நாட்டிலேயே அதிக எம்பிக்களை அதாவது 80 எம்பிக்களை பெற்றுள்ள மாநிலம் உத்திரப்பிரதேசம். இங்கே காங்கிரஸின் கோட்டையாக கருதப்படும் நேரு குடும்பத்தினர் செல்வாக்கு பெற்ற அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான இன்று (மே 3) வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி.
அதன்படி ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கிஷோரி லால் ஷர்மா போட்டியிடுகிறார்.
இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் போட்டியிட்டு வென்ற ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிட, கடந்த 2019 தேர்தலில் அமேதி தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த ராகுலுக்கு பதிலாக இம்முறை கிஷோரி லால் ஷர்மா வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால் கிஷோர் லால் ஷர்மா சந்திக்கும் முதல் தேர்தல் இதுதான்!
அமேதி தொகுதியில் ராகுலுக்கு பதிலாக களமிறங்கும் இந்த கிஷோரி லால் ஷர்மா யார்?
கிஷோரி லால் ஷர்மாவின் சொந்த ஊர் பஞ்சாப் மாநிலம் லூதியானா. 1983 இல் முதன் முதலாக இவருக்கு ராஜீவ் காந்தியின் அறிமுகம் ஏற்பட்டது. இளம் காங்கிரஸ் ஊழியராக அறிமுகமான கிஷோரி சீக்கிரமே ராஜீவ் காந்தியின் மிக நெருக்கமான நண்பர்கள் பட்டியலில் சேர்ந்துவிட்டார்.
ராஜீவோடு ஏற்பட்ட நெருக்கம் அவரது குடும்பத்தின் மீதும் கிஷோரிக்கு தொடர்ந்தது. சோனியா காந்தி, அப்போது குழந்தைகளாக இருந்த ராகுல், பிரியங்கா ஆகியோரும் கிஷோரிலால் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் காட்டினார்கள்.
1980 ஆம் ஆண்டு அமேதி தொகுதியின் எம்பியாக வெற்றி பெற்ற ராஜீவின் சகோதரர் சஞ்சய் காந்தி 1981 இல் விமான விபத்தில் இறந்தார். அதையடுத்து 1981 அமேதி தொகுதி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் ராஜீவ் காந்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.
1983 ஆம் ஆண்டு தனது நண்பர் கிஷோரி லால் ஷர்மாவை முதன் முதலில் அமேதிக்கு அழைத்துச் சென்றார் ராஜீவ். அப்போது முதல் ராஜீவின் அமேதி தொகுதிக்கு ஒரு நிழல் எம்பியாகவே செயல்பட்டு வந்தார் கிஷோரி லால் ஷர்மா.
தனக்கு பணிச் சுமைகள் அதிகம் இருந்ததால், தனது நண்பன் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்து தனது அமேதி தொகுதியின் பிரச்சினைகளை கையாளும் பொறுப்பை கிஷோரி லாலிடம் கொடுத்திருந்தார் ராஜீவ்.
1991 இல் ராஜீவ் காந்தியின் திடீர் மறைவுக்குப் பிறகு, காந்தி குடும்பத்தின் மிக விசுவாசமான அங்கமாகவே மாறிப் போனார் கிஷோரி. ராஜீவ் மறைவுக்கு பின் அமேதியில் சதீஷ் ஷர்மா, 1999 ல் சோனியா எம்பியாக இருந்தபோதும் தொகுதியை கவனித்துக் கொண்டது கிஷோரி லால்தான்.
சோனியா 1999 இல் முதன் முறையாக அமேதி தொகுதியில் போட்டியிட வந்தபோது அவருக்கு தொகுதியை சுற்றிக் காட்டி தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டது கிஷோரி லால்.
அதேபோல 2004 இல் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டபோதும் ராஜீவுக்கும், சோனியாவுக்கும் என்ன பணிகளை மேற்கொண்டாரோ… அதை தலைமுறை தாண்டி ராகுலுக்கும் செய்தவர் கிஷோரி லால்தான்.
2004 முதல் சோனியா ரேபரேலி தொகுதிக்கு சென்றார். அமேதியில் ராகுல் நின்றார். அப்போதிலிருந்து ரேபரேலி, அமேதி ஆகிய இரு தொகுதிகளுக்கும் சோனியா- ராகுலின் பிரதிநிதியாக செயல்பட்டவர் கிஷோரி லால் ஷர்மா.
2019 இல் ராகுல் காந்தி அமேதியில் போட்டியிட்டுத் தோற்றபோது, கிஷோரி லால் ஷர்மாவை அமேதியை மட்டும் பார்க்கச் சொல்லிவிட்டு, ராகுல் தனது சொந்த டீமை அமேதியில் களமிறக்கினார். அதனால் கிஷோரி லால் ஷர்மா ரேபரேலி தொகுதி ஒருங்கிணைப்பை மட்டும்தான் 2019 இல் கவனித்தார். இதுவும் கூட 2019 இல் ராகுல் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது. இதனால் கிஷோரி மீதான ராகுலின் நம்பிக்கை மேலும் அதிகரித்தது.
சோனியா, ராகுல் குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்ற அடிப்படையில் கிஷோரி லால் ஷர்மா பீகாரின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் செயல்பாடுகளைத் தீர்மானிப்பவராகவும் இருந்தார்.
இந்த நிலையில்தான் இம்முறை ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிட முடிவெடுக்கப்பட்டதும், அமேதியில் யார் வேட்பாளர் என்ற கேள்வி எழுந்தது.
அப்போது பிரியங்கா பெயர் முதலில் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அமேதியை பற்றி 40 வருடங்கள் முற்று முழுதாக அறிந்திருக்கும் கிஷோரி லால் ஷர்மாவை வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸ் தலைமை.
அமேதி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் கிஷோரி லால் ஷர்மா,
“நான் அமேதிக்கு வந்தபோது, காந்தி குடும்பம் அவர்களின் இதயத்தில் என்றென்றும் எனக்கு ஒரு இடத்தைக் கொடுத்தது. இப்போது எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்கள். நான் உணர்ச்சிவசப்பட்டுள்ளேன். என் குடும்பக் கடனை அடைக்க முடியவில்லை.எனது குடும்பம், அமேதி, ரேபரேலி குடும்பம். சோனியா காந்தியின் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். ஸ்மிருதி இரானியை விட அமேதி பற்றி எனக்கு அதிகம் தெரியும்” என்றார்.
ஆனால் உபி பாஜகவினரோ, “ஷர்மா அமேதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது ஸ்மிருதி இரானிக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது. அவரது தேர்வில் இரண்டு செய்திகள் வெளிவந்ததாகத் தெரிகிறது – ஒன்று, ராகுல் காந்தி 2019 தோல்விக்குப் பிறகு அமேதியை விட்டு போய்விட்டார். இரண்டாவது, காந்தி குடும்பத்துக்கு சொந்தமான தொகுதிகள் என்று பல ஆண்டுகளாக நிறுவப்பட்ட ரேபரேலி, அமேதி இரு தொகுதிகளில் ஒன்று காந்தி குடும்பத்தால் கைவிடப்பட்டது. இது காங்கிரஸின் உ.பி. அரசியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும்” என்கிறார்கள்.
ஆனால் காங்கிரஸார், “அமேதியில் போட்டியிட்டு ஸ்மிருதி இரானிக்கு மீண்டும் ஸ்டார் வேட்பாளர் வாய்ப்பை அளிக்க ராகுல் விரும்பவில்லை. இம்முறை கிஷோரியை வைத்தே ஸ்மிருதி இரானியை ராகுல் தோற்கடிப்பார்” என்று கூறுகிறார்கள்.
40 ஆண்டு கால விசுவாசம் இப்போது 63 வயதான கிஷோரியை அமேதியின் வேட்பாளர் ஆக்கியுள்ளது. அவரை அமேதி மக்கள் எம்பி ஆக்குவார்களா என்பதை தேர்தல் முடிவு தீர்மானிக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
உதவாத அபாய சங்கிலி : ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 7 மாத கர்ப்பிணி பலி!
பிளஸ் 2 ரிசல்ட்: தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரிய பள்ளிக்கல்வித்துறை