மோடி படம் இல்லாத தேர்தல் அறிக்கை…கையில் வாங்க மறுத்த பாஜக நிர்வாகி…நாயுடு-பவன் கல்யாண் வெளியிட்ட பின்னணி என்ன?

அரசியல்

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் இணைந்து வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடியின் படமோ, ஆந்திரவைச் சேர்ந்த பாஜக தலைவர்களின் படமோ இல்லாதது சர்ச்சையாக மாறியிருக்கிறது.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி மற்றும் பாஜக ஆகியவை கூட்டணியாக இணைந்து நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கின்றன.

இந்நிலையில் அந்த கூட்டணியின் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையின் அட்டையில் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோரின் படங்கள் இருக்கின்றன. ஆனால் பாஜகவைச் சேர்ந்தவர்களின் படங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

மேலும் அந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டின்போது மேடையில் பாஜக சார்பில் ஆந்திர பாஜக தேர்தல் கமிட்டியின் இணை ஒருங்கிணைப்பாளர் சைலேந்திரநாத் சிங் இருந்தார். தேர்தல் அறிக்கையை வெளியிட்டு புகைப்படம் எடுப்பதற்காக அறிக்கையின் காப்பியை சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் இருவரும் கையில் ஏந்தி நின்று கொண்டிருந்தனர்.

அப்போது பாஜக நிர்வாகியான சைலேந்திரநாத் சிங்கிடமும் தேர்தல் அறிக்கையின் காப்பியைக் கொடுக்கச் சென்றனர் தெலுங்கு தேசம் நிர்வாகிகள். ஆனால் அவர் அதனை ஏந்திப் பிடிக்க மறுத்து, வேண்டாம் என்று சொல்லிவிட்டார். மீண்டும் மீண்டும் நிர்வாகிகள் அவரிடம் கொடுக்க முயற்சித்தபோது அவர் கையை உயர்த்தி வேண்டாம் என்று கண்டிப்பாக மறுத்து விட்டார்.

 

மேலும் பாஜக மாநிலத் தலைவர் புரந்தேஸ்வரி உள்ளிட்ட வேறு எந்த பாஜக தலைவரும் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டணியின் தேர்தல் அறிக்கை என்று குறிப்பிட்டிருந்தும் பாஜக தலைவர்கள் யாரும் பெரிதாக அங்கு இல்லாததும், அறிக்கையில் பாஜக தலைவர்களின் புகைப்படங்கள் இல்லாததும், பாஜக நிர்வாகி அறிக்கையை கையில் வாங்கக் கூட மறுத்ததும் பல கேள்விகளுக்கு உள்ளாகியிருக்கின்றன.

முஸ்லீம்கள் விவகாரம் காரணமா?

முஸ்லீம்கள் குறித்த விவகாரத்தில் பாஜக மற்றும் சந்திரபாபு நாயுடு இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால் பாஜக இந்த தேர்தல் அறிக்கையில் இணைய மறுத்துவிட்டதா என்று ஆந்திராவில் பேச்சுகள் அடிபட ஆரம்பித்துள்ளன.

மோடி பல மாநிலங்களில் பேசும்போது, முஸ்லீம் இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று பேசி வரும் நிலையில், அவருடன் கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் முஸ்லீம்களின் 4% இட ஒதுக்கீட்டை பாதுகாப்போம் என்று பேசியது பல விவாதங்களுக்கு உள்ளானது.

இந்த நிலையில் இப்போது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் முஸ்லீம்களின் ஹஜ் பயணத்திற்காக 1 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும் என்றும், கிறித்தவர்கள் ஜெருசலேம் புனித யாத்திரை செல்வதற்கு பண உதவி கொடுக்கப்படும் என்றும் உறுதிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தல் அறிக்கையில் பாஜக இணையாததற்கு இவை காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

சந்திரபாபு நாயுடு கொடுத்த விளக்கம்

தேர்தல் அறிக்கையில் பாஜக இடம்பெறாதது குறித்துப் பேசிய சந்திரபாபு நாயுடு, “தேசிய ஜனநாயகக் கூட்டணி தேசிய அளவிலான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மாநில அளவிலான எந்த தேர்தல் அறிக்கைகளிலும் அவர்கள் தன்னை இணைத்துக் கொள்வதில்லை. இந்த தேர்தல் அறிக்கைக்கு பாஜக முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.

பாஜக சார்பாக சைலேந்திரநாத் சிங் பேசும்போது, ”நான் இங்கு வந்திருப்பதே இந்த அறிக்கைக்கு ஆதரவளிப்பதாகத் தான் அர்த்தம். நாங்கள் தேசிய கட்சி நாங்கள் தேசிய அளவிலான அறிக்கையை வெளியிட்டோம். அப்போது எங்களுடன் எந்த மாநில கட்சிகளும் இல்லை. இங்கு தெலுங்கு தேசம்-ஜனசேனா அவர்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். நான் இங்கு அதை ஆதரித்து அமர்ந்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

ஆனாலும் இந்த பதில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. தேர்தல் அறிக்கையை கையில் கூட வாங்காத போது, அதில் உள்ள அம்சங்களை நிறைவேற்றுவதற்கு பாஜக எப்படி ஒத்துழைப்பு வழங்கும் என்ற கேள்வி ஆந்திர அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

டெல்லியிலிருந்து வந்த போன்…ஜெகன்மோகன் சொன்ன தகவல்

இதனை பெரிய விவாதமாக எழுப்பியுள்ள ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியிலிருந்து ஒரு போன் வந்ததற்குப் பிறகு தான் சந்திரபாபு நாயுடு-பவன் கல்யாண் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலிருந்து மோடியின் படம் நீக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். ”இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பாக பாஜக தலைமையகத்திலிருந்து சந்திரபாபு நாயுடுவிற்கு ஒரு கால் வந்தது. பிரதமரின் படம் அந்த  அறிக்கையில் இருப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்று சொன்ன பிறகு அந்த படம் அவசரமாக நீக்கப்பட்டது” என்று ஜெகன்மோகன் ரெட்டி சொன்னதுடன், இந்த சம்பவம் எதைக் காட்டுகிறதென்றால், சந்திரபாபு நாயுடுவின் உறுதிமொழிகள் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்த முடியாதவை என்பதையே காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்தல் அறிக்கை விவகாரம் ஆந்திராவில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

1983 இல் ராஜீவுடன் அமேதியில் நுழைந்து… இன்று காங்கிரஸ் வேட்பாளர்: யார் இந்த கிஷோரி லால் ஷர்மா?

ஹேமந்த் சோரன் மனு தள்ளுபடி!

பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய ஜெர்மனி செல்லும் எஸ்.ஐ.டி!

+1
0
+1
1
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *