கல்பாக்கத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளாதது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எ.ஸ்.பாரதி விளக்கமளித்தார்.
பிரதமர் மோடி கடந்த 28ஆம் தேதி தூத்துக்குடியில் பேசும் போது, மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் திமுக எதிர்க்கிறது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் இன்று தமிழ்நாடு வரும் பிரதமர் கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலைக்கு எரிபொருள் நிரப்பும் திட்டத்தை தொடக்கி வைக்கிறார்.
பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. மயிலாடுதுறையில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக அங்கு சென்றுள்ளார்.
பிரதமரின் நிகழ்ச்சியில் முதல்வர் கலந்துகொள்ளாதது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், “பிரதமர் மோடி முனிசிபாலிட்டி தேர்தலுக்கு வருவது போல் வருகிறார். முன்னதாக தூத்துக்குடிக்கு வந்தார். மழையால் தூத்துக்குடி எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது. அந்த மாவட்ட மக்களுக்கு சல்லி காசாவது கொடுக்கிறேன் என்று சொன்னாரா.
இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் பேசவுள்ளார். இந்த கூட்டத்திலாவது தமிழ்நாட்டுக்கு நான் இவ்வளவு பணம் ஒதுக்குகிறேன் என்று சொல்வாரேயானால் அவர் உண்மையில் அரசியல்வாதி என்று ஒத்துக்கொள்ளலாம்” என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, “ஈனுலை திட்டத்தை மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதால் தான், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற அடிப்படையில் நாகரிகமாக முதல்வர் செல்லவில்லை.
தேர்தல் நேரத்தில் வேண்டுமென்றே நல்லத் திட்டத்தை கொண்டு வந்தது போலவும், அதை திமுக தடுப்பது போலவும் மோடி பொய் பிரச்சாரம் செய்கிறார். இந்த திட்டத்தை மோடி ஏன் குஜராத்தில், உத்தரப் பிரதேசத்தில் செயல்படுத்தக் கூடாது.
தமிழ்நாட்டுக்கு கோடி கோடியாக பணத்தை மோடி கொட்டினது போலவும், அதை முதல்வர் தடுத்தது போலவும் அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கிறார். அதை தவிர்க்கும் வகையில், மிகவும் ராஜதந்திரமாக இந்த நிகழ்வை முதல்வர் தவிர்த்துள்ளார்.
ஏனென்றால் நேரடியாக எதிர்த்தால் முதல்வருக்கும் பிரதமருக்கும் தகராறு என்று சர்ச்சை உருவாகும். இந்நிலையில் தன்னுடைய கடமை என்னவென்று உணர்ந்து முதல்வர் மயிலாடுதுறை சென்றுவிட்டார்.
கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலை தொடர்பான விவகாரத்தில் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். இன்று பிரதமர் மோடி பார்வையிடும் ஈனுலை திட்டம், தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்படவில்லை.
ஸ்டெர்லைட் ஆலையைத் தடுக்கும் நடவடிக்கைகளில் திமுக. செயல்பட்டது. அதுபோல, கல்பாக்கம் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்போம். தமிழ்நாடு மக்கள் ஏற்காததை நாங்கள் ஏற்க மாட்டோம்” என்றார்.
மக்களவைத் தேர்தல் செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், “திமுக கூட்டணியில் பிளவு இல்லை. நாளை மாலைக்குள் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விடும் என நினைக்கிறேன். 7ஆம் தேதிக்குள் தேர்தலுக்கு முழுமையாக தயாராகி விடுவோம்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகளைத் தடுக்க தேர்தல் ஆணையத்தில் பல புகார்கள் தந்துள்ளோம். வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்” என கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
‘சியான் 62’ படத்தில் இணைந்த பிரபலம்!
’அவையில் பேச, வாக்களிக்க லஞ்சம் பெற்றால் தண்டனை’ : உச்சநீதிமன்றம் அதிரடி!