எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 9

அரசியல் சிறப்புக் கட்டுரை

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 9

பாலம் கட்டும் திமுக எம்.எல்.ஏ!

ஆரா

ஜனநாயகத்தில் பொதுவாக ஒரு விஷயத்தைச் சொல்லுவார்கள். சட்டமன்றம் என்று வந்துவிட்டால் அதில் கட்சி பேதம் பார்க்கக் கூடாது. ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் மக்களின் பிரதிநிதிகள். அவர்கள் தனக்கு வாக்களித்த மக்களுக்கு மேம்பாட்டுத் திட்டங்களைச் செய்வதற்காகவே சட்டமன்றம் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும், மக்கள் பிரதிநிதிகளாகவே பார்க்க வேண்டும்.

உண்மைதான். ஆனால், அதையெல்லாம் யார் பார்க்கிறார்கள்? இப்போது எடப்பாடி பழனிசாமி இதைப் பார்க்கிறார் என்பது உண்மை.

கடந்த சட்டமன்றக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது அமைச்சரின் காரில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் ஏறிக்கொண்டு கோட்டைக்கு வருகிறார். திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே ஜெயலலிதா காலத்தில் இருந்த இறுக்கம் இன்று இல்லை. உடைந்துபோயிருக்கிறது. நல்ல விஷயம்தான். ஆனால், இதை வெளியே அரசியல் நாகரிகம் என்று அழகான வார்த்தையால் நியாயப்படுத்திவிடலாம். அதேநேரம் இது அரசியல் நாகரிகம் மட்டுமல்ல; ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக யுக்தி என்பதே உண்மை.

‘எடப்பாடி பொதுப்பணித் துறை அமைச்சராக இருக்கும்போதெல்லாம் இந்த அளவுக்குப் பேசமாட்டார். இப்போது நன்றாகப் பேசுகிறார்’ என்று சட்டமன்றத்தில் துரைமுருகன் முதல்வருக்குச் சான்றிதழ் கொடுக்கிறார். இத்தோடு நிறுத்தியிருந்தால் திமுக மீது மக்களுக்குச் சந்தேகம் வந்துவிடுமே… அதனால், ‘பேச்சில் மட்டும்தான் வளர்ச்சி’ என்ற திமுகவின் எதிர்க்கட்சி நிலைப்பாட்டையும் உறுதியாக வெளிப்படுத்தியுள்ளார் துரைமுருகன்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தேமுதிக என்ற எதிர்க்கட்சி நடத்தப்பட்ட விதம் போல, இப்போது திமுக நடத்தப்படவில்லை என்பதே உண்மை. அப்போதுள்ள சூழலும் இப்போதுள்ள சூழலும் ஒன்றல்ல. அதனால் அவ்வாறு நடத்தப்பட முடியாது என்பதும் உண்மை.

ஆனால், அனைத்து திமுக எம்.எல்.ஏக்களையும் ஆளும்தரப்பால் கவர முடியவில்லை. அதேநேரம் ஆட்சியின் கனிவுப் பார்வையில் கணிசமான திமுக எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியவில்லை என்பதே கோட்டையின் குரல்.

கோட்டைக்கு அமைச்சரின் காரில் ஏறிக்கொண்டு சென்றாரே அந்த சென்னையைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏவைச் சுற்றி வருகிறார்கள் திமுக எம்.எல்.ஏக்கள். எல்லாம் எதற்காகத் தெரியுமா? ஆளுங்கட்சியின் கனிவுப் பார்வைக்கு இப்போது அவர்தான் ஏற்பாடுகள் செய்பவராக இருக்கிறார்.

திமுக எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் பிரச்சினையா? பில் வரவில்லையா? வேலை முடிந்தும் வரவேண்டிய கமிஷன் வரவில்லையா? போர்க்கொடி தூக்க வேண்டாம். ஒரு போன் போட்டாலே போதும். ஆனால், திமுக எம்.எல்.ஏக்கள் யாரும் போன் போடுவது கிடையாது. நேரடியாக தங்கள் கட்சி எம்.எல்.ஏவான அவரையே பார்த்துச் சொல்கிறார்கள்.

கொங்கு அமைச்சரின் காரில் ஏறி கோட்டைக்குப் போகும் அந்த திமுக எம்.எல்.ஏ தனது சக திமுக எம்.எல்.ஏக்களின் பிரச்சினைகளை உடனடியாக முதல்வர் தரப்புக்குக் கொண்டு செல்கிறார். இந்த விஷயங்கள் உடனடியாக முதல்வரின் செயலாளர்களில் ஒருவருக்கு அனுப்பப்படுகிறது. அதன்பின் சம்பந்தப்பட்ட துறைகளுக்குக் கோட்டையில் இருந்து அறிவுறுத்தல்கள் செல்கின்றன. சில நாள்களில் சம்பந்தப்பட்ட திமுக எம்.எல்.ஏக்களின் பிரச்சினை தீர்க்கப்படுகிறது.

‘திமுக எம்.எல்.ஏக்களில் யார் யார் முதன்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார்கள்? கடந்த தேர்தலில் அவர்கள் தேர்தல் செலவுக்கு என்ன செய்தார்கள்? தேர்தலுக்கு வாங்கிய கடனை எல்லாம் அடைத்துவிட்டார்களா?’ என்பன பற்றிய விவரங்கள் எல்லாம் முதல்வரின் கையில் அறிக்கையாகப் போய் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. அதன்படி செல்வச் செழிப்பாக இருக்கும் திமுக எம்.எல்.ஏக்களை அணுகினால் சுவரில் மோதிய பந்துபோல் திரும்ப வர வேண்டும் என்று ஆளும்தரப்புக்குத் தெரியும். ஆனால், எந்த மீனுக்கு எந்தப் புழுவை தூண்டிலில் கட்ட வேண்டும் என்பதை எடப்பாடியைச் சுற்றியிருப்பவர்கள் தெளிவாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஐந்து வருட காலம் அனைவரும் நிர்வாகத்தின் பலனை அனுபவிக்க வேண்டும் என்பதே இவர்களைப் பிணைக்கும் ஒற்றை மந்திரம்.

திமுக எம்.எல்.ஏக்களுக்கும் ஆளும்தரப்புக்கும் பாலமாக இருக்கக்கூடிய அந்த திமுக எம்.எல்.ஏவைச் சமீபத்தில் ஒரு நிகழ்வின் போது முதல்வர் சந்தித்திருக்கிறார். அப்போது முதல்வர் சொன்ன வார்த்தைகள் கோட்டை வட்டாரத்தில் இன்னும் எதிரொலிக்கின்றன.

அது என்ன தெரியுமா?

‘…. …. நீ மட்டும் இப்ப என் பக்கம் இருந்திருந்தீன்னா நான் எல்லாரையும் சமாளிச்சுடுவேன்… இப்படி அங்கே போயிட்டியே?’ என்று வருந்தியிருக்கிறார் முதல்வர்.

அதற்கு அந்த திமுக எம்.எல்.ஏ, ‘அண்ணே விடுங்கண்ணே… இப்படியெல்லாம் நடக்கும்னா நமக்குத் தெரியும்? அது நான் அப்போ எடுத்த முடிவு. அதையெல்லாம் இப்ப மாத்த முடியாதுண்ணே. செயல் தலைவர் என் மேல ரொம்ப நம்பிக்கை வெச்சிருக்காரு. அதை காப்பாத்த வேண்டியதுதான் என்னோட முதல் வேலை. நாளைக்கே தளபதி முதல்வராயிட்டாருன்னாலும் நீங்க இன்னிக்கு பண்ற உதவிய உங்க எம்.எல்.ஏக்களுக்கு நாங்க நாளைக்கு பண்ணமாட்டாமோ என்ன?’ என்றாராம் அந்த எம்.எல்.ஏ.

இதுதான் இன்றைய திமுகவுக்கும் அதிமுகவுக்குமான உறவு!

ஒருவேளை எல்லாரும் எதிர்பார்க்கும் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு வந்துவிட்டால்? அதற்கான ஏற்பாடுகளையும் எப்போதோ தொடங்கிவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

(லீக் ஆகும்)Edappadi Leaks Mini Series 9

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 1

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 2

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 3

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 4

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 5

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 6

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 7

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 8

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *