தலைமையின் விசாரணை பிடியில் நெல்லை மேயர் சரவணன்

அரசியல்

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா செய்தது தொடர்பாக வெளியான தகவலில் உண்மை இல்லை என மேயர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

நெல்லை மாநகராட்சி மேயராக சரவணன் பொறுப்பு வகித்து வருகிறார் . இவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக இன்று (ஆகஸ்ட் 31) திடீரென தகவல் வெளியானது.

கடந்த மாமன்ற கூட்டத்தின் போது திமுகவை சேர்ந்த 45 கவுன்சிலர்களை மேயருக்கு எதிராக கடிதம் எழுதி கையெழுத்திட்டு அதனை தலைமைக்கு அனுப்பினார்கள்.

அதிலிருந்து நெல்லை மாநகராட்சியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. குறிப்பாக நெல்லை மாநகராட்சியில் கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்த நிலையில் அவர் ராஜினாமா செய்ததாக இன்று தகவல் வெளியானது.

குறிப்பாக சமூக வலைதளங்களிலும், காட்சி ஊடகங்களிலும் வெளியான இச்செய்தி குறித்து மேயர் சரவணன் நம்மிடம் கூறும் பொழுது, “நான் மேயர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. இது முற்றிலும் வதந்தி . மேலும் நான் ராஜினாமா செய்து தலைமைக்கு கடிதம் எழுதியது போன்ற செய்திகள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வந்து கொண்டிருக்கின்றன அது முற்றிலும் தவறு” என்று குறிப்பிட்டார்.

தொடர்ச்சியாக மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்க காரணம் என்ன ?

நெல்லை மத்திய மாவட்ட செயலாளராக அப்துல் வகாப் இருந்தபோது அவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய திமுக வர்த்தக அணி மாநில இணைச் செயலாளர் மாலை ராஜா மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் இரு வேறு அணிகளாக செயல்பட்டு வந்தனர்.

இதுபோன்ற சூழலில் தான் அப்துல் வகாப் ஆதரவால் தற்போதைய மேயர் சரவணன் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு மாநகராட்சி கவுன்சிலராக வெற்றி பெற்றார். தொடர்ந்து அப்துல் வகாப் தனக்கு வேண்டிய ஒருவரை மேயராக்க திட்டமிட்ட நிலையில் கட்சி தலைமை திடீரென சரவணனை மேயராக அறிவித்தது.

இதை சற்றும் எதிர்பாராத அப்துல்வகாப் வேறு வழியின்றி சரவணனை ஆதரித்தார். ஆனாலும் மேயரான பிறகு தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும், அரசு திட்ட பணிகளை முடிவு செய்வது உட்பட பல்வேறு விஷயங்களில் நான் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் என மேயர் சரவணனுக்கு அப்துல் வகாப் பல நிபந்தனைகளை விதித்தாக கூறப்பட்டது.

நாளுக்கு நாள் அப்துல் வகாப்பின் நெருக்கடி அதிகரித்ததை தொடர்ந்து மேயர் சரவணன் அப்துல் வகாப்பின் எதிரணியான மாலைராஜா அணியில் இணைந்தார்.

மாமன்ற கூட்டங்களில் தொடர்ந்த தர்ணா போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த அப்துல் வகாப்பின் ஆதரவு கவுன்சிலர்கள் மாநகராட்சி மன்ற கூட்டங்களில் தொடர்ச்சியாக மேயருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

குறிப்பாக அரசு ஒப்பந்ததாரர்களை மேயர் சரவணன் தனது அறைக்குள் அழைத்து கமிஷன் கேட்பதாக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

மேலும் மேயர் சரவணன் கமிஷன் கேட்பது தொடர்பாக 16-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ் ஒரு காணொளி ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.

இதன் மூலம் திமுக உள்கட்சி பூசல் வெட்ட வெளிச்சமானதை தொடர்ந்து அப்துல் வகாப்பை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து திமுக தலைமை அதிரடியாக நீக்கியது.

அவருக்கு பதில் முன்னாள் அமைச்சரும் மாலை ராஜா அணியைச் சேர்ந்தவருமான மைதீன்கானை மாவட்ட பொறுப்பாளராக திமுக நியமித்தது. இருப்பினும் தொடர்ச்சியாக அப்துல் வகாப்பை ஆதரிக்கும் துணை மேயர் ராஜூ உள்பட திமுக கவுன்சிலர்கள் மேயருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். மன்ற கூட்டங்களில் மேயர் வரும் போது அவரை அவமதிப்பது, மன்ற கூட்டத்தை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் ஈடுபட்டு வந்தனர்.

அதன் பின் சமீபத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மேயர் சரவணின் உரையை புறக்கணித்து திமுக கவுன்சிலர்கள் மேடையில் இருந்து கூண்டோடு வெளியேறினர். திமுக தலைமைக்கு கடிதம் எழுதிய 45 கவுன்சிலர்கள்
தொடர்ச்சியாக மாமன்ற உறுப்பினர்களுக்கும் மேயருக்கும் இடையே ஏற்பட்ட வார்த்தை போர், தர்ணா போராட்டம், போன்ற காரணத்தினால் அடுத்த மாமன்ற கூட்டத்தில் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப் போவதாக கூறி 45 திமுக கவுன்சிலர்களே திமுக தலைமைக்கு கடிதம் எழுதியது மேலும் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைமையின் விசாரணை பிடியில் மேயர் சரவணன்

இதன் தொடர்ச்சியாக மேயர் சரவணன் மீது தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மேலும் 45 கவுன்சிலர்கள் கடிதம் எழுதியது தொடர்பாகவும் திமுக தலைமையிலிருந்து மேயர் சரவணனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த சூழலில் இன்று நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பதற்காக நெல்லை மேயர் சரவணன் சென்னை சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதன் எதிரொலியாக சரவணன் விளக்கம் அளிக்க சென்ற இடத்தில் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார் என்று சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும், செய்திகள் காட்டுத் தீ போல் பரவின.

அதனை தொடர்ந்து மேயர் தரப்பில் நாம் தொடர்பு கொண்டு விசாரித்த போது, “மேயர் ராஜினாமா கடிதம் எதுவும் திமுக தலைமையில் சமர்ப்பிக்கவில்லை” என்று தெரிவித்தார்கள்.

நெல்லை சரவணன்

இந்தியாவில் பல லட்சம் வீடியோக்கள் நீக்கம்: யூடியூப் அதிரடி!

பிரசவத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களை தவிர்க்கும் பெண்கள்: ஆய்வு சொல்வது என்ன?

+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *