ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் அளிக்கும் விருந்து நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
ஜி20 மாநாடு டெல்லியில் நாளை (செப்டம்பர் 9) மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 10) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஜப்பான் பிரதமர் பிமியோ கிஷிடா, தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசா, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலனி உள்ளிட்டோர் இந்தியா வந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இன்று மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரை சந்தித்து இருதரப்பு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
ஜி20 மாநாட்டை முன்னிட்டு உலக நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாளை விருந்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில முதல்வர்களுக்கும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவ கவுடா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர்களை பொறுத்தவரையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஜார்கண்ட் முதல்வர் ஜேமந்த் சோரன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
குடியரசு தலைவர் அளிக்கும் விருந்து நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. கேபினட் அமைச்சருக்கு நிகரான பொறுப்பு வகிக்கும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காதது எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் மாரிமுத்து உடல்!
“எழுந்திருங்க பெரியப்பா” : மாரிமுத்துவை பார்த்து கதறி அழுத தாரா