அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று (நவம்பர் 19) உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்றது. அதில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனிடையே அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் மனுத் தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஓ பன்னீர் செல்வம். இந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமி தரப்பில், “பொதுக்குழு வழக்கு நிலுவையில் இருப்பதால் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த நாங்கள் முடிவு செய்யவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை நவம்பர் 21ஆம் தேதி நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், “தொண்டர்கள் விருப்பத்தின் படி, கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட்டது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே பொதுக்குழு கூட்டப்பட்டது. பொதுக்குழு கூட்டுவதற்கு முன்னதாக பன்னீர் செல்வத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அதிமுக அலுவலகத்தைச் சூறையாடி கட்சி விதிகளை ஓ.பன்னீர் செல்வம் மீறியுள்ளார். கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதால் அவர் எந்த நிவாரணமும் பெறத் தகுதியற்றவர். ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு அற்பமான ஒன்று” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
திகார் வீடியோ: மணிஷ் சிசோடியா விளக்கம்!
சுங்கச்சாவடி கட்டணம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!