டிஜிட்டல் திண்ணை: அவசரப்படுத்திய அண்ணாமலை… ஆத்திரப்பட்ட நிர்வாகிகள்… ஒற்றைத் தொகுதியில் சுயேச்சை ஓபிஎஸ்- சூடான பின்னணி!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பிரஸ்மீட் வீடியோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது.

அதை பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது. “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதாக மார்ச் 21ஆம் தேதி இரவு அறிவித்திருக்கிறார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிஜேபிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வந்தார் ஓ பன்னீர்செல்வம். தர்மயுத்தம் தொடங்கியதும் பாஜக சொல்லித் தான் என்றும் அது முடிந்ததும் பாஜகவின் வற்புறுத்தலால் தான் என்றும் அவர் வெளிப்படையாகவே அறிவித்தார். கடந்த வருடம் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட பாஜக சொல்லித்தான் போட்டியிடவில்லை என்று அறிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக அதிகாரப்பூர்வமாக விலகிய பிறகு பன்னீர்செல்வம், பாஜகவோடு மேலும் நெருங்கினார். இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்க நெருங்க என்னோடு பிஜேபி தலைவர்கள் இரண்டு நாளைக்கு ஒருமுறை பேசுகிறார்கள், தினமும் பேசுகிறார்கள், நாங்கள் பாஜக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்றெல்லாம் தொடர்ந்து சொல்லி வந்தார்.

மார்ச் 20 ஆம் தேதி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சென்றார் ஓபிஎஸ்.

அங்கே அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்சிடம், ‘ டிடிவி தினகரன் தனியா கட்சி நடத்துகிறார். அவருக்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் கொடுத்திருக்காங்க. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் பதிவு செய்யப்பட்ட தனிக் கட்சி. அதனால அவங்களும் சைக்கிள் சின்னம் கேட்டிருக்காங்க. இந்த நிலையில் உங்களுக்கு இப்போது எந்த கட்சியும் இல்லை, அதனால உங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்குறோம். அதுவும் தாமரை சின்னத்திலேயே நிற்க வேண்டும்’ என்று சொல்ல ஓபிஎஸ் அதிர்ச்சி அடைந்தார்.

நான் எங்கள் நிர்வாகிகள் இடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்து விட்டார்.
அதன் பிறகு இன்று காலை நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார் ஓபிஎஸ். அதில் பாஜக சொன்ன இந்த நிபந்தனை பற்றி கூற பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

‘நாம் ஆரம்பத்தில் இருந்தே பாஜகவை தீவிரமாக ஆதரித்து வந்திருக்கிறோம். இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுவும் தொடங்கிவிட்டது. இப்போது ஒரே ஒரு தொகுதி அதுவும் தாமரை சின்னம் என்றால் இதைவிட நம்மை எடப்பாடியால் கூட அவமானப்படுத்த முடியாது. எனவே இந்த முறை நாம் போட்டியிட வேண்டாம். ஒதுங்கிக் கொள்ளலாம்’ என்று கூறியுள்ளனர்.

ஆனால் பன்னீர்செல்வமோ, ‘ நாம் இரட்டை இலையை மீட்கும் பயணத்தில் ஈடுபட்டு இருக்கிறோம். பாஜக மேலிட ஆதரவு இருந்தால்தான் அது முடியும். வருகிற எம்பி தேர்தலில் எடப்பாடி தலைமையிலான அதிமுக படுதோல்வி அடையும். அதன் பிறகு இரட்டை இலை நமக்கு கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே இப்போது பாஜகவை நாம் விலக்கி வைக்க வேண்டாம். தாமரை சின்னத்தில் போட்டியிட நம்மால் இயலாது. அதனால் தேர்தல் ஆணையம் ஒதுக்குகிற சுயேச்சை சின்னத்தில் போட்டியிடலாம்’ என்று கூறியிருக்கிறார்.

’ஒரே ஒரு தொகுதி அதுவும் ராமநாதபுரம் தொகுதி தான் தருவதாக அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்’என்று ஓபிஎஸ் கூற அங்கே போட்டியிட ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் யாரும் முன் வரவில்லை.

அதனால் மீண்டும் தனக்கு நெருக்கமான மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்தார் ஓபிஎஸ். அவர்களும் வருகிற தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளனர். இதேநேரம் அண்ணாமலை தரப்பில் இருந்து தொடர்ந்து ஓபிஎஸ் சிடம் அவசரப்படுத்தியிருக்கிறார்கள்.

அதனால், நிர்வாகிகளின் எதிர்ப்பையும் மீறி மார்ச் 21ஆம் தேதி இரவு 9 மணிக்கு பத்திரிகையாளர்களை கூட்டி ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக தானே நிற்பதாக ஓபிஎஸ் அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பை அடுத்து அவரிடம் இப்போது இருக்கும் சிலரும் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கி இருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கெஜ்ரிவால் கைது: உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அவசர வழக்கு!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ்: எந்த தொகுதி?

+1
0
+1
8
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *