raj bhavan rejects dhayanidhi maran accusation

“அரசு செலவில் எனது மகளுக்கு திருமணமா?”: தயாநிதி மாறனுக்கு ஆளுநர் பதில்!

அரசியல்

ஆளுநரின் குடும்ப விழாவில் அரசு பணம் பயன்படுத்தப்பட்டதாக தயாநிதி மாறன் எம்.பி. கூறியதற்கு ஆளுநர் மாளிகை மறுப்புத் தெரிவித்துள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் புதிய கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணிக்கு நேற்று (ஆகஸ்ட் 23) தயாநிதி மாறன் எம்.பி.அடிக்கல் நாட்டினார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், “ஆளுநர் வேலை தபால்காரர் வேலைதான். அதை செய்யாமல் எல்லை மீறி நடந்துகொண்டிருக்கிறார். துணை ஜனாதிபதி போன்ற பதவி கிடைக்கும் என்பதால் இதுபோன்று செய்துகொண்டிருக்கிறார்.

நான் கேட்கிறேன், இவர் ஆளுநர் தானே, ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் உங்களது மகளுக்கு ஏன் திருமணம் செய்தீர்கள். தமிழக அரசின் பணத்தில் திருமணம் நடத்த அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இதற்கு ஆளுநர் பதில் அளிப்பாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு ஆளுநர் மாளிகை இன்று (ஆகஸ்ட் 24) பதிலளித்துள்ளது. ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தயாநிதிமாறன் எம்.பி கூறியிருக்கும் தகவல்கள் தவறானவை என்பதுடன் விபரீதமான மற்றும் இழிவான நோக்கம் கொண்டவை என்பதால், நடந்தவை பொது வெளியில் அறியப்பட வேண்டும்.

நடந்த உண்மைகள்:

ஆளுநர் பிப்ரவரி 21 – 23, 2022 அன்று ஊட்டியில் குடும்ப நிகழ்ச்சியை நடத்தினார்.

ஆளுநரின் விருந்தினர்கள் அனைவரும் தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். ராஜ் பவனில் யாரும் தங்கவில்லை.

விருந்தினர்கள் மட்டுமன்றி ஆளுநரின் குடும்ப உறுப்பினர்களின் பயன்பாட்டுக்கும் கூட தனியார் வாகனங்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டன. அரசு வாகனம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.

தனியார் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது, மேலும் ராஜ் பவன் சமையலறை விருந்தினர்களுக்கு தேநீர் அல்லது காஃபி வழங்குவதற்கு கூட பயன்படுத்தப்படவில்லை.

முழு நிகழ்வுக்கான விளக்கொளி வசதிகள் ராஜ் பவனில் இல்லாமல் ஒரு தனியார் மூலம் செய்யப்பட்டன.

மலர் அலங்காரத்துக்கான பூக்கள் கூட சந்தையில் இருந்து தனிப்பட்ட முறையில் வாங்கப்பட்டன.

முழு நிகழ்வுக்கான பணியாளர்கள் தனிப்பட்ட முறையில் பெறப்பட்டனர். ராஜ் பவன் ஊழியர்கள் எவரும் பயன்படுத்தப்படவில்லை.

விருந்தினர்களுக்கான உணவு மற்றும் தங்குமிடம், வாகனங்களின் வாடகை கட்டணம், தேநீர் மற்றும் காஃபி உட்பட உணவு வழங்குதல், விளக்குகள், மலர்கள் மற்றும் மலர் அலங்காரங்கள், சேவை பணியாளர்கள் உட்பட நிகழ்வுக்கான முழு செலவையும் ஆளுநரே தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டார்.

ஆளுநர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கான உணவுக்கு கூட ஒவ்வொரு மாதமும் கட்டண ரசீது வழங்கப்படுகிறது. அதை ராஜ் பவன் செலுத்த உரிமையிருந்தாலும் அந்த செலவினத்தையும் ஆளுநரே ஏற்று வருகிறார்.

ஆளுநர் மீது அவதூறு கற்பிக்கும் விதமாக மக்களவை உறுப்பினரை மேற்கோள்காட்டி வெளியான பொறுப்பற்ற மற்றும் விபரீத தகவல் மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரியா

பிரக்ஞானந்தாவிற்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து!

எடப்பாடிக்கு ஒரு நீதி… திமுகவுக்கு ஒரு நீதியா?: நீதிபதி மீது பாய்ந்த ஆர்.எஸ்.பாரதி

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *