கொல்லம் விரைவு ரயிலில் சென்ற 7 மாத கர்ப்பிணி பெண் நிலைத்தடுமாறி விழுந்ததில் உயிரிழந்தார். அபாய சங்கிலி சரியாக வேலை செய்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்காசி அருகே உள்ள மேல்நிலைய நல்லூர் பகுதியைச் சேர்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதம் ஆன நிலையில், கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில், வளைகாப்பு நடத்துவதற்காக கஸ்தூரி, அவர்களது உறவினர்களுடன் நேற்று (மே 2) இரவு சென்னை – கொல்லம் விரைவு ரயிலில் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
இந்த ரயில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தை கடந்தபோது கஸ்தூரிக்கு திடீரென வாந்தி வந்ததால் ரயிலின் படிக்கட்டு பகுதிக்கு அருகில் வாந்தி எடுக்க சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறிய அவர் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
கஸ்தூரி கீழே விழுந்ததை கண்டு அலறிய உறவினர்கள் S9 பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். ஆனால், அது செயல்படவில்லை. தொடர்ந்து அருகில் இருந்த S8 பெட்டியின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முயற்சி செய்துள்ளனர்.
ஆனால், அதுவும் செயல்படாததால், தொடர்ந்து அடுத்தடுத்த பெட்டிகளில் முயற்சித்த பின்னர், 5 கிலோ மீட்டர் தள்ளி பூவனூர் என்ற கிராமத்தில் ரயில் நின்றுள்ளது. அங்கு உறவினர்கள் கஸ்தூரியை சில கிலோ மீட்டர் தூரம் வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, அடுத்த ரயில் நிறுத்தமான விருத்தாசலம் நிலைய ரயில்வே காவல்துறையினரிடம் கஸ்தூரியை மீட்டுத் தருமாறு அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து கஸ்தூரியின் உறவினர் ஒருவர் கூறியதாவது, “வாந்தி எடுப்பதற்காக சென்ற கஸ்தூரி தடுமாறி கீழே விழுந்ததும் அந்த கம்பாட்மெண்ட்டில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்தோம். அது செயல்படவில்லை. நாங்கள் மட்டுமல்ல, எங்களுடன் ரயிலில் பயணித்த மற்றவர்களும் சங்கிலியை பிடித்து இழுத்தனர். ஆனாலும் அது செயல்படவில்லை.
தொடர்ந்து அடுத்தடுத்த பெட்டிகளில் உள்ள அபாய சங்கிலிகளையும் பிடித்து இழுத்தோம். எதுவும் செயல்படவில்லை. பின்னர் டிக்கெட் பரிசோதகரை வரவழைத்து முயன்றோம்.
கஸ்தூரி கீழே விழுந்ததும் நாங்கள் சென்றிருந்தால் தாய், சேய் இருவரையும் காப்பாற்றி இருக்கலாம். அவளுக்கு கை, கால் என எந்த இடத்திலும் காயம் எதுவும் இல்லை. தலையில் தான் காயம் ஏற்பட்டு இருந்தது. அபாய சங்கிலியை நாங்கள் பிடித்து இழுத்த 5 நிமிடத்தில் ரயில் நின்றிருந்தால், கஸ்தூரியை காப்பாற்றி இருக்கலாம்.
விருத்தாசலம் ரயில் நிலைய ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில் அவர்கள் எங்களுக்கு முன்பாக அங்கு சென்றனர். அவர்களுக்கு பின் நாங்கள் அங்கு சென்றோம்.
நாங்கள் அங்கு சென்று கஸ்தூரியின் உடலில் கை வைத்து பார்த்தபோது கருவில் இருந்த உயிர் துடித்தது. அதை என்னால் உணர முடிந்தது. ஆனால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
இரு உயிர்களும் பலியானதற்கு முக்கிய காரணம் அந்த அபாய சங்கிலி செயல்படாதது தான். அதனை இழுத்த 5 நிமிடத்தில் நாங்கள் கஸ்தூரி இருந்த இடத்திற்கு சென்றிருந்தால் நிச்சயமாக அவளை எப்படியாவது காப்பாற்றி இருப்போம். இப்படி இரு உயிர்களை பறிகொடுத்து விட்டோம்” என கண்ணீருடன் உருக்கமாக தெரிவித்தார்.
கஸ்தூரியுடன் உடனிருந்த அவரது உறவினர்கள் அனைவரும் தெரிவிப்பது, “அபாய சங்கிலி ஒழுங்காக செயல்பட்டு இருந்தால் கண்டிப்பாக இருவரையும் முடிந்தவரை காப்பாற்றி இருக்கலாம்” என்பது தான்.
தொடர்ந்து, கஸ்தூரியின் உடலை கைப்பற்றிய ரயில்வே காவல்துறையினர் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர், கஸ்தூரியின் உடல் தற்போது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், கஸ்தூரியின் வயிற்றில் இருந்தது ஆண் குழந்தை எனவும், அதன் உடலும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தெற்கு ரயில்வே ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. கஸ்தூரி உயிரிழந்த இடம் திருச்சி ரயில்வே கோட்டத்திற்குள் வருவதால் திருச்சி கோட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து, கஸ்தூரிக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆனதால், அவரது இறப்பு குறித்து விசாரிக்க கோட்டாசியருக்கு விருத்தாசலம் ரயில்வே காவல்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர். இதனடிப்படையில் கஸ்தூரியின் உறவினர்களிடம் திருக்கோவிலூர் கோட்டாச்சியர் கண்ணன் விசாரணை நடத்த இருக்கிறார்.
இதுகுறித்து, கடலூர் டிஎஸ்பி பேசியதாவது, “கர்ப்பிணி பெண் உயிரிழப்பு என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று. ரயில்வே காவல்துறையினரால் 24 மணி நேரமும் ரயிலில் பாதுகாப்பாக பயணம் செய்வது குறித்து விழிப்புணர்வு செய்யப்படுகிறது.
ஒரு விரைவு ரயில் 100-130 என்ற வேகத்தில் செல்லக்கூடியது. அப்படி இருக்கும்போது படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வது என்பது மிகவும் ஆபத்தானது.
அபாய சங்கிலியை இழுப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளது. அதை முறையாக கையாண்டிருந்தால் கண்டிப்பாக ரயில் நின்றிருக்க வாய்ப்புள்ளது. இருந்தாலும், கர்ப்பிணி உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்த பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ பாஸ் தேவையில்லை :உதகை ஆர்டிஓ அறிவிப்பு!