்த 9 ஆண்டு காலமாகப் பாராமுகமாக இருந்துவிட்டு, தேர்தல் நேர வண்ணஜாலம் காட்டி ஏமாற்ற நினைக்கும் முயற்சியை மக்கள் புரிந்துகொள்வார்கள்!

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்ற உத்தரவாதம் இல்லை;

நடைபெறாத மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதன் அடிப்படையிலான தொகுதி மறுவரையறை – அதன் பேரில் 2029-இல் அமலுக்கு வரப்போவதாக கூறப்படுவதற்கு இப்போது சட்டம் நிறைவேற்றும் விசித்திர தந்திரம் – எல்லாம் தோல்வி பயம் ஏற்படுத்தும் தேர்தல் மாய்மாலம்.

தமிழ்நாட்டின் மீது – தென்னிந்தியாவின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை (delimitation) உள்ளது.

மக்கள் தொகை அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தென்னிந்தியாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கிற அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும். அரசியல் விழிப்புமிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதியான முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

மகளிர் மசோதாவை வரவேற்கும் அதே வேளையில், மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்திய மக்களுக்கு எந்தத் தீங்கையும் செய்துவிட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்கி, தென்னிந்திய மக்களை ஆட்கொண்டுள்ள அச்சத்தைப் போக்கிட வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

முதல் பாகிஸ்தானிய அழகி… யார் இந்த எரிகா ராபின்?

தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share