நாட்டையே உலுக்கிய ரோகித் வெமுலா வழக்கை முடித்துவைப்பதாக தெலங்கானா போலீஸ் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ரோஹித் வெமுலா பட்டியல் சமூக இளைஞர் ஆவார். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி படித்துக் கொண்டிருந்த இவர், அம்பேத்கர் மாணவர் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டு வந்தார்.
2016ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி, பல்கலைகழக வளாகத்திலேயே தற்கொலை செய்துகொண்டார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த தெலங்கானா காவல்துறை, தற்போது வழக்கை முடித்துவைப்பதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
மே 3ஆம் தேதி தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த அறிக்கை புதிய சர்ச்சைகளையும், விவாதத்தையும் எழுப்பியுள்ளது.
“ரோஹித் வெமுலா உண்மையிலேயே பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் அல்ல, அவருடைய உண்மையான சாதி அடையாளம் வெளியே தெரிந்துவிடும் என்ற பயத்தில்தான் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
உண்மையான ஆதாரங்களைக் கொடுக்காமல் குடும்பத்தினர் போலியான சாதிச் சான்றிதழை பெற்றுள்ளனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலா ‘மாலா’ என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் வத்தேரா என்ற ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் வீட்டு வேலை செய்து வளர்ந்துள்ளார்.
மணிக்குமார் என்ற வத்தேரா பிரிவைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், ராதிகா பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தவுடன் மணிக்குமார் அவரை கைவிட்டுவிட்டார்.
ரோஹித் வெமுலாவுக்கு ‘மாலா’ பிரிவைச் சேர்ந்தவர் என ராதிகா சாதிச்சான்றிதழ் பெற்றுள்ளார். ரோஹித் வெமுலாவின் சாதியை உறுதிசெய்ய டி.என்.ஏ. சோதனைக்கு தயாரா என விசாரணை அதிகாரி ராதிகாவிடம் கேட்டபோது, அவர் அமைதியாகவே இருந்தார்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, “ரோஹித் வெமுலா சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லை. உலக விவகாரங்களிலும் அவருக்கு அதிருப்திகள் இருந்தன. படிப்பை விட மாணவர் அரசியல் விவகாரங்களில் அதிக ஆர்வம் காட்டினார்.
பல்கலைக்கழகத்தின் முடிவால் அவர் கோபமடைந்திருந்தால், நிச்சயமாக அவர் அதைக் குறிப்பிட்டே எழுதியிருப்பார். ஆனால், அவ்வாறு எதையும் ரோஹித் வெமுலா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டவில்லை. அந்த நேரத்தில் பல்கலைக்கழகத்தில் நிலவிய சூழல் ரோஹித்தின் மரணத்திற்குக் காரணம் அல்ல என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.” என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதால், வழக்கில் சம்மந்தப்பட்ட செகந்திராபாத் முன்னாள் பாஜக எம்.பி. பண்டாரு தத்தாத்ரேயா, எம்.எல்.ஏ. என்.ராமச்சந்திர ராவ், பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பாராவ், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஏ.பி.வி.பி. நிர்வாகிகள் உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்து 4 மாதங்களே ஆகும் நிலையில் அம்மாநில போலீஸ் இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
பட்டியல், பழங்குடி, சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி உரிமைகளைப் பாதுகாத்திட “ரோஹித் வெமுலா சட்டம்” இயற்றப்போவதாக காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அளித்துள்ளது.
பாரத் ஜோடோ யாத்திரையின்போது கூட, ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலாவை காங்கிரஸில் இணையுமாறு அழைப்பு விடுத்தார் ராகுல் காந்தி.
காங்கிரஸ் ஆளும் தெலுங்கானாவில் மே 13ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த 10 நாள் இடைவெளியில் அளிக்கப்பட்டிருக்கும் இவ்வறிக்கை அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது – எதற்கு தெரியுமா?
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க பரிசீலனை : உச்ச நீதிமன்றம்!